Tue10152019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் மலையக அரசியலில் மக்களின் நிலை

மலையக அரசியலில் மக்களின் நிலை

  • PDF

மலையக மக்களுக்கு 4000 வீடுகளை கட்டிக்கொடுக்கப் போவதாக செய்திகள் தற்போது மலையகத்தில் அடிபடுகிறது. இச் செய்தி மலையக மக்களின் கரிசனைக்கு பெரிதாக உட்படாத போதும் மலையக அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடவும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவல்களை சந்தித்து அது தொடர்பாக கலந்துரையாடும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில தலைவர்கள் வெகு விரைவில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவல்களை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலைமைக்குக் காரணம் வழங்கப்படும் வீடுகள் முழுமையாக அரசியல் சகாய அடிப்படையில் இ.தொ.க சார்பானவர்களுக்கு வழங்கப்படுவதற்கான ஏது நிலைகள் இருக்கின்றது என மற்றைய மலையக தொழிற்சங்கத் தலைமைகள் கருதுவதனாலாகும். அவ்வாறு கருதுவதற்கு நியாயங்கள் உண்டு. இந்திய அரசு 4000 வீடுகள் வழங்குவதாக கூறப்படுகிறது. இன்றைய அரசாங்கம் 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனைக் கொள்கைப் பிரகடனத்தில் லயன் முறைகளை ஒழிப்பதாக வாக்குறுதியளித்து 2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் ஊடாக 50000 மாடி வீடுகளை கட்டித்தருவதாக கூறியுள்ளது.முழு சமூகமாக காணி, வீட்டுரிமைகளை மறுக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்தும் பொதுவில் மலையக மக்களிடமிருந்தும் வீட்டுரிமையை ஒரு உரிமை என்ற அடிப்படையில் நிலைநிறுத்திக்கொள்வதற்கான கருத்தாடல் இடம்பெறுவதாக இல்லை.

இதற்கான காரணம் என்ன என தேடுவது மலையக அரசியல் சூழ்நிலையை விளங்குவதற்கும் மக்களின் நிலையை அறியவும் மலையகத்தில் மக்கள்மயப்பட்ட அரசியல் பாதைக்கான தடைகளை அறிவதற்கும் இக் வழிவகுக்கலாம்.

 


நாம் இன்று வாழும் உலகம் சிக்கலான ஒருங்கிணைவுகளின் கூட்டு. இந்த சிக்கலான ஒருங்கிணைவுகளுக்கிடையில் முறைமைப்படுத்தப்பட்ட ஒழுங்குகளும் அதற்கு ஏற்ற ஒழுங்கீனங்களும் இருந்து வருகின்றன. எனவே ஒழுங்குகளையும் ஒழுங்கினங்களையும் கொண்ட கூட்டினைவாக உள்ளது. அதாவது இன்றைய நவ தாராள பொருளாதார ஒழுங்கில் சந்தையே பொருள்ஃசேவைகளின் உற்பத்தி அளவு, தன்மை, பரிவர்த்தனை என்ற மனித செயற்பாடுகளின் தீர்மானகரமான அடிக்கட்டுமானத்தை நிர்ணயிக்கின்றன. சந்தையுடன் அரசும் இணைந்து அவற்றில் அராஜக நிலை தோன்றாது இருப்பதனை உறுதி செய்து வருகின்றன. அதாவது மத்தியமயப்படுத்தப்பட்ட ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிது. மறுபுரம் உற்பத்தி தவிர்ந்த ஏனையவற்றில் குறிப்பாக உற்பத்தியில் ஈடுபடும் மக்களுக்கான தேவைகளில் அதாவது உபரியை மீள்பரிமாற்றம் செய்வதில் தொடங்கி கல்வி, சுகாரதாரம், போக்குவரத்து, மின்சாரம் நீர் போன்ற தேவைகளை பெற்றுக் கொள்வதில் அராஜக நிலையைத் தோற்றுவித்துள்ளனர்.

இந்நிலையில் உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறமும் மக்களின் அடிப்படை சேவைகளின் கட்டண அதிகரிப்பு மறுபுரமும் இடம்பெற்றுவருகிறது. இது இன்றை அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக உள்ளது.

