Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

""என் நினைவுச் சின்னம்

நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி

உன்னை வந்து எட்டியதும்

நண்ப

பதறாதே''

 

(சும்மா பதறி என்ன பயன்? காலச்சுவடு கூட்டம் போடுவதற்கு முன்பாகவே ஆளாளுக்குக் கூட்டம் போடுவார்கள், சு.ராவுக்கே இரங்கற்கூட்டம் பிடிக்காது என்று சொல்லி என்னைப் பற்றிப் புத்தகம் போட்டு வியாபாரம் செய்து விடுவார்கள்!)

 

""ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்

எதுவும் அதில் இல்லை.''

 

(என்று ஏறக்கட்டி விடுவார்கள். கவிதை என்பது பூட்டு. கவித்துவ மனமே அதன் சாவி. இன்னுமா புரியவில்லை? மரம்தான் விதை. விதைதான் மரம். இலை பிரபஞ்சத்தின் குறியீடு. இருப்பினும் நண்ப.)

 

""இரங்கற்கூட்டம் போட

ஆள்பிடிக்க அலையாதே.''

 

(ஆள், தானே வருவான். காலச்சுவடு என்பது கடலோரக் கால் தடமல்ல. புத்தகம் போடவும் பிரபலமாகவும் காலச்சுவடிடம்தான் கையேந்தி வரணும். கவலைப்படாதே. அசோகமித்திரனோ, ஜெயகாந்தனோ மண்டையைப் போட்டால் கூட நண்ப, குறித்துக் கொள் என்னளவுக்குக் கூட்டம் வராது. ஆயினும் நண்ப)

 

""நம் கலாச்சாரத் தூண்களின்

தடித்தனங்களை எண்ணி

மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.''

 

(வந்தவனுக்கும் போனவனுக்கும் சாகித்ய அகாடமி. பாக்கட் நாவல் எழுத்தாளனுக்கு ஞானபீடம். எனக்கோ சாகித்ய அகாடமி தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் கூட இடமில்லை என்று அசோகமித்திரன் மறுத்து விட்டான். ஒருவேளை இனி எனக்கு ஒரு விருது கிடைத்தால் கூட சுந்தரராமசாமிக்கு ஒரே ஒரு விருது கிடைத்ததாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப்படும். எனவே நண்ப, என் பெயரிலேயே ஒரு விருது ஆரம்பித்து விடு. பிலிம்ஃபேர் விருது போல சு.ரா. விருது வளரட்டும். என் விருது வாங்க எல்லா நாய்களும் ஓடி வரும். அப்போது கவனித்துக் கொள்ளுங்கள். அதே சமயம் எனக்கு ஒரு சாகித்திய அகாடமியோ, ஞானபீடமோ கொடுத்தால் கோபப்பட்டு மறுத்து விடவேண்டாம் என்று கண்ணனிடம் சொல்லி வை. தாமதம் பற்றிய விமர்சனத்தை கூட்டம் போட்டுப் பதிவு செய்து விடலாம்.)

 

""நண்ப

சிறிது யோசித்துப்பார்

உலகெங்கும் கணந்தோறும்

இழப்பின் துக்கங்களில்

ஒரு கோடிக்கண்கள் கலங்குகின்றன

ஒரு கோடி நெஞ்சங்கள்

குமுறி வெடிக்கின்றன.''

 

(டைப்ரைட்டரில் என் நினைவுச்சின்னத்தை நான் எழுப்பிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் டெல்லி, போபால், ஈழம் எங்கும் மந்தை மந்தையாய்ப் பிணங்கள் சரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நாளை மழை, வெள்ளத்தில் மரம் மட்டைகளும், மக்களும் மிதக்கலாம். அந்த ஒப்பாரிச் சத்தத்தில் "ஊனைக்கரைத்து உயிரைப் பிழிந்து எழுத்தாக்கிய, என் மறைவுக்கு தேசிய சோகமா அறிவிப்பார்கள்? எனது இறுதி ஊர்வலத்தில் லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற ஒன்றிரண்டு சிஷ்ய பிள்ளைகள் தண்ணியைப் போட்டு விட்டு ஒரே ஒரு பஸ்சை மறிக்கலாம். இதற்கும் அதிகமாக வேறென்ன கௌரவத்தை இந்த தேசம் ஒரு எழுத்தாளனுக்கு வழங்கிவிடப் போகிறது?)

 

""நண்ப

நீ அறிவாயா

உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்

அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.''

 

(அதில் நான் எம்மாத்திரம்? எனினும் நான் அற்பனல்ல. படைப்பு எனும் நெடிய லாந்தர் கம்பங்களில் ஏறி சூனியத்தைத் தரிசித்து மீண்டும் கம்பம் கம்பமாய் சளைக்காமல் அலைந்து களைத்து காலைத்தூக்கிய தருணங்களை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு.... ""பாத்டப்பில் குளித்தார், வாழைப்பழத்தை பேரம் பேசினார், பூசிய உடல் வாகுடன் வரும் மலையாளப் பெண்களை ரசித்தார், சிங்கப்பூர் சென்ட் பூசினார், சாக்கடையை ஆராய்ந்தார், செண்பகமே, செண்பகமே பாடினார். அமெரிக்காவின் கிரீன் கார்டு வாங்கினார்'' என்று என் படைப்பு அவஸ்தையை சிலர் சிறுமைப்படுத்தக் கூடும்.

 

எனவே, நண்ப, இனிமேலாவது ஜெயமோகனுடன் பழகும் எழுத்தாளர்களை சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொல். பயல் தனது அதீத மனத்தாவலால் படுக்கையறையில் கூட நுழைந்து விடுவான். இனியாவது படைப்பின் அந்தரங்கம் பகிரங்கமாகக் கூடாது என்பதே என் ஆதங்கம்.)

 

""இருப்பினும்

நண்ப

ஒன்று மட்டும் செய்

என்னை அறியாத உன் நண்பனிடம்

ஓடோடிச் சென்று.''

(புதுவை இளவேனில் எடுத்த,

ஈசிசேரில் நான் சாய்ந்திருக்கும்

படத்தை உடனே காட்டு.)

""கவிதையை எழுப்ப முயன்று

கொண்டிருந்தவன்

மறைந்து விட்டான் என்று மட்டும் சொல்.''

(இவரே தூங்கிகிட்டு இருக்காரு,

இவர் எதை எழுப்ப முடியும்

என்று அவன் கேட்கக் கூடும்.)

""இவ்வார்த்தைகளை

அவன் கூறும்போது

உன் கண்ணீர்

ஒரு சொட்டு

இந்த மண்ணில் உதிரும் என்றால்

போதும் எனக்கு.''

(போதுமா உனக்கு?)

 

கார்மேகம்