விதை குழுமம் தொடர்பாகவும் அதன் செயற்பாட்டாளர்கள் சிலர் தொடர்பாகவும் பாலியல் சுரண்டல், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் பெப்ரவரி, 2024  இறுதியில் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருந்தன.  விதை குழுமத்திலும் அதன் அமைப்புகளான புதிய சொல், கூட்டு வேலைத்திட்டமான தொன்ம யாத்திரை ஆகியவற்றில் அங்கம் வகித்தவன் என்றவகையிலும் அவை சார்பாக பலருடன் உரையாடியவன், கூட்டு வேலைகளை முன்னெடுத்தவன் என்றவகையிலும் இவற்றுக்குப் பதில் சொல்லவும் பொறுப்புக் கூறவும் நான் கடமைப்பட்டுள்ளவன் என நினைக்கிறேன். 

விதை குழுமத்தைச் சேர்ந்தவர்களுடன் 2015 தொடக்கம் முதலே எனக்குத் தொடர்புகள் இருந்தபோதும் அமைப்புரீதியாக விதை குழுமத்தில் இணைந்து வேலை செய்யத்தொடங்கியது 2016 தொடக்கத்தில் இருந்தே.  2017 இன் தொடக்கத்தில் இருந்தே யதார்த்தன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருப்பது உள்ளிட்ட சில குற்றச்சாற்றுகள் அமைப்பில் முன்வைக்கப்பட்டன.  கிரிசாந்தே இந்தக் குற்றச்சாற்றுக்களைப் பிரதானமாக முன்வைத்தவர். அமைப்புக்குள் இவை உரையாடப்பட்டு, யதார்த்தன் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பது அமைப்பின் நிலைப்பாடாக கிரிசாந் ஊடாக யதார்த்தனுக்குத் தெரிவிக்கப்பட்டது.  ஆயினும், யதார்த்தன் தன்னைத் திருத்திக்கொள்வதாகத் தொடர்ச்சியாக உறுதியளித்தபோதும் அவ்விதம் திருத்திக்கொள்ளவில்லை.  இந்த நிலையில் ஜூன் 3, 2017 அன்று யதார்த்தன் திடீரென்று புதிய சொல், விதை குழும messenger உரையாடற்குழுமங்களில் இருந்து வெளியேறினார்.  உடனடியாக, யதார்த்தன், கிரிசாந் இருவரையும் அழைத்தபோது யதார்த்தனின் தொலைபேசியில் இருந்த Chat History, புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்த தான் அவற்றை யதார்த்தனின் அப்போதைய காதலிக்குத் தெரிவித்ததாற்தான், அவ்வாறு யதார்த்தன் விலகியதாக கிரிசாந் கூறினார்.  யதார்த்தன் “தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய சொல்லில் இருந்து விலகுகிறேன், இப்போது பேசுகின்ற மனநிலையில் இல்லை, ரெண்டு நாள் கழிச்சு பேசுறன்” என்று text பண்ணியிருந்தார்.  