எனவே இன்று சம்பள உயர்வு கேட்டுப் போராடுவதனை தொழிலாளர்களின் வாழ்வியலாக அதேசமயம் அப் போராட்டங்களை முறியடிப்பதற்கு சட்ட ஒழுங்கை மீறி ஆட்சியாளர் செயற்படுவதனையும் அதனை பல வழிகளில் நியாயப்படுத்தும் பரப்புரை செயற்படுகள் ஒழுங்கு முறையாக மாற்றியுள்ளது. எனவே தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடுவது ஒரு அருவறுக்கத்தக்க செயலாக மக்களுக்கே திருப்பி சொல்லப்படுவதும் அதேநேரம் குறித்த கம்பனிகள் பெறும் இலாபத்தை சிலாகிப்பதற்கும் தேவை ஏற்பட்டால் மறுப்பதுமாக பரப்புரைகள் இடம்பெறுகின்றன. உற்பத்தியியல் மத்தியமயப்படுத்தப்பட்ட முறைமையையும் உற்பத்தியின் பலன் பகிர்வு என்பது அராஜகமாக இருக்கும் சூழ்நிலையில் அந்த அராஜக நிலையை நிலைநிறுத்தி வைத்துக்கொள்வதற்கு தொழிலாளர்கள், உழைப்பாளர்களின் உணர்வு நிலையை, குறித்த அராஜகத்தை ஏற்கச் செய்யும் மனநிலை கொண்டதாக உருவாக்க வேண்டிய தேவை நவீன ஆட்சியாளர்களுக்கு காணப்படுகின்றது.

இந்த மத்திய ஒழுங்கும் அராஜகமும் சேர்ந்து சமூக கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. உற்பத்திப் பெருக்கத்துடன் நாட்கூலி பெறும் தொழிலாளர்களும் ஆடம்பரப் பொருட்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவற்றை – அவர்கள் பயன்டுத்தும் பாவிக்கும் ஆடம்பரப்பொருட்களின் தரம் விலை குறைவு என்ற போதும்-   வாங்குவதனை இயலுமாக்கியுள்ளது. எனவே தொழிலாளர்கள் இன்று இழப்பதற்கு ஒன்றும் அற்றவர்கள் என்ற வரையறைக்கு பொதுவில் உட்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். எனவே தொழிலாளர்களை இன்று எப்படி வரையறுப்பது? தொழிலாளர்கள் இழப்பதற்கு சில பொருட்களை கொண்டுள்ள போதும் அவர்கள் இன்றும் ஏழைகளே. ஆனால் இன்று வெளிவெளியாக ஏழைகள் என்று அழைக்க முடியாத தோற்றப்பாடு காணப்படுகிது. எனினும் இன்று “புதுரக ஏழைகள்” உருவாகியுள்ளனர். ஆடம்பர வாழ்வு வாழ்வதாக தோற்றப்பாடு இருக்கின்றபோதும் பழைய ஏழைகள் போலவே கடன் தொல்லையில் இவர்கள் அவதியுறுகின்றனர். அடிப்படை தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம் என அனைத்து தேவைகளையும் பெற்றுக்கொள்ள அன்றாடம் போராட்டத்தை நடாத்தியே வாழுகின்றனர்.

இந்த புதியரக ஏழைகள் பழைய ஏழைகள் போல் தமது ஏழ்மையை, ஏழ்மையாக கருத துணிவதில்லை. அதற்கு ஏற்ற வகையிலான பழையது, புதியதுமாகிய கருத்தியல்கள் ஏழ்மையையும் ஏழ்மைக்கு ஏதுவான முறைமையை கேள்விக்குட்படுத்துவதில் இருந்து அவர்களை அந்நியப்படுத்தி வருகின்றது. இது ஒவ்வொரு தனிமனிதனினதும் சமூகங்களிலும், நாடுகளிலும் அதன் சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்று அடிப்படைகளுக்கு ஏற்ப நிலைபெற்றுள்ளது. இலங்கையில் இந்நிலை எல்லா பிரதேசங்களிலும் பொதுமைப் பண்புகளுடனும், விஷேட இயல்புகளுடனும் இருக்கிறன.

இச் சூழ்நிலை மலையகத்தில் அதற்கே உரித்தான சமூக சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று அடிப்படைகளுடன் நிலவி வருகிறது. மலையகத்தில் புதிய ரக ஏழைகளாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள், தனியார் துறையில் பணியாற்றுபவர்கள, முறைசாரா தொழில் துறையில் பணியாற்றுபவர்கள் என சகலரும் உட்பட்டுள்ளனர்.

எனவே இந்த புதியரக ஏழைகளே முழு மலையகமுமே கொண்டுள்ளது. இவர்கள் பொருள் உற்பத்தியில் அல்லது சேவை உற்பத்தியல் ஈடுபடுகின்றவர்கள். அரச துறையில் பணியாற்றுபவர்களின் ஏழ்மைக்கும் தோட்டத் தொழிலாளர்களின்  ஏழ்மைக்கும்  இடைவெளிகள் உண்டு. எனினும் பொதுவில் அனைவரும் புதியரக ஏழைகளே.

