Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அதனால்தான் நேரடியாக பதில் எழுதாது, மிகவும் தந்திரமாகப் பின்வருமாறு எழுதியிருக்கிறார். "பெரியகுளம் பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பிற்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான செல்வாக்கு ஏதும் இல்லையாம். அதற்காக அந்த வட்டாரத்தில் யாரும் கைது செய்யப்பட்டதாக செய்தியும் இல்லையாம். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து பரம இரகசியத்தை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! நான் மாவோயிஸ்ட் ஆதரவாளர்; என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள் என மார்பை காட்டிக் கொண்டு நிற்க மக்கள் என்ன மடையர்களா? இந்த எளிய உண்மைகூட இந்த "மாமேதை'களுக்குத் தெரியவில்லை!'' (பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி, பக்.14)


சொல்வதற்கு உண்மை இல்லாதபோது, என்னவெல்லாம் தகிடுதத்தங்கள் செய்து, நாகாசு வேலைகள் செய்து பொய்களை அலங்கரிக்க வேண்டும் என்பதை இந்த அறிவொளிகளிடமும் போராளிகளிடமும்தான் கற்றுக் கொள்ளவேண்டும். இதே தகிடுதத்த நாகாசு வேலை செய்து பெரியகுளத்தில் தமக்குள்ள மக்கள் ஆதரவு பற்றி முறுக்கி முறுக்கிப் பின்வருமாறு மாவோயிஸ்ட் கட்சி, பெரியகுளம் முருகமலை மீளாய்வு ஒன்றைத் தயாரித்திருக்கிறது.


"ஊத்தங்கரை சம்பவத்தைப் போலவே தற்போதும் பயிற்சி முகாம் நடத்தும் சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், ஏன் மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழுகின்றன என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. "ஒருவேளை மக்கள் அடித்தளம் நமக்கு பலவீனமாக இருப்பதால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமோ' என நினைப்பவர்களும் உண்டு. மக்கள் அடித்தளத்தைப் பற்றி நமக்கு இயங்கியல் ரீதியான கண்ணோட்டம் அவசியம். மக்கள் அடித்தளம் என்பது எப்போதும் ஒப்பீட்டு அளவிலானதாகும். ஒரு குறிப்பிட்ட சூழலின் தன்மைக்கேற்றவாறு இருக்கும். ஒரு கொடூரமான அடக்குமுறை நிலவும் போது நமக்கு இழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படும்போது மக்கள் அடித்தளம் பலவீனமாகவே இருக்கும் என்பதும் அதைப் போலவே புரட்சிகர இயக்கம் வெற்றிகள் ஈட்டி முன்னுக்குப் போகும் போது மக்கள் அடித்தளம் பலமடையும், விரிவடையும். ஒரு சட்டப்பூர்வமான வெளிப்படையான இயக்கம் நடைபெறும்போது இருக்கும் மக்கள் அடித்தளமும் ஒரு புரட்சிகர யுத்தம் நடத்தப்படும் போது இருக்கும் மக்கள் அடித்தளமும் ஒரே மாதிரியானவையல்ல...''
"அப்பகுதியில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகவோ வெளிப்படையாகவோ அல்லது தலைமறைவாகவோ நமது கண்ணோட்டப் பகுதியில் மக்களை அணிதிரட்டி நாம் இன்னும் எந்தப் போராட்டத்தையோ அல்லது பிரச்சார இயக்கத்தையோ செய்யவில்லை. மாறாக, ரகசியமாக ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவாளர்களையும் இளைஞர்களையும், கட்சிக் கருக்குழுக்களையும் அணிதிரட்டி வருகிறோம்.''


