Language Selection

புதிய ஜனநாயகம் 2011

இயற்கையின் கொடையான தண்ணீர் அனை வருக்கும் பொதுவானது, அதனை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளது என்ற நியதிக்கு, முதலாளித்துவம் என்றுமே கட்டுப்பட்டதில்லை. மற்ற வளங்களைப் போலவே தண்ணீரையும் ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிடவே, அது துடித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்ற உலக வங்கியின் துணையுடன் பல வழிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, "இந்தியாவின் வளர்ந்து வரும் தண்ணீர் வர்த்தகத் துறையின் 50 பில்லியன் டாலர் (2,50,000 கோடி ரூபாய்) மதிப்பிலான சந்தையைக் கைப்பற்றுவோம்'' என்ற முழக்கத்துடன் அமெரிக்க கார்பரேட் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பெங்களூருவிற்கு வந்து சென்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஆந்திராவின் சிறீகாகுளம் மாவட்டம், சாந்த பொம்மலி வட்டத்திலுள்ள காகரப் பள்ளியில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எர்ரய்யா, கிரி ராஜேஸ்வர ராவ் எனுமிரு விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். படுகாயமடைந்த 5 பேர் மரணப் படுக்கையில் கிடக்க, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலப்பறிப்புக்கு எதிராகவும் தமது வாழ்வுரிமைக்காகவும் போராடியதுதான் காகரப்பள்ளி மக்கள் செய்த குற்றம்!

ஆப்கான், ஈராக்கையடுத்து, அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புப் போரை லிபியா மீது தொடுத்திருக்கிறது. நேடோ கூட்டணியைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவுக்கு இணையான வெறியோடு இப்போரில் இறங்கியுள்ளன. லிபியாவின் இராணுவ பலத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் நோக்கில், அதன் இராணுவ, கப்பற்படைத் தளங்கள், போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அனைத்தும் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்படுகின்றன. இப்போரினூடேயே லிபியாவின் அதிபர் மும்மர் கடாஃபியைக் கொன்றுவிடும் நோக்கமும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு இருப்பதை, அவரது மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டிக் கொடுத்துவிட்டது.

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர்! இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்று சேர்! கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!', "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து மார்ச் இறுதி வரையிலான ஒரு மாத காலத்தில் நாளொன்றுக்கு ஒரு பொதுக்கூட்டம் என்ற அளவில் தமிழகமெங்கும் 30க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் நடத்தியுள்ளன.

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.