தாங்களை புதியரக ஏழைகள் என்பதை சேவை தொழிற் துறையில் உள்ளவர்கள் அதே பொருளில் அறிந்திருக்காவிட்டாலும் அதனை விளங்கியுள்ளனர் எனினும் அதனை வெளிவெளியாக பிரகடனம் செய்ய விரும்புவதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் ஏழ்மை தவிர்க்கப்பட முடியாதது என்ற அவலத்தில் இருக்கின்றனர். மலையக மக்கள் தங்களுக்கான அரசியல் பயணத்தை இந்த புதியரக ஏழ்மையை உருவாக்கிய உற்பத்தியில் மத்தியமயப்பட்ட ஒழுங்கு முறையையும் உற்பத்தி தவிர்ந்த ஏனைய அனைத்திலும் அராஜகத்தையும் நிராகரித்து இரண்டிலும் ஒழுங்கை பேணுவதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற போதும் நிலைமை இதற்கு மாறுபாடாகவே உள்ளது. மக்கள் தெரிவு செய்யும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது அடிப்படையில் தங்களை பிரதிநித்துவம் செய்ய முடியாத பிரதிநித்துவமாகியுள்ளது.  (misrepresentation)

மக்களின் தவறான பிரதிநிதித்துவத்திற்கு அவர்களின் மீது திணிக்கப்பட்டுள்ள கருத்தியல்கள் காரணமாகியுள்ளன. அக்கருத்தியல்கள் இன்றைய அராஜக நிலையை நிலைநிறுத்துவதனை நோக்காக கொண்டவைகளாக உள்ளன. மலையக அரசியல் தலைமைகள் அராஜாக நிலைமைகள் பற்றி கவலைப்பட போவதில்லை. ஏனெனில் அந்த அராஜக நிலைக்குள்ளேயே அவர்களின் இருப்பு நிலை கொண்டிருக்கின்றது.

இந்த அராஜக நிலையில் மலையக அரசியல் தலைமைகள் மக்கள் சார்பாக பேசிக்கொண்டே மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே செயற்பட வாய்ப்பை பெற்றுக் கொள்கின்றனர். ஏனெனில் மக்கள் அவற்றை இயல்பானது என்ற பார்க்கும் அவல பண்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர். மலையக மக்களின் வாழ்வியில் அவலங்களை வெளிப்படுத்தும் ஒரு மலையக இலக்கியவாதியினால் அவலத்துக்கு காரணமானவர்களுகடன் உறவு கொள்வதற்கும் அந்த உறவை பேணிக் கொண்டே மலையக மக்களைப் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் முடிகிறது.

இது சிக்கலான படிமமாக தோன்றினாலும் அதில் ஒழுங்கு ஏற்கனவே சொன்னதுதான். அதாவது மலையக மக்கள் மீதான சுரண்டல் ஒடுக்குமுறை உள்ளும் புறமுமாக தொடர்வதற்கான உற்பத்தியில் மத்தியமயப்பட்ட ஒழுங்கும் உற்பத்தி தவிர்ந்தவற்றில் அராஜகமுமே இதன் ஒழுங்கு.

எனவே இந்த அரசியல் சூழலில் ஒரே கொள்கை தளத்தை உடைய மலையக அரசியல் தலைமைகள் தங்களுக்கிடையில் எதிரும் புதிருமாக போட்டிப் போடுவதும் சண்டையிடுவதும் சந்தையில் ஒரே பொருளை விற்பவர்கள் இரு வேறுபட்ட உத்திகளுடன் தொலைக்கட்சியில் விளம்பரம் செல்வதற்கு சமம். மக்கள் ஒரே பொருளை வாங்குவதற்கு தயாராக இருப்பதே மலையக மக்களின் அரசியல் பிரச்சினையின் அடிப்படையாக உள்ளது. எனவே இன்றைய மலையக மக்களுக்கான அரசியல் என்பது இன்றைய பொருளாதார கட்டமைப்பினுடாக அராஜகத்தினை நிலை நிறுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள கருத்தியில்களை தகர்க்கும் பணியில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே குறித்த கருத்தியில்களினால் உருவாக்கப்பட்டுள்ள பண்பாட்டை எதிர்ப்பதாகவும் மாற்று பண்பாட்டை கட்டமைப்பதனை அடிப்படையாகவும் கொண்டதாகவே அமைய வேண்டும்.

மலையகத்தில் இருந்து - விஜயகுமார்

Last Updated on Wednesday, 12 March 2014 14:07