Language Selection

புதிய ஜனநாயகம் 2011

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.

இந்தியக் குடும்பத்தின் வருமானத்தில் மருத்துவச் செலவானது கணிசமான தொகையை விழுங்குகிறது. உழைக்கும் மக்களுக்கோ மருந்துக் கடைகள்தான் மருத்துவமனைகளாக இருக்கின்றன. விலைவாசி விண்ணைத் தொடும் இந்தக் காலத்தில், மக்களால் ஒரு வேளைச் சோற்றைக் தவிர்க்க முடிந்தாலும்கூட மருந்தைத் தவிர்க்க முடிவதில்லை. சமீபத்தில் "லேன்செஸ்ட்'' என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வில், இந்தியாவின் மொத்த மருத்துவச் செலவில் 78 சதவீதத்தை மக்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செலவிடுகின்றனர் என நிறுவப்பட்டுள்ளது. இதுவே மாலத்தீவில் 14மூ, பூட்டானில் 29மூ, தாய்லாந்தில் 31மூஆக உள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.

தென்னை மரங்கள் அசைந்தாட, பாக்கு மரங்கள் தலையசைக்க, மாமரத் தோப்புகள் நிறைந்த கொங்கண் பிராந்தியத்திலுள்ள மதுபான் கிராம மக்களின் கண்களில் அச்சமும் கவலையும் ஆட்கொண்டுள்ளது. அக்கிராமத்தை அடுத்துள்ள கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலை வெறித்துப் பார்த்து விம்முகின்றனர். இந்த நிலமும் நீரும் கடலும் ஆறும் காய்களும் கனிகளும் வாழ்வும் வளமும் இனி அவர்களுக்குச் சொந்தமில்லை. இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வைப்பறிக்க இடியாய் இறங்கியுள்ளது ஜெய்தாபூர் அணு மின்திட்டம்.

தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ நிறுவனம், ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை மற்றும் அவ்வுருக்காலையோடு சேர்ந்து அமையவுள்ள மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகியவற்றுக்காக விவசாய, வன நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் விலக்கிக் கொண்டுவிட்டது. இதனையடுத்து, இக்கையகப்படுத்தலுக்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பழங்குடியின மக்களும், மீனவர்களும் நடத்தி வரும் போராட்டமும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசை போஸ்கோவின் கூலிப் படையெனச் சாடியுள்ள அம்மக்கள், "தங்கள் பிணங்களின் மீதேறிப் போய்தான் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்' எனச் சூளுரைத்துள்ளனர்.

கடந்த ஜனவரியில், உலக நாடுகளின் மேற்பார்வையில் நடந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் ஏறத்தாழ 99 சதவீத வாக்குகளைப் பெற்று, வடக்கு சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. வரும் ஜூலை 9ஆம் தேதியன்று ஜூபா நகரைத் தலைநகராகக் கொண்ட தெற்கு சூடான் அதிகாரபூர்வமாகத் தனி நாடாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடான தெற்கு சூடானைத் தமிழின வாதிகள் வாழ்த்தி வரவேற்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகப் பெரிய நாடான சூடானிலிருந்து தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடந்துள்ளதையொட்டி, இது போலவே நாளை ஈழம் மலரும் என்று பல தமிழினவாதிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.