Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பாவின் அழகிய நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், நான்காவது நாளாக எரிகின்றது. வங்கிகள் யாவும் (வெளிப்புறமாக) அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக்கிய, ஆடம்பர வர்த்தக நிலையங்கள் சாம்பலாக கிடக்கின்றன.

 

துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள் சில, இனந்தெரியாதவர்களால் சூறையாடப்பட்டுள்ளன. வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கைகளில் துப்பாக்கிகள் காணப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுகின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ஆசிரியர்களும் ஊர்வலமாக போகின்றனர். பல நகரங்களில் பொலிஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்படுள்ளன. நான்காவது நாளாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்துள்ளனர். மக்களிடம் இருந்து அதிகாரவர்க்கத்தை பாதுகாக்கும் பணியில், பொலிஸ் படை அதிக அக்கறை காட்டுகின்றது.



தெருக்களில் போலீசுடன் மோதுபவர்களின் வயது குறைந்து கொண்டே போகின்றது. ஆர்ப்பாட்டக்காரரில் அதிகளவில் பதின்ம வயதினர் காணப்படுவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அரசியல்மயப்படுத்தப்படாத விடலைப்பருவ சிறுவர்கள், கண்ணில் காணும் கடைகளையும், மோட்டார் வண்டிகளையும் கொளுத்துவதே போராட்டம் என்று பிழையாக புரிந்து கொள்கின்றனர். அப்படியான சம்பவங்களை ஊக்குவிப்பது போல, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது.

 

அரசாங்கமும் அதைக்காட்டி மக்களையும், போராட்டக்காரரையும் பிரித்து வைக்க முயற்சிக்கிறது. என்ன அதிசயம்! முதலாளித்துவத்தின் சின்னங்களான, வங்கிகளும், பெரிய வணிக நிலையங்களும் எரிக்கப்படுவதை, ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை, ஒரு சில இடதுசாரி வன்முறையாளரின் கலகமாக சித்தரித்த பி.பி.சி. செய்தியாளர், நான்கு நாட்களுக்குப் பிறகு தான், கிறீசில் வர்க்கப்போராட்டம் நடப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பொலிஸ் வன்முறைக்கு பலியான ஒரு சிறுவனின் கொலை, தேசம் முழுவதையும் கிளர்ந்து எழ வைக்கும், என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது தான். ஆனால் கிறீசில் பகை முரண்பாடுகளை கொண்ட இரண்டு வர்க்கங்கள் இருப்பது, இப்போது தான் மேற்கத்திய ஊடகவியலாளருக்கு தெரிய வந்திருக்கிறது! ஐரோப்பிய மக்கள், "வர்க்க பேதங்களை மறந்து, சகோதர பாசத்துடன் வாழ்கிறார்கள்", என்ற பரப்புரை இவ்வளவு விரைவில் அம்பலப்படும், என்று அந்த ஊடகவியலாளரைப் போலவே பலர் கனவிலும் நினைக்கவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி கிறீசையும் கடுமையாக பாதித்துள்ளது. வேலையற்றோர் பிரச்சினை, ஏழைகளின் தொகை அதிகரித்தல், கல்வி கற்பது பெரும் பணச்செலவாகி விட்டதால் ஏற்பட்ட மாணவரின் அதிருப்தி, போன்ற பல பிரச்சினைகள், கிறீசில் இருக்கின்றன என்ற உண்மை, பி.பி.சி. போன்ற ஊடகங்களுக்கு இப்போது தான் தெரிகின்றதாம்.

 

பெரும்பான்மை கிரேக்க மக்கள்,அரசாங்கத்தின் நவீனமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த கொள்கைகளால் வெறுப்படைந்து வருகின்றனர். அந்த அதிருப்தியின் வெளிப்பாடே, ஆர்ப்பாட்டக்காரருக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவும், அதனால் ஒதுங்கி நிற்கும் பொலிஸ் நடவடிக்கையும் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு சேவை செய்த அரசு நிறுவனங்களை, தனியார்மயமாக்கியதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த மக்கள் தான் பொங்கி எழுகிறார்கள். ஜனநாயகம், அமைதிவழி போராட்டம், என்று கூறி இன்றைய மக்கள் எழுச்சி அடக்கப்படுமா? அல்லது போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் புரட்சிகர மாற்றங்களை கொண்டுவருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.