அரசியல்_சமூகம்

நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு தெற்கில் இருந்து தமிழ் மக்களின் உரிமைகளிற்கு ஆதரவாக குரல்கள் எழுகின்றன. ஒன்றாய், நூறாய், ஆயிரமாக அவை சேர்ந்து கொள்கின்றன. தமிழனில்லை, சிங்களவனில்லை நாம் மனிதர்கள் என்று அவை மானுடத்தை பாடுகின்றன. வாழ்வின் சுதந்திரத்தை, சமத்துவத்தை அவை ஓங்கிச் சொல்கின்றன.

இலங்கையின் அதிகாரங்களை, பொருளாதாரங்களை அனுபவிக்கும் கூட்டம் இலங்கை மக்கள் ஒன்றுபடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. எந்த ஒரு முணுமுணுப்பையும் பெரும் கூச்சலிட்டு அது அடக்குகிறது. அதனது காவல்நாய்கள் கண் இமைகள் மூடாமல் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கடைவாய்பற்களை காட்டி உறுமுகின்றன. ஆனால் எந்தவொரு தாக்கத்திற்கும் அதற்கு எதிரான மறுதாக்கம் இருக்கும் என்பதை அது மறந்து விடுகிறது. கள்ளர் கூட்டம் அதிகாரத்தை சுவைப்பதற்காக ஒன்று சேரமுடியுமாயின் எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையுடன் களத்தில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் இணைய மாட்டார்கள்.

சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களிற்காகவும், தமிழ் மக்களினது உரிமைகளிற்காகவும் வீதிகளிற்கு வந்து போராடிய செய்திகள் சிங்கள, ஆங்கிலப்பத்திரிகைகளில் வராமல் சிங்கள பேரினவாதிகள் கவனமாக பார்த்துக் கொண்டனர். சிங்கள பேரினவாதிகளின் இனவெறி அரசியலிற்கு அடிப்படையான தமிழர் வெறுப்பு என்ற பொய்மூட்டை அவிழத் தொடங்குவதை ஆரம்பத்திலேயே நிறுத்துவதற்காக எல்லாவிதமான இருட்டடிப்புகளையும், எல்லாவிதமான அடக்கு முறைகளையும் பிரயோகித்தனர்.

ஒரு சர்வாதிகார அரசு அப்படித்தான் நடந்து கொள்ளும். பிணம் தின்னும் மகிந்த அரசிற்கு கொலைகளும், மக்களின் குருதியில் கை நனைத்துக் கொள்ளுவதும் புதியதும் இல்லை, புதுமையும் இல்லை. ஆனால் ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்று படம்காட்டும் தமிழ் கூட்டமைப்பினரும் இந்த போராட்டங்களை காணாதது போல நடித்தனர். ஏனெனில் சிங்களவரின் தோலில் செருப்பு தைப்போம், ஆண்ட தமிழன் மீண்டுமொரு முறை ஆண்டால் என்ன என்பது போன்ற தமிழ் இனவாத பேச்சுக்கள் மூலம் உணர்ச்சிகளை தூண்டி தமிழ் மக்களை இரத்தம் சிந்த வைத்து விட்டு தாங்கள் பாரளுமன்றத்தில் பதவிசுகம் அனுபவிப்பதற்கு தமிழ்-சிங்கள மக்களது இணைவு தடையாக வரும் என்பதும் அவர்களின் இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதும் இனவாத அரசியலில் இரண்டறக்கலந்த அவர்களிற்கு நித்திரையில் கூட மறக்காமல் இருந்திருக்கும்.

சிந்தனைச்சிற்பிகள் சிலர் அரசு பழி வாங்கும், கொலை செய்யும், மக்களே அடங்கிப் போங்கள், மாணவர்களே அத்து மீறாதீர்கள் என்றார்கள். இலங்கைத்தீவு எங்கும் இலங்கை அரசுகளாலும், இந்திய அரசுகளாலும் கொல்லப்பட்டவர்கள் பலரும் அப்பாவிப் பொதுமக்கள் தான், அடங்கி இருந்தவர்கள் தான். ஆனாலும் கொல்லப்பட்டார்கள். ஆயுதம் செய்பவர்களிற்கு போர்கள் வேண்டும். போர் செய்யும் அரசுகளிற்கு வெற்றிகள் வேண்டும். வெற்றிகளிற்கு பலிகள் வேண்டும். பலியாடுகளின் சம்மதம் கேட்டு கொலைகள் நடப்பதில்லை.

கொலைகாரர்கள் உயிர்ப்பிச்சை இடுவதில்லை. கெஞ்சினால், எதிர்ப்பு காட்டாமல் அஞ்சினால் அவர்கள் மிஞ்சுவார்கள். அதனால் தான் மக்களை வாழ விடு என்று ஒரு முழக்கம் எழுந்தது. லலித், குகன் என்ற இரு மனிதர்களை, போராளிகளை விடுதலை செய் என்று அது முழங்கியது. தமிழனில்லை, சிங்களவனில்லை நாம் மனிதர்கள் என்று அவை மானுடத்தை பாடுகின்றன. வாழ்வின் சுதந்திரத்தை, சமத்துவத்தை அவை ஓங்கிச் சொல்கின்றன