பின்னர் ஜூன் 6 யதார்த்தனுடன் நடந்த உரையாடலில் தனது பக்கத் தவறுகளை சரி செய்ய முனைவதாகவும் அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் கூறியிருந்தார்.  எனவே அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும்படியும் அந்தக் கால அவகாசத்தில் குறித்த செயற்பாடுகளைத் திருத்திக் கொள்ளும்படியும் யதார்த்தனுக்கு விதை குழுமம்சார்பில் அறிவுறுத்தியிருந்தோம்.  இதன் பின்னர் ஜூன் 10 அன்று யதார்த்தன் புதிய சொல்லிற்கும் விதை குழுமத்திற்கும் பொதுவாக எழுதிய கடிதத்தில் “விதை குழுமத்தில் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பதாகவும், புதிய சொல்லில் தொடர்ந்து பணியாற்ற எந்தத் தடையும் இல்லை என்றும் புதிய சொல்லில் தான் தொடர்ந்து பணியாற்றுவதற்கு தன்னுடைய தனிப்பட்ட ஒழுக்கத்தை முன்வைத்து நண்பர்கள் ஆட்சேபிக்கும் பட்சத்தில் அதில் இருந்தும் விலகுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.  ஆயினும் “செயற்பாட்டியக்கங்களான விதை குழுமம், புதிய சொல் என்பவற்றின் மதிப்பீடுகளில் இவற்றை கடுமையான ஒழுக்கமீறல்களாகவே பார்க்கமுடிகின்றது.  எனவே அமைப்பு விதிகளுக்குப் புறம்பான இந்த செயற்பாடுகள் சீர்செய்யப்படும்வரை அந்த அமைப்பின் சட்டகத்திற்குள் உங்களை உள்ளடக்குவது சாத்தியமற்றது.” என்று யதார்த்தனுக்கு கடிதம் மூலமாக அறிவுறுத்தியிருந்தோம். இவற்றில் பல உரையாடல்களை கிரிசாந்தே நேரடியாக யதார்த்தனுடன் உரையாடியிருந்ததோடு இந்தப் பிரச்சனையின் பின்னர் கிரிசாந் யதார்த்தனுடன் பேசுவதையும் நிறுத்தியிருந்தார்.  கடிதத்தில் தெரிவிக்கப்படியே யதார்த்தன் விதை குழுமம், புதிய சொல் ஆகியவற்றில் இருந்து முற்றாக விலக்கிவைக்கப்பட்டும் இருந்தார்.

2019 இல் அமைப்பாக்கம் செய்து அமைப்பைப் பதிவுசெய்யவேண்டும் என்ற உரையாடலை முன்னெடுத்திருந்தேன்.   இதன் தொடர்ச்சியாக 2020 இன் தொடக்கத்தில் அமைப்புக்கான யாப்பு விதிகள், அமைப்பு விதிகள் போன்றவற்றை உருவாக்கி அமைப்பைப் பதிவுசெய்வது என்ற முடிவெடுக்கப்பட்டது.  இந்தக் காலப்பகுதியில் சுயவிமர்சனம் செய்து தன்னைத் திருத்திக்கொண்டதாக யதார்த்தன் தெரிவித்தார்.  கிரிசாந்தும் அதனை உறுதிசெய்தார்.  இதன்பின்னர் அமைப்பாக்கத் தேவைகளுக்காக அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.  இதில் யதார்த்தனும் அங்கம் வகித்தார்.  இதன்போது உருவாக்கப்பட்ட அமைப்பின் கொள்கைகளில் ஒன்றாக 

“மக்கள் மத்தியில் இயற்கையைப் பாதுகாத்தல்,சமூகப்பிளவுகளுக்குக் காரணமான சாதி/மத/பால்/பால்நிலை/பாலியற்தேர்வு/இன/வர்க்க/மதவாதம் போன்றவற்றின் அடிப்படையிலான மக்கள்நலனுக்கெதிரான போக்குகளை அடையாளம் கண்டுவெளிப்படுத்துதலும், மக்களிடையே சமத்துவமான உறவை வென்றெடுக்கப் போராடுதலும், அதன்மூலமாக ஒரு விழிப்புணர்வுமிக்க மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் அதன் அடிப்படைக் கொள்கைகளாகும்.”