"அப்படியானால் இவ்வளவு பலவீனமான மக்கள் அடித்தளத்தை வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் துவங்குவதோ அல்லது பயிற்சி முகாம் நடத்துவதோ சரியானதா? என்ற கேள்வி எழலாம். நாம் ஏற்கெனவே நமது தவறுகளை பரிசீலித்தபடி மக்களடித்தளம் இல்லாது இருந்ததால் இந்த சம்பவம் ஏற்படவில்லை. மாறாக, நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் நமக்குத் தெரிந்த வழிமுறைகள் செய்யக்கூடிய வழிமுறைகள் கடைபிடிக்காததன் விளைவாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதைக் காணலாம். நாம் செய்த தவறுகளுக்கு அரசியல் சித்தாந்தக் காரணங்கள் உள்ளன என்பது வேறு. மக்கள் அடித்தளம் இல்லாததால் ஏற்பட்டது என்பது வேறு என்பதை நாம் அறிய வேண்டும்.''


பிரச்சினையின் அடிப்படைக் காரணமான மக்களடித்தளம் இல்லை என்பது காரணமில்லை, இதை ஏற்பாடு செய்த, இதற்கு பொறுப்பான தோழர்கள் ஒழுங்காக செய்யாததே காரணம் என்பதுதான் மாநிலக்குழுவின் மீளாய்வு முடிவு.


அரசியல் சித்தாந்த காரணங்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டு விட்டு தன்னெழுச்சி, தாராளவாதம், சட்டவாதம் ஆகிய போக்குகள்தான் சிக்கலுக்கு காரணம் என்று சொல்லி, இதை நடைமுறைப்படுத்திய தோழர்களைக் குற்றவாளியாக்க முயற்சிக்கிறது.


மேலும், "தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி நாம் நமக்குள்ள பலவீனமான மக்களடித்தளத்தை இன்னும் சரியாக பயன்படுத்தியிருப்போமானால் இச்சம்பவம் நடந்திருக்காது என்பதே எதார்த்தமாகும்'' என்று அடுத்த வரிகளில் சொல்கிறது. அது என்ன தகவல் என்பதை மாநிலக்குழு சொல்லவில்லை. ங்ஆதாரம்: இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு தயாரித்த பெரிய குளம் மீளாய்வு அறிக்கைசி.


இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழுவின் மீளாய்வு அறிக்கையின்படியே, ஆயுதப் போராட்டத்தை தொடங்கி, கொரில்லா மண்டலத்தையும் தளப் பிரதேசத்தையும் நிறுவுவதற்கான வாய்ப்புள்ளதாக மதிப்பீடு செய்து அவர்கள் தெரிவு செய்து இயக்க வேலைகளைத் தொடங்கிய பெரியகுளம்மேற்குத் தொடர்ச்சி மலைக் கண்ணோட்டப் பகுதியில் உண்மையில் அவர்களுக்கு மக்கள் அடித்தளம் கிடையாது. "அப்பகுதியில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகவோ வெளிப்படையாகவோ அல்லது தலைமறைவாகவோ நமது கண்ணோட்டப் பகுதியில் மக்களை அணிதிரட்டி நாம் இன்னும் எந்தப் போராட்டத்தையோ அல்லது பிரச்சார இயக்கத்தையோ செய்யவில்லை'' என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.


அந்தப் பகுதியில் மக்கள் அடித்தளம் இல்லாமலேயே ஆயுதங்களை சேர்ப்பதிலும், ஆயுதப் பயிற்சி எடுப்பதிலும் மாவோயிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டார்கள். இதுதான் அவர்களது செயலுத்தியுமாகும். மக்களை அணிதிரட்டுவதற்கு முன்பே அதற்கு முதற்படியாக செய்ய வேண்டியதே ஆயுதங்களைச் சேர்ப்பதும், ஆயுதக் குழுக்களைக் கட்டுவதும், அவற்றைப் பயன்படுத்தி ஆயுதப் போராட்ட அரசியலைப் பிரச்சாரம் செய்யும்போதே ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதுதான் மாவோயிஸ்ட் கட்சியின் செயலுத்தி.


இவ்வாறு செய்வதைத்தான், "அந்தப் பகுதியில் மக்கள் அடித்தளம் இல்லாமலேயே ஆயுதங்களை சேர்ப்பதிலும், ஆயுதப் பயிற்சி எடுப்பதிலும் மாவோயிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டார்கள்'' என்று பு.ஜ. விமர்சனம் செய்திருந்தது. அக்கட்சியின் மாநிலக் குழு மீளாய்வு செய்த அறிக்கையும் இதையே உறுதி செய்கின்றது.


