ரஜனி திரணகமவை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடரும் அரசியல்

புலிப் பாசிட்டுக்களால் கொல்லப்பட்ட ரஜனி திரணகமவை முன்னிறுத்தி செய்யப்படும் போலி முற்போக்கு அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. ஒடுக்கும் அரசியலை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கடந்தகால போராட்டங்களையும் தியாகங்களையும் தொடர்ந்து மறுதளிக்கின்றனர். 

தேசியத்துக்காக தாமே போராடியதாக புலிகள்  எப்படிக் கட்டமைத்தனரோ, அதேபோலவே இந்த ஜனநாயகம் -  மனிதவுரிமை குறித்த இவர்களது பித்தலாட்டங்களும். இதை ரஜனி திரணகம மூலம் மேடையேற்றுவதன் மூலம், மக்களுக்காக போராடிய அரசியலும், வரலாறுகளும், தியாகங்களும் காணாமலாக்கப்படுகின்றது.

ஒடுக்கப்பட்டவர் வரலாறுகள் மறுக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் போலியான புரட்டு வரலாறுகள் கட்டமைக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தேறுகின்றது. 

ரஜனி திரணகம ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் கொல்லப்படவில்லை. அவரினது முறிந்தபனை நூல் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை அணிதிரட்டும் நோக்கில் எழுதப்பட்டதுமல்ல. 

மாறாக இலங்கையை மையப்படுத்திய, அமெரிக்க - மேற்கு ஏகாதிபத்திய நலன்களைச் சார்ந்தே - மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் செயற்பட்டது. இலங்கையில் தலையிட தேவைப்பட்ட மனிதவுரிமை தரவுகளைத் திரட்டிக் கொடுத்தது. எப்படி இந்தியா ஈழப்போராட்டத்தை பயன்படுத்தியதோ, அதன் மற்றொரு வடிவத்துக்காக ரஜனி திரணகம செயற்பட்டார்.  
  
ரஜனி திரணகமவை படுகொலை செய்த புலிகளின் இனவாத பாசிச அரசியல் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக இருந்ததோ, அதேபோன்று ரஜனி திரணகம . புலிகள் மற்றும் அரசு குறித்து முன்வைத்த  ஜனநாயகமும்  - மனிதவுரிமை  பற்றியவையும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்திருக்கவில்லை. 

அமெரிக்காவால் மறைமுகமாக நிதி - ஆயுத உதவி செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட புலிகள் குறித்த மேற்கத்தைய இறுதி அரசியல் முடிவுகளுக்கு, மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆவணங்களே வலுவான ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. 

இலங்கை அமெரிக்க மிசனரியின் பின்னணியிலான யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ரஜனி திரணகமவுக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து கவலைகள் இருந்ததில்லை. அவர் இலண்டனிலிருந்த போது, புலிகளின் பின்னால் இயங்கியவர். அவரின் சகோதரி நிர்மலாவின் புலி அரசியலுடன், சமாந்தரமாகப் பயணித்தவர்.

இலங்கை தமிழ் அரசியலில் அமெரிக்க மிசனரியின் தலையீடுகளுக்கு அப்பால், ரஜனி திரணகமவுக்கென தனியான அரசியல் நிகழச்சிநிரல் இருக்கவில்லை. 

இந்த வகையில் முறிந்தபனை நூலின் முதல் வெளியீடு, அமெரிக்க காங்கிரஸ்சே (அமெரிக்க பாராளுமன்றமே) வெளியிட்டது. அமெரிக்கக் காங்கிரஸ்சின் நூலகமே, இந்த நூலின் முதல் வெளியீட்டை யூலை 1988 இல் வெளிக்கொண்டு வந்ததுடன், இந்த நூலுக்கான சட்டரீதியான உரிமையையும் கொண்டிருந்தது. ரஜனி திரணகம வாழ்ந்த காலத்திலேயே, அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த  நூலும் வெளியானது. 

இந்த நூலைத் தயாரிப்பதற்கான நிதி ரீதியான உதவி ஆசியாவுக்கான மனிதவுரிமை அமைப்பும், அவுஸ்ரேலியா ஒன்றிணைந்த கிறிஸ்துவ அமைப்பு... உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளே வழங்கின. அந்தளவுக்கு 1988 இல் ஒரு சர்வதேச வலைப்பின்னல் கொண்ட ஒரு அமைப்பாகவே, மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இயங்கியது. 

இலங்கை வாழ் மக்களையோ, ஒடுக்கப்பட்ட மக்களையோ சார்ந்தல்ல. ஏகாதிபத்திய தேவைகளை, நோக்கங்களைப் பூர்த்தி செய்யவே புலி - அரசு மனிதவுரிமை மீறல்களைப் பேசினர்.      

அமெரிக்க பாராளுமன்ற நூலகத்தில் 1988 இல் ஆங்கிலத்தில் வெளியான முறிந்தபனை நூலின் தமிழ்ப் பதிப்பு 1996 இல் வெளியானது. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தமிழ் மொழியிலான இந்த நூல் 1988 இல் வெளிவரவில்லை, மாறாக புலியெதிர்ப்பு அரசியல் நோக்கில் 1996 இல் வெளியானது.