என்பது உள்வாங்கப்பட்டதுடன் பாலியல் சுரண்டல்கள் குறித்து மிகவும் பிரக்ஞையுடன் அமைப்பு இயங்கவேண்டும் என்பதுவும் உரையாடப்பட்டது.  சமநேரத்தில், யதார்த்தனை அமைப்பிற்குள் மீண்டும் உள்ளெடுத்தது தொடர்பான விமர்சனங்களை சில நண்பர்கள் முன்வைத்ததாகவும் ஆனால் அவர்கள் பழைய பிரச்சனைகளையே குறிப்பிடுகின்றனர், இப்போது யதார்த்தன் அவற்றில் இருந்து வெளிவந்துவிட்டதாகவும் தான் எனக்குச் சொல்லப்பட்டது. அதேவேளை, விதை குழுமத்தினரின் பாலியல் சுரண்டல்கள் என்கிற விமர்சனங்களை ஓரிரு நண்பர்கள் தமது முகநூலில் எழுதியிருந்தனர், ஆயினும் அவை போலியான குற்றச்சாற்றுக்கள் என்றே கிரிசாந்தால் எனக்குச் சொல்லப்பட்டது. ஆயினும் இப்போது கிடைக்கின்ற தரவுகளின்படி பாரதூரமான அளவில் இந்தச் சுரண்டல்கள் இடம்பெற்றிருப்பதை அறியமுடிகின்றது.  விதை குழுமத்தின் அங்கத்தவர்களில் ஒருவன் என்றவகையில், எனது கவனக்குறைவுக்கு நான் பொறுப்புக்கோருகின்றேன்.  தற்போது இந்த விடயத்தை பொதுவெளிக்குக் கொண்டுவந்த தோழர்கள் சிவா மாலதிக்கும், மதுரனுக்கும், அவர்களுடன் தோழமையாக நின்றவர்களுக்கும் நன்றிகள்.

யதார்த்தன் தொடர்பாக வேறு சில குற்றச்சாற்றுக்கள் முன்னர் உரையாடப்பட்டபோதெல்லாம், பாலியல் சுரண்டல்கள் முன்வைக்கப்படும்போது தான் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்பேன் என்றே கிரிசாந் பலதடவைகள் சொல்லியிருந்தார்.  இப்போது கிரிசாந் எடுத்திருக்கின்ற நிலைப்பாடும், விடயத்தைத் திரிபுபடுத்தும் விதமாக கிரிசாந் எழுதியுள்ள பிரியத்துக்குரிய பெண்ணுக்கு தொடரும், சுரண்டலெனும் கலை, பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடல், சராசரிகளுடன் உரையாடல் உள்ளிட்ட கட்டுரைகளும் கண்டனத்துக்குரியவை. “ சமூக ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் தொழிற்படக்கூடிய விதங்களை ஆராய்ந்து அவை குறித்த பிரக்ஞையுடன் அமைப்புகள் இயங்குவதும் அமைப்பின் உறுப்பினர்கள் அந்தப் பிரக்ஞையை அடைவதற்கான முனைப்புகளை அமைப்புகள் முன்னெடுப்பதும் அவசியமானது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் நீதிவேண்டும்போது அமைப்புகள் அந்தக் குரல்களை ஒடுக்கிவிடாமல் அறத்தின் பக்கம் நின்று தொழிற்படுவதும் முக்கியமானது.” என்று மு. மயூரன் குறித்த பிரச்சனையில் விதை குழுமத்தின் அறிக்கை அமைந்தது.  ஆயினும் இன்று விதை குழுமத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளரின் நிலைப்பாடே இதற்கெதிராக அமைந்துள்ளது முற்றிலும் எதிர்பாராதது.