புதிய ஜனநாயகம் ஏட்டின் விமர்சனங்கள் முற்றிலும் சரியானவையே என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இரகசிய அறிக்கையாக எழுதி வைத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டு கட்சி, வெளியே சண்டப்பிரசண்டங்களும், சவடால் வாதங்களும், கோட்பாட்டு விளக்கங்களும் அளிக்கின்றது.


"மாவோயிஸ்டுகளுக்கு அரசியல் கண்ணோட்டம் கிடையாது; சுத்த இராணுவக் க÷ண்ணாட்டம் உள்ளது. இடது சாகசவாதிகள். அவர்களுடைய சுத்த இராணுவக் கண்ணோட்டம் காரணமாக மக்களின் அரசியல் முன்முயற்சி பற்றிக் கவலைப்படுவதில்லை. "தமது ஆயுத நடவடிக்கைகளுக்கு உதவுவது' என்று கோணத்தில் மட்டுமே மக்களின் ஆதரவு குறித்துக் கவலைப்படுகிறார்கள்'' என்று பு.ஜ. கூறுவதாக மாவோயிஸ்டுகளாகவே தொகுத்துள்ள பு.ஜ. கருத்துக்களுக்கு அவர்கள் பின்வருமாறு கோட்பாட்டு விளக்கமளித்துள்ளனர்.


"சுத்த இராணுவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடுகளாக தோழர் மாவோ கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளார்.


அ. இராணுவ விவகாரங்களையும் அரசியலையும் ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்துவது; அரசியல் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வழிமுறைதான் இராணுவ விவகாரங்கள் என்பதை அங்கீகரிக்க மறுக்கின்றனர்; இராணுவ வேலைகள்தான் அரசியலுக்கு தலைமை அளிக்கின்றன.

 

ஆ. செம்படையின் கடமை வெறும் யுத்தம் புரிவது மட்டுமே எனக் கருதுவது;

 

இ. அமைப்பு ரீதியாக, அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இலாக்காக்கள் இராணுவ வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இலாக்காக்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என கருதுவது;

 

 ஈ.அரசியல் பிரச்சாரம் செய்வதையும், மக்களை அமைப்பு ரீதியாக அணிதிரட்டுவதையும் கைவிடுவது;


உ. ஒரு போரில் வெற்றியடைந்தால் தற்பெருமை கொள்வதும் தோல்வியடைந்து விட்டால் சோர்வுக்கு உள்ளாவதும்;

 

ஊ. தமது படையினரைத் தவிர (நான்காவது வழி இராணுவம்) வேறொருவரும் புரட்சிகர சக்திகள் கிடையாது என்ற குறுகிய மனப்பான்மை கொள்வது; எ. உள்ளூர் மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும் என்ற முக்கியமான கடமையை உணராமலிருப்பது;

 

ஏ. அகநிலை, புறநிலைமைகளை கணக்கில் கொள்ளாமல் புரட்சிகர அவசரக் குடுக்கைத் தனத்திற்குள்ளாவது; மக்கள் மத்தியில் பணிபுரிவதற்கான சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது; (மாவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள்)'' (போராளி மேற்கோள் காட்டியவாறு, பக்: 67)


இந்த மேற்கோளைத் தரும் மாவோயிஸ்டுகள் "அவர்கள் (பு.ஜ.) வைத்துள்ள விமர்சனத்திற்கும் சுத்த இராணுவக் கண்ணோட்டத்திற்கும் எந்த அளவிற்கு பொருத்தம் உள்ளது என்பதை வாசகர்களே தீர்மானிக்கட்டும்'' என்றுகூறுகிறார்கள். நாமும் இதை ஏற்கிறோம். பெரிய குளம் தர்மபுரி அனுபவம் குறித்த மாவோயிஸ்டுகளின் அறிக்கை விவரங்களை முன் வைத்துள்ளோம். இனி அவர்களின் கண்ணோட்டம் சுத்த இராணுவ சாகசவாதமா இல்லையா என்பதை வாசகர்களே தீர்மானிக்கட்டும்.