Language Selection

புதிய ஜனநாயகம்

"சமூகநீதி காத்த வீராங்கனை'யும், "சமத்துவப் பெரியாரும்' மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் "அமைதிப் பூங்கா'வாகிய தமிழகத்தில், சாதிய அடக்குமுறை பேயாட்டம் போடுவதை அண்மையில் நடந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. படித்து முன்னேறிச் சொந்தக் காலில் நிற்க முயன்றால், தாழ்த்தப்பட்டோரை விட்டுவைக்க மாட்டோம் எனக் கருவிக் கொண்டிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள்.

அரபு நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள், அல்காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகள் அம்மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை என நிரூபித்து வரும் வேளையில், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றுள்ளது. போர்க் குற்றமாகக் கருதத்தக்க இப்படுகொலையை, ஏதோ வரலாற்றுச் சாதனையைப் போலப் பீற்றி வருகிறது, அமெரிக்கா. மேலும்,  அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றதன் மூலம், அமெரிக்காவில் செப்.11,2001 அன்று நடந்த தாக்குதல்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.  பின்லேடன் நிராயுதபாணியாக இருந்த நிலையில், அவரை அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொன்றதைப் பற்றியோ, இத்தாக்குதலின் பொழுது பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டிருப்பது பற்றியோ கேள்வி எழுப்பாத முதலாளித்துவப் பத்திரிகைகள், அமெரிக்க ஆளும் கும்பலைப் போலவே இப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றன.

தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் "கூட்டுச் சதியாளர்' எனத் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, கனிமொழியின் பிணை மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, அவர் விசாரணைக் கைதியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

"மே.வங்கத்தைப் பார்!', "வங்கம் வழிகாட்டுகிறது!' என்று 80களில் சிபிஎம் கட்சியினர் பெருமையுடன் பிரச்சாரம் செய்த முழக்கம், இன்று எதிர்கட்சிகள் சி.பி.எம். கட்சியினரைப் பார்த்து கேலி செய்வதற்கானதாகிவிட்டது. 34 ஆண்டுகாலமாக மே.வங்கத்தில் ஆட்சி செய்த போலி கம்யூனிஸ்டு "இடதுசாரி கூட்டணி' நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியடைந்துள்ளதோடு, சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இத்தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளனர். மே.வங்கத்தில் 2006ஆம் ஆண்டில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் 235 இடங்களை வென்ற "இடதுசாரி' கூட்டணி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 226ஐ திருணாமுல் காங்கிரசுகைப்பற்றி "இடதுசாரி' கூட்டணியை செல்லாக்காசாக்கியுள்ளது. மே.வங்கம் மட்டுமின்றி, கேரளாவிலும் ஆட்சியை இழந்து, மிகச்சிறிய மாநிலமான திரிபுராவில் மட்டுமே சி.பி.எம். கூட்டணி ஆட்சி நீடிக்கிறது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பனபாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.