000

விதை குழுமத்தின் பணச்சுரண்டல்கள், நிதி மோசடிகள் போன்ற குற்றச்சாற்றுக்களை எவரும் எனது கவனத்துக்குக் கொண்டுவரவில்லை. ஆயினும் எமது சில செயற்திட்டங்களின் போதாமைகள் குறித்தும், அவற்றுக்கான நிதி நிர்வாகம் சரியான முறையில் பேணப்படாமை குறித்தும் எனக்கு சில விமர்சனங்களும் கணக்குகள் பற்றிய பல கேள்விகளும் இருந்தன. குறிப்பாக குடத்தனை, காட்டுப்புலம், பாலிநகர்ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நூலகங்கள் பற்றி எனக்குச் சொல்லப்பட்ட தகவல்களும், சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்ட விம்பமும் நிஜத்தில் இருந்து முற்றிலும் வேறாக இருந்தது.  இந்த நூலகங்களுக்கு மிக அருகில் இருந்த மக்களுக்குக் கூட அப்படி ஒரு நூலகம் இருப்பதுவே தெரியவில்லை.  குடத்தனை நூலகத்தைப் பொறுத்தவரை அதனை அமைப்பதற்கவும் புத்தகங்கள் வாங்குவதற்காகவும் பணம் திரட்டியிருந்தோம், நானும் நூலக அமைப்புக்காக பணம் அனுப்பியதுடன் புத்தகங்கள் வாங்கவென்றும் பணம் அனுப்பியிருந்தேன். கதை சொல்லல் உள்ளிட்ட சில நிகழ்வுகளை அங்கே நடத்தியதுடன் சிறுவர்கள் வாசிப்பில் ஆர்வமாக இருப்பதாகவும் தொடர்ந்து புதிய புத்தகங்களை வாசிக்கக் கேட்பதாயும் செயற்குழு கூட்டங்களில் தொடர்ந்து எனக்குச் சொல்லி வந்தார்கள். இந்த நூலகத்தின் பாவனையாளர்களாக இருந்தவர்கள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.  இப்படி இருக்கும்போது இந்த நூலகம் இயங்கத் தொடங்கி ஒரு வருடத்தின் பின்னர், ஒக்ரோபர் 2021 இல்அங்கே வெறும் 43 புத்தகங்கள் மட்டுமே இருந்ததையும்அவற்றில் 3 புதிய சொல் இதழ்கள் உட்பட சிறுவர்களுக்குப் பொருத்தமில்லாத பல புத்தகங்களே இருந்ததையும், நூலகம் செயற்படாமலேயே இருந்ததையும் அறியமுடிந்தது.  அதுதவிர ஒரு புத்தக ராக்கை கூட இல்லாமல் வெறும் பெட்டி ஒன்றுக்குள் இந்தப் புத்தகங்கள் போடப்பட்டிருந்ததாகவும் அறிந்தேன்.    

காட்டுப்புலம் நூலகத்துக்கு ராக்கைகள் வாங்கவும், மேசைகள் வாங்கவும் என்று 2018 இல் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்களும், பின்னர் அதே நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கவென்றும் பணம் அனுப்பியிருந்தேன்.  அந்த நூலகம் குறித்தும் நிறையச் சொல்லிவந்தார்கள், ஆனால் அவ்வூரில் அப்படி ஒரு நூலகம் இயங்குவதே ஆட்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றறிந்து அது குறித்துக் கேட்டிருந்தேன்.  அதற்கும் ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை என்பதுடன் உண்மையில் அது முதன்மையாக இன்னொரு அமைப்பின் நூலகம் என்பதையும் தெரிந்துகொண்டேன்.  

அமைப்பின் ஆரம்ப நாட்கள் முதல் கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பேணவேண்டும் என்பதையும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திவந்தேன்.  அதுமட்டுமல்லாமல் கிரிசாந் இவற்றினைச் சரியாகச் செய்யாமல் இருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டே வந்துள்ளேன்.  ஆயினும், தான் கணக்குகளை கொப்பியொன்றில் பதிந்துவருவதாகவே கிரிசாந் குறிப்பிட்டுவந்தார்.   அமைப்பாக்கத்தின் தொடர்ச்சியாக கணக்குகளை Excel இல் உள்ளிட்டு Google Drive இல் பேணுவது என்று முடிவெடுத்திருந்தோம்.  விதை குழுமத்துக்கான கணக்குகளை பதிவதற்கான எக்ஸல் ஆவணம் ஒன்றை உருவாக்கி முழுவிபரங்களையும் உள்ளடக்கி அந்த ஆவணத்தை முழுமையாகச் செய்யுமாறு கோரி இருந்தேன், ஆயினும் வரவு, செலவு குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை.  ஆயினும் இந்த நூலகங்கள் தொடர்பாக கிடைத்த ஏமாற்றத்தினை செயற்குழு கூட்டத்தில் நான் வெளிப்படுத்தி, நன்கொடை தந்தவர்களுக்கு நாம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறினேன்.  இதே காலப்பகுதியில் தான் விதை குழுமத்தின் அங்கத்தவர்களுக்கான Reference Library க்காக வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட புத்தகங்கள் எங்கே என்றும் கேட்டேன், அதற்கும் ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை.  அதுமட்டும்மல்ல, விதை குழுமத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் அப்படி ஒரு நூலகம் இருப்பதாகத் தெரியவில்லை.