இந்த அரசியல் பின்னணியிலிருந்து தான் 11 சர்வதேச அமைப்புகள் இணைந்து கொடுக்கும் மாட்டின் விருதையும், பெருந்தொகை பணத்தையும், 2007 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பெற்றது. இவை அனைத்தும் அமெரிக்கா முன்வைக்கும் மனிதவுரிமை அடிப்படையிலேயே இயங்குகின்றன. 

மேற்கு ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் இலங்கையைக் கையாள, மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆவணங்கள் பயன்பட்டன. அதை பிரஞ்சு மொழிக்கு மொழி பெயர்த்து கொடுத்ததற்காகவே, சபாலிங்கத்தை 01.05.1994 இல் பிரான்சில் புலிகள் படுகொலை செய்தனர். சபாலிங்கத்தை இதனால் தான் புலிகள் கொன்றனர். புலிகள் தங்களது உண்மையான பாசிச முகத்தை மூடிமறைக்க, கொலைகள் மூலம் முனைந்தனர். புலிகள் குறித்து ஐரோப்பா கூட்டுத் தீர்மானங்கள் எடுக்க, சபாலிங்கத்தின் இந்த மொழிபெயர்ப்பு ஆவணங்களே உதவின.

சபாலிங்கம் கொல்லப்பட்டதற்கு முந்திய மாதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களைப் பாராட்டியும், துணிவைப் போற்றியும், உதவிகள் செய்யவும் ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. 

இப்படி ஏகாதிபத்திய தேவைக்காகவே மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உருவானதே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் இருந்தல்ல.

ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி 1986 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்  - மக்களும் போராடிய போது, ரஜனி திரணகம யாழ் பல்கலைக்கழகத்தில் தான் இருந்தார்;. இதன் போது, அவர் மாணவர்களுடன் இணைந்து போராடியவரல்ல.  
 
1980 இல் ரஜினி திரணகம யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ பிரிவில் உடற்கூறியல் விரிவுரையாளராக இருந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற்கூறியல் துறையில் பட்டப் பின்படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். படிப்பை முடித்துக் கொண்டு 1986 இல் இலங்கை திரும்பிய ரஜினி திரணகம, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார்.

ரஜனி திரணகம பொறுப்பேற்று இருந்த இக் காலத்தில் தான், 1986 நவம்பர் - டிசம்பர் மாதம் விஜிதரன் போராட்டம் நடந்தது. இதற்கு முந்தைய ஒரு வருட காலத்தில் பல ஜனநாயக போராட்டங்கள்  நடந்தது. யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை முற்றாக முடங்கி - மாணவர்கள் - மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிய காலம்;. இந்தக்காலத்தில் ரஜனி திரணகம மாணவர்களின் போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. 

இதன் பின் 1987 முற்பகுதியில் இரயாகரன் காணாமல் போன விவகாரம், 1988 இல் விமலேஸ்வரன் படுகொலையின் போதெல்லாம், ரஜனி திரணகம போராடிய மாணவர்களுடன் இருக்கவில்லை. 1987 இன் இறுதியில் இந்திய இராணுவத்துடன் புலிகள் யுத்தம் தொடங்கிய பின், யாழ் பல்கலைக்கழகத்தை மீள இயங்க வைப்பதில் தீவிரமாக தலையிட்ட ரஜனி திரணகம, ஒடுக்கப்பட்ட மாணவர்களுடனான அரசியலில்  தன்னை முன்னிறுத்தியது கிடையாது. 

நடந்த மாணவர் போராட்டங்கள் குறித்த முறிந்தபனை நூலிலுள்ள குறிப்புகள் அரைகுறையானவையும் - தவறுகளையும் கொண்டுள்ளது. அவர்கள் தமது சமகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் நடத்திய போராட்டத்தில் இருந்து விலகி இருந்ததையும், முறிந்தபனை நூல் தொகுப்பு முறையும் - தவறுகளும் பறைசாற்றுகின்றது.        

ரஜனி திரணகம யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான மேட்டுக்குடிகளின், புலி அல்லாத அமெரிக்க ஜனநாயகப் பிரிவை முன்னிறுத்தினார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இருக்காத ஒரே காரணத்துக்காகவே இன்று அவர் முன்னிறுத்தப்;படுகின்றார். இவர்கள் மேற்கத்தைய ஏகாதிபத்திய ஜனநாயகத்தையும், அது முன்வைக்கும் மனிவுரிமையையும் கொண்டாடும் புலியல்லாத வெள்ளாளிய மேட்டுக்குடிகளே. இவர்கள் திட்டமிட்டு ரஜனி திரணகமவை மட்டும் முன்னிறுத்துவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் கடந்த போராட்டத்தையும் - நிகழ்காலத்தில்   போராடுவதையும் மறுதளிக்கின்றனர்.

பி.இரயாகரன் -2023

விசுவாசிகளின் புலம்பல்கள் : முறிந்தபனை நூல் யாருக்காக எழுதப்பட்டது? 

அமெரிக்க பாராளுமன்ற நூலகத்தில் 1988 இல் ஆங்கிலத்தில் வெளியான முறிந்தபனை நூலின் தமிழ்ப் பதிப்பு 1996 இல் வெளியானது.