Language Selection

1939-1940 காலப் பகுதியில், இந்நிலைமைகளின்போது முதலில் மார்க்சியக் குழுக்கள் நிஜாம் மாநிலத்தில் தோன்றின. தேசிய இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட இளைஞர்கள்தான், மார்க்சியத் தத்துவத்தினாலும் கவர்ந்திழுக்கப்பட்டனர். அங்கும் இங்குமாக மார்க்சியக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துகள் பரவத் தொடங்கின. ஏழை மற்றும் சுரண்டப்படும் மக்களை, வர்க்கப் போராட்டங்களுக்காக அமைப்பாகத் திரட்டும் கருத்துகள் பரவ ஆரம்பித்தன. மாநிலத்தில் விரைவிலேயே பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டது.


இடதுசாரிக் கண்ணோட்டமுள்ள எல்லா இளைஞர்களும், மார்க்சிய உணர்வு கொண்டவர்களும் ஆந்திர மகாசபையை ஓர் இடைத்தளமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களிடையே வேலை செய்யத் தொடங்கினர். இதனால் ஆந்திர மகாசபையின் தன்மையே மாற ஆரம்பித்தது. அதுவரை ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், தெலுங்கு மொழி வளர்ச்சிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் மட்டுமே செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஏழை விவசாயிகளின் கோரிக்கைகளின் பேரில் சில வெற்றுத் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் மார்க்சியவாதிகள், விவசாயிகளிடையே இத் தீர்மானங்களைப் பிரபலமாக்கி, ஆந்திர மகாசபையின் தலைமையில் இக்கோரிக்கைகளுக்காகப் போராட அவர்களைத் திரட்டத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே ஆந்திர மகாசபை உண்மையிலேயே ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து விட்டது.


ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், இயக்கத்தின் இவ்வளர்ச்சியைக் கண்டு பயமடைந்தனர். அவர்கள் இவ்வியக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோல்வியுற்றனர். படிப்படியாக போங்கீர் மகாசபை (மாநாடு) காலத்தில் (1944) ஆந்திர மகாசபை மார்க்சியவாதிகளின் தலைமையின் கீழ் வந்தது.