இவற்றின் தொடர்ச்சியாக எமது செயற்திட்டங்களை நாம் மீளாய்வும் மதிப்பீடும் செய்யவேண்டும் என்பதை நான் கோரியிருந்தேன்.  இந்த மதிப்பீடுகளைச் செய்து அதன் பின்னர் குறித்த நூலகங்கள், மற்றும் செயற்திட்டங்களில் நாம் பின் தங்கியுள்ள விடயங்களைச் செய்துமுடிப்பதுடன் முழுமையானதும் வெளிப்படையானதுமான அறிக்கையை பொதுவெளியில் முன்வைக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.  கிரிசாந்தும் யதார்த்தனும் தாம் பிழைவிட்டு விட்டோம், அதற்காகத் தாம் வருத்தப்படுவதாக சொன்னார்கள், இவற்றைச் செய்து முடிப்பதாகவும் சொன்னார்கள்.  ஆயினும் இதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.  2021 இன் மத்தியில் இவைபற்றி நான் கேட்டிருந்தேன், ஒக்ரோபர் 2021 இற்குப் பின்னர் கூட்டங்களுக்கு வருவதை கிரிசாந்த தவிர்க்கத் தொடங்கினார், இதனால் கூட்டங்கள் அடிக்கடிநடைபெறாமல் போயிற்று.  கடைசிச் செயற்குழு கூட்டம் டிசம்பர் 25, 2021 அன்று நடந்தது. அதில் கிரிசாந்தும் யதார்த்தனும் சமூகமளித்திருந்ததுடன் இந்த விடயங்கள் குறித்தும் உரையாடப்பட்டன.  அனைத்து விடயங்களையும் அந்த ஒரு கூட்ட த்தில் பேசுவதற்கு நேரம் போதாதென்பதால் அடுத்தடுத்த கூட்டங்களில் இவை குறித்து உரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் அதற்குப் பிறகு நடக்கத் திட்டமிடப்பட்டிருந்த எந்தக் கூட்டங்களிற்கும் கிரிசாந் வரவில்லை.  அறிதலும் பகிர்தலும் கூட்டத்தொடரை மட்டும் பெப்ரவரி 2023 வரை நான் தொடர்ந்து நடத்தினேன்.

ஏற்கனவே அமைப்பின் யாப்பு மே 2020 இல் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.  அதன்பின் செயற்குழு அங்கத்தவர்கள், ஏலவே இருந்த உறுப்பினர்கள் உட்பட அனைவரும் உறுப்பினர் விண்ணப் படிவத்தை நிரப்பியே அமைப்பின் அங்கத்தவர்கள் ஆனார்கள்.  அன்றுமுதல் அமைப்பை ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்யுமாறும் கிரிசாந்திடமும் யதார்த்தனிடமும் கேட்டிருந்தேன். ஆனால் அதையும் அமைப்புக்கான வங்கிக் கணக்கை உருவாக்குவதையும் அவர்கள் பிற்போட்டே வந்தார்கள். அமைப்பைப் பதிவு செய்வது சிரமமாக இருக்கின்றது என்றே தொடர்ந்து சொல்லிவந்தனர்.  அமைப்பைப் பதிவு செய்வதற்கு உதவக்கூடிய சில சட்டத்தரணிகளது தொடர்புகளைக் கொடுத்தபோதும், தாம் வேறு சிலருடன் அதுகுறித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவே சொன்னார்கள். ஆயினும் கடைசிவரை அது நடக்கவேயில்லை.  

