Language Selection

சமர் - 4 : 1992
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது தேசத்தின் இரத்த ஆற்றிலிருந்து மறுபடி பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு என்ற குரல்கள் ஒலிக்கின்றன. இரத்தமும் சதையும், எலும்பும் விளைவாக்கி விட்ட, ஆயுதக் கலாச்சாரமே தேசியமாகி விட்ட ஒரு தேசத்தில் இன்னுமொரு நாடகம் ஒத்திகை பார்க்கப் படுகின்றது. மக்களுடைய கைகளில் எதுவும் இல்லை. நிராயுதபாணிகளாக, துப்பாக்கிக்குழலுக்கு முன்னால் பட்டினியோடு கிடக்கும் எமது தேசத்து மக்கள் த.ஈ.வி.பு. என்ற பாசிசக்கும்பலாலும், ஸ்ரீலங்கா இனவெறியர்களாலும் பந்தாடப்படுகிறார்கள்! சீரழிந்து சிதைந்து போன எமது தேசவிடுதலைப் போராட்டம் த.ஈ.வி.பு என்ற தனிநபர் ஆயுதகும்பலிடமிருந்து பறிக்கப்பட்டு மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். எமது சூழலுக்கு ஏற்ற சரியான தத்துவமொன்று, எமது சமூகத்தின் மீது செயல்படுத்த வேண்டும். ஒரு கட்சி அல்லது அரசு என்பவை மக்களின் கண்காணிப்பிலிருந்து அந்நியப்படும் பொழுது அது அதுவாக இருக்க முடியாது. மக்களின் கைகளிலிருந்து கட்சி அதிகாரத்தை பறித்துக்கொண்ட போது சோவியத் சிதறிப்போய் விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஓரு திட்டம் தேவை!

 

கடந்த காலம் முழுமையுமே ஆழமாக அலசி ஆராயப்பட வேண்டும். சரணடைவுகளுக்கும், விட்டுக்கொடுப்புகளுக்கும் அப்பால், பிழைப்புவாத அரசியலின் திரிபுகளுக்கு எதிரான போராட்டம் இன்றுவொரு தவிர்க்கமுடியாத முன்தேவையாக உள்ளது. இந்தத் தேவையை முன்னிறுத்தி வலியுறுத்துகின்றபொழுது அது பிழைப்புவாதிகளுக்கு எரிச்சலூட்டுவதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் இருக்கிறது. எமது போராட்டம் தொடங்கிய இடத்திலிருந்தே, மீண்டும் தொடங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலையில், எமக்கு முன்னுள்ள சமூகக் கடமை என்னவென்பதை ஒவ்வொரு தேசப்பற்றுள்ள சமூகவுணர்வுள்ள சக்திகளும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

 

தென்னாசியாவின் கொல்லைப்புறத்தில், சாவினுள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் அழுகுரல்களும், அவலங்களும் இன்று தேசத்தின் எல்லையையும் கடந்து விட்டன. மனிதத்தை நேசிக்கின்ற, உணர்வுள்ள எந்த மனிதனும், இது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது. இந்த வகையிலேயே, இந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக கலைவடிவங்களை நாம் காணமுடிகின்றது. ஜரோப்பாவில் வெளிவருகின்ற பொதுவான எல்லா தமிழ் சஞ்சிகைகளிலுமே, இதன் பிரதிபலிப்புக்களை உணர முடிகின்றது. இது தேவையானதே! இன்னுமிருக்கின்ற இந்த கலை, கலாச்சார வடிவங்களை, ஒரு ஆரோக்கியமான நிலைக்கு வளர்த்தெடுப்பதும், அதன் பரப்பை விரிவாக்குதலும் தேவையானதே! ஆனால் இது மட்டுமல்ல எமது பிரச்சனை! இதற்கு அப்பாலும் எமக்கு இருக்கின்ற அவசியங்கள் உணரப்பட்ட வேண்டும். ஒரு புரட்சிக்கான தத்துவமின்றி புரட்சிக்கட்சி இல்லை. ஒரு புரட்சிக்கட்சி இன்று இரண்டாம் பட்சமாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது! எமது தேசவிடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு தத்துவார்த்த வழிமுறை இருந்திருக்கவில்லை. எமது போராட்டத்தின் தோல்விக்கான காரணமிதுவென உணரப்பட்ட பிறகும் இன்று, மறுபடியும் மறுபடியும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டித்தீர்த்துக் கொண்டிருப்பது மட்டும் தான் போராட்டமல்ல என்பதே எமது நிலை.