Language Selection

புதிய ஜனநாயகம் 2011

""அரசின் உணவு தானியக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் ஒரு தானியத்தைக்கூட ஏழை மக்களுக்கு இலவசமாகத் தர மாட்டேன்'' என அடித்துப் பேசி வருகிறார், மன்மோகன் சிங். இன்னொருபுறமோ, உ.பி. மாநிலத்தில் ரேஷன் கடைகளின் மூலமும் சமூக நலத் திட்டங்களின் மூலமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு விநியோகித்திருக்க வேண்டிய இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான உணவு தானியங்களைக் கடத்திக் கொண்டு போய், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்றுள்ள ஊழல் நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அலைக்கற்றை ஊழல் பிரபலமான அளவிற்கு, உ.பி. மாநிலத்தில் நடந்துள்ள இந்த உணவு ஊழல் ஊடகங்கள் மத்தியில்கூட விரிவாகப் பேசப்படவில்லை.

""கார்கில் போரில் இறந்துபோன இராணுவச் சிப் பாய்களுக்காகக் கட்டப்பட்ட ஆதர்ஷ் கூட்டுறவு சங்க வீடுகளை, அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவத் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் விதிமுறைகளை மீறியும் மாற்றியும் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்; அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு சுற்றுப்புறச் சூழல் விதிகள், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம், நகர்ப்புற வளர்ச்சி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது'' என்பதைத் தாண்டி, ஆதர்ஷ் கூட்டுறவு சங்க ஊழல் பற்றி ஊடகங்கள் எழுதுவது கிடையாது. ஆனால், ஆதர்ஷ் ஊழல் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் முறைகேடுகள், ஊழலை மட்டும் குறிக்கவில்லை. அதையும் தாண்டி, மும்பய் மாநகரில் நிலவும் குடியிருப்புப் பிரச்சினைகள் பற்றிய உண்மைகளையும்; மும்பய் மாநகரின் பொது இடங்களை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் உதவியோடு தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு வருவதையும் உணர்த்துகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா, சுற்றுச்சூழல் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று ஏழை நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏகாதிபத்தியவாதிகள், ஏழை நாடுகளில் இத்தகைய விதிகளை மீறிப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொடூரமாகச் சுரண்டுவதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அழகழகான லிவைஸ் ஜீன்ஸ்களாகட்டும், ஆயத்த ஆடைகளை அள்ளிச் செல்ல அழைக்கும் வால்மார்ட், டெஸ்கோ முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களாகட்டும், இவற்றின் அழகுக்கும், நேர்த்திக்கும் பின்னே உறைந்திருப்பது, ஏழை நாடான வங்கதேசத் தொழிலாளர்களின் ரத்தம்.

""இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி பழைய முறையில் பணப் பட்டுவாடா செய்வதற்கு உதவ முடியாது '' என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவித்தது. ""இரானுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே, பணப் பட்டுவாடா செய்வதற்கு மாற்று வழியை உடனடியாக ஏற்பாடு செய்யாவிட்டால், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்'' எனக் குறிப்பிட்டு, உள்நாட்டு முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்பொழுது, அமெரிக்கா, ""இது குறிப்பிடத்தக்க நடவடிக்கை'' எனக் கூறி, இந்தியாவைப் பாராட்டியிருக்கிறது.

அடுக்கடுக்கான இலஞ்சஊழல் கதைகளாலும், விலைவாசி உயர்வின் தாக்குதலாலும் நடுத்தர வர்க்கம் பிரமைதட்டிப் போயிருக்கையில், அதன் அறிவுஜீவிப் பிரிவினரை உலுக்கி இருக்கிறது, பிரபல சமூக சேவை மருத்துவரும், மனித உரிமைகள் ஆர்வலருமான பிநாயக் சென் அவர்களுக்கு மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி, வாழ்நாள் கடுங்காவல் தண்டனை விதித்து சட்டிஸ்கார் மாநில, ரெய்ப் பூர் நகர விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.