000

பெப்ரவரி 2024 இறுதியில் முகநூலில் விதை குழும உறுப்பினர்கள் மீது பாலியல் சுரண்டல் குற்றச்சாற்றுகளும் நிதி மோசடிக் குற்றச்சாற்றுகளும் முன்வைக்கப்பட்டன.  நிதிக் கணக்குகள் தொடர்பான விடயங்களை கிரிசாந்தே கையாண்டவர் என்றவகையிலும் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்றவகையிலும் கிரிசாந்தை அணுகி, ஒரு சமூக அமைப்பென்ற வகையிலும், பெரிதும் எமது செயற்திட்டங்களை ஆதரித்தவர்களிடமிருந்தே அதற்கான நிதி திரட்டப்பட்டது என்ற வகையிலும் அமைப்பின் நிதி சம்பந்தமான  நடவடிக்கைகளின் விபர அறிக்கையானது அமைப்பின் உறுப்பினர்களதும் அமைப்புடன் இணைந்து இயங்கிய நிறுவனங்களதும் பார்வைக்குக் கிடைக்கக் கூடிய விதத்தில் தயார்செய்யப்பட்டு, வெளியிட்டு வைப்பது  எமது கடமையும் பொறுப்புமாகும் என்றும் இதன் பொருட்டு விதை குழுமத்துக்காக எவரெவரிடம் இருந்து எவ்வளவு எவ்வளவு தொகை எந்தெந்த செயற்திட்டங்களுக்காகப்  பெறப்பட்டது என்பதையும் அதன் செலவீனம் பற்றிய  விபரங்களைப் பகிருமாறும் மீண்டும் கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான பொறுப்பான பதில்கள் எதுவும் தொடர்ச்சியான மின்னஞ்சல் பரிமாற்றங்களின் பின்னரும் கிடைக்கவில்லை.  

குறிப்பாக காட்டுப்புல நூலகத்துக்கான ராக்கை வாங்க அனுப்பிய பணம், நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கென்று அனுப்பப்பட்ட பணம், விதை குழுமத்தின் reference நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்குவதற்கென்று அனுப்பப்பட்ட பணம், சந்தாதாரர்களாக இணைந்தவர்கள் அனுப்பிய சந்தா தொகை (ஒருவருக்கான சந்தா பணம் 10,000 ரூபாய்) மூலம் சேர்ந்த பணம் (இந்தச் சந்தா கிடைத்தபின்னர் ஒரு புதிய சொல் இதழ் கூட வெளிவரவில்லை), முற்பணமாக கொடுக்கப்பட்ட 150,000 பணம் உள்ளிட்டவற்றுக்குச் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.  அத்துடன் கோவிட் நிவாரணத்தை பொறுத்தவரை பெற்றுக்கொண்ட மொத்த நிதி எவ்வளவு என்ற தொகையையும் செலவுகளையும் நாம் வெளியிட்டிருந்தோம்.  யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்றோம் என்ற விபரத்தை வெளியிடவில்லை, அதை வெளியிடுவது அவசியம் என்பதையும் கோரியிருந்தேன்.  

ஆனால் கிரிசாந், எவ்வளவு பணம் வந்தது, யார் அனுப்பியது, எவ்வளவு செலவு என்று எதுவும் தனக்கு நினைவில் இல்ல; எவ்வளவு செலவோ அவ்வளவுதான் வரவும் என்றே பதிலளித்துள்ளார்.   

புதிய சொல் 10 இதழ்கள் வெளிவந்துள்ளன.  எனக்குத் தெரிய அவற்றில் ஏழு இதழ்களுக்கு சயந்தன் நன்கொடை வழங்கினார், ஆயினும் அச்சுக்கூலி, பேப்பர் விலை ஏற்றம், கூரியர் செலவு போன்றவற்றின் காரணமாக முதலாவது இதழிலிருந்தே புதிய சொல்லுக்குக்கு எனது நிதிப் பங்களிப்பும் இருந்தது. புதிய சொல்லுக்கான செலவுகள் சயந்தனதும் எனதும் பங்களிப்புகளால் முழுவதும் நிறைவு செய்யப்பட்டன.  சயந்தனின் பங்களிப்புகள் கிடக்காதபோது அதற்கும் சேர்த்து நானே பொறுப்பேற்றுக்கொண்டேன்.  இடையில் 4 இதழ்களுக்கு கீத் குமாரசாமியும் நிதி உதவிசெய்தார். தொன்ம யாத்திரை இதழ்களுக்கான பணத்தையும் நானே பொறுப்பேற்றிருந்தேன்.  இதழ்கள் ஒழுங்காக வெளிவந்து, சந்தாதாரையும் பெற்றுக்கொள்வதோடு இதழ்கள் விற்பனை செய்வது மூலம் கிடக்கின்ற பணத்தை மீளவும் இதழ்களுக்காகவே பயன்படுத்தினால் இதழ்களுக்கு ஆகும் செலவு பேண்தகு நிலையை அடையும் என்பதே எம்மிடம் இருந்த திட்டம்.  புலம்பெயர் நாடுகளில் 100 இதழ்கள் விற்பனையாகும் நிலையை எட்டுவதோடு உள்ளூர் விற்பனையையும் ஒழுங்காக பேணினால் இது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையில், எனது நிதியுதவிகள் குறுகிய காலத்துக்கானவை என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது.

தற்போது வெவ்வேறு நிதியுதவிகள் விதை குழுமத்துக்குக் கிடைத்ததாக குற்றச்சாற்றுக்கள் வைக்கப்படுகின்றன. என்னிடம் சிலர் நேரடியாகவே தொடர்புகொண்டு அத்தகைய குற்றச்சாற்றுகளைச் சொல்லியுள்ளனர்.   அவ்வாறு நிதியுதவிகள் செய்தவர்கள் / விதை குழுமம் நிதியுதவிகளைப் பெற்ற விபரங்களை அறிந்தவர்கள், அவற்றைப் பொதுவெளியில் அறிவிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

000

முன்னரே சொன்னதுபோல 2021 மத்திய பகுதியில் இருந்தே எனக்கு விமர்சனங்கள் எழுந்தபோது அவற்றைச் செயற்குழு கூட்டங்களிலும் அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்ந்து உரையாடிவந்தேன்.  அமைப்பாகவும் தனிநபர்களாகவும் சுயவிமர்சனம் செய்து தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் செயற்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  இடையில் 2022 ஜனவரி முதல் என்னுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டபோதும், கிரி விரைவில் என்னுடன் பேசுவார் என்றே யதார்த்தன் என்னிடம் கூறிவந்தார்.  நானும், இளைய தலைமுறையினர்; காயப்பட்டு ஒதுங்கிவிடக் கூடாது, அவர்கள் தம்மைச் சுயவிமர்சனம் செய்ய இந்தக் காலம் தேவைப்படும் என்று பொறுத்திருந்தேன்.  ஆயினும் அதற்குப் பின்னர் விதை குழுமம் தொடர்பாக இடையில் நின்ற விடயங்கள், செய்து முடிக்கப்படவேண்டிய மீளாய்வு, மதிப்பீடு குறித்த எந்த அக்கறையும் இன்றி மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் இயங்கத் தொடங்கிய விதத்திலிருந்தும், சொல்லும் செயலும் வேறாக இருப்பதை அறிந்ததிலிருந்தும், இந்தக் குற்றச்சாற்றுகளை எதிர்கொண்ட விதங்களில் இருந்தும்  இருந்தும் எனது நம்பிக்கை முழுவதும் வீணென்று உணர்ந்துகொண்டேன்.

சுயமரியாதையும் சமத்துவமும் கொண்ட சமூகத்தினை உருவாக்குதல் என்ற நோக்குடன் அமைப்பு வேலைகளில் ஈடுபட்ட நான், விதை குழுமதின் அங்கத்தவனாக சமூக செயற்பாடு என்ற கூட்டு நடவடிக்கையில் இணைந்து செயற்பட்ட காலங்களில், பேசிய விவாதித்த, நம்பிய கருத்துக்கள் கொள்கைகள் என்பவற்றுக்காக நாம் அமைப்பு ரீதியாகச் செய்த எல்லா  முயற்சிகளும், எந்த விதமான நியாயமான காரணங்கள் எதையும் முன்வைக்க முடியாது  வெறுமனே விழலுக்கிறைத்த நீராகப் போய்விட்ட ஒரு நிலையையும், அமைப்பு எந்தச் சுரண்டல்களை எதிர்த்ததோ, அதே சுரண்டல்களை அமைப்பைச் சேர்ந்தவர்களே செய்திருக்கின்றார்கள் என்ற மோசமான நிலையையும் வந்தடைந்திருக்கின்றேன். குறைந்த பட்சம், எங்கள் முயற்சிகள் ஏன் தோற்றுப் போயின என்பதை கருத்து ரீதியாக விவாதிக்கவோ, முன்வைக்கவோ முடியாத போதும்,  எம்மையும் எமது கருத்துக்களையும்  ஆதரித்து பணரீதியாக உதவிய ஆதரவு சக்திகள் முன் அப்பணத்துக்கு என்ன நடந்தது என்பதைக் கூட  முழுமையாகவும், சம்பந்தப்பட்டவர்கள் முன் விபரமாகவும் முன்வைக்கவோ முடியாத,  அவர்கள் முன் தலைநிமிர்ந்து நிற்க முடியாத ஒரு நிலையும் வந்துசேர்ந்திருக்கின்றது.

சமூக நீதிக்காகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுகின்ற அமைப்புகளும் தனிநபர்களும் அந்தப் போராட்டத்தினை தம்மில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். சமூக ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் தொழிற்படக்கூடிய விதங்களை ஆராய்ந்து அவை குறித்த பிரக்ஞையுடன் அமைப்புகள் இயங்குவதும் அமைப்பின் உறுப்பினர்கள் அந்தப் பிரக்ஞையை அடைவதற்கான முனைப்புகளை அமைப்புகள் முன்னெடுப்பதும் அவசியமானது.  இதில் இழைக்கப்படும் தவறுகள் அனைத்தும் ஒடுக்குமுறையாளர்களை வலுப்படுத்துவதோடு, சமூகநீதிக் கருத்துகளை முன்னெடுப்பவர்கள் மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும்.  மிகப்பெரிய விலைகளுடனும் கடுமையான ஏமாற்றங்களுடனும் கடுமையான மன உளைச்சல்களுடனும் இந்தப் பயணம் முடிந்திருக்கின்றது.  இங்கே பெற்றுக்கொண்ட பாடங்களுடன் சமூக நீதிக்கான பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.  விதை குழுமம் தொடர்பான இந்த விடயங்களை பொது வெளியில் உரையாடலுக்குக் கொண்டுவந்த தோழர்கள் அனைவருக்கும் தோழமையுடன் கூடிய  ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


---

அருண்மொழிவர்மன்

விதை குழுமம் தொடர்பான குற்றச்சாற்றுகளும் எனது நிலைப்பாடும்