புலிகளின் அழிவின் பின், புலம்பெயர் தேசங்களின் பல திடீர் அரசியல்வாதிகளும், திடீர் மார்சிசவாதிகளும் தோன்றினார்கள்.புலிப்பினாமிகளை விட இப்போ குறுந்தேசியத்தின் ஒட்டு மொத்த விற்பனையாளர்களாக இவர்கள் தான் இயங்குகிறார்கள்.

 

இது ஒருபக்கமிருக்க, புலம்பெயர் தேசங்களில் தலித்தியம் கதைத்தபடி இலங்கை அரசுக்கு கரசேவை செய்யும் கும்பல், இந்திய குழப்பவாதி ஆனா மார்சை யாழ்பாணத்துக்கு அனுப்பி, முன்னாள் புலி இலக்கியவாதிகளுக்கு (அதாவது புலிகளின் பிரசார பிரிவுக்கு) தேசியம், தலித்தியம் மற்றும் ஜனநாயகம் கற்பிக்க போகிறார்களாம். இந்திய குழப்பவாதி ஆனா மார்க்ஸ் யாழ்பாணத்தில்  போய் இறங்குவதற்கு முன்னமே , முன்னாள் புலிகளின் பிரசார தலைமைகளில் முக்கிய நபர் ஒருவர் தான் பன்முகவாதி , ஜனநாயகவாதி , மார்சிசவாதி , குறுந்தேசியத்துக்கு எதிரானவன் என்னை நம்புங்கோ , நம்புங்கோ என தனது இணையதளத்திலும் , முகபுத்தகத்திலும் கதறி அழுகிறார் .

ஆனால் இதெல்லாவற்றையும் முழுங்கி ஏப்பம் விடும் மிக மிக ஆச்சரியமான செய்தியொன்றை, உளவு நிறுவனங்களுக்குதண்ணீர் தூக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு புலம்பெயர் அரசசெய்தி தளமான தேனி வெளியிட்டுள்ளது . அதில் இருந்து ஒரு நறுக்கு இது :


"தமிழினியுடன் ஒரு கலந்துரையாடல் நடத்திய எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி அடேல் பாலசிங்கம் ஆகியோர், தமிழினியால் கவரப்பட்டு, அரசியல் பிரிவுக்கு அவரை மாற்றம் செய்வித்தனர். ..........அடேல் பாலசிங்கத்தினால் பெரிதும் செல்வாக்கு செலுத்தப்பட்ட தமிழினி ஒரு தீவிர பெண்ணியவாதியாக மாறினார்."
".............எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டமைப்புக்குள்ளேயே சமத்துவத்துக்காக போராடி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த தைரியமுள்ள பெண்ணியவாதியாக தமிழினி திகழ்ந்தார். முன்னர் பெண்களின் அரசியற் பிரிவு, பிரதான அரசியற் பிரிவின் ஒரு பகுதியாகவே நடத்தப்பட்டு வந்தது. இப்போது தமிழினி சுதந்திரமாக கடமையாற்றுவதற்காக போராடி அதைப் பெற்றிருந்தார். அவர் மேலும் தனது பதவிக்கான அந்தஸ்து அடையாளத்தையும் பெற்றிருந்தார். ஒரு டபிள் காப் வாகனம் அதை தொடரும் வாகன அணி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் என அந்த அந்தஸ்து அடையாளம் கொண்டிருந்தது......"

மேற்படி செய்தி நறுக்கில் கூறியுள்ள விடயம் , மற்றும் ஆனா மார்ச்சின் யாழ்பாண வருகை போன்றவற்றின் பின்னணி என்ன ?

இது யாரின் நிகட்சி நிரலுக்கேற்ப அரங்கேற்றபடுகிறது ?

கிழக்கில் சில வருடங்களுக்கு முன் புலம்பெயர் இலங்கை அரசுசார் தலித்தியம் கதைதோர், மற்றும் சில "இலக்கியவாதிகள்" தம்மை கிழக்கு அரசியலில் நிலை நிறுத்த  கருணாவும் பிற்பாடு பிள்ளையானும் வெகுவாக உதவினார்கள் . கருணாவை கிழக்கில் விடிவெள்ளி என வர்ணித்தார்கள் . கிழக்கில் சாதி ஒடுக்கு முறைக்கும், யாழ்பாணியதுக்கும் கருணா மூலம் சாவு மணியடிக்க போவதாக முழங்கினார்கள். சில காலத்தின் பின் கருணா சுயதேவைக்காக தன்னை விலை கூறி விற்றபின், பிள்ளையானை தலையில் வைத்து கொண்டாடினார்கள். உலகத்திலேயே பதவிக்கு வந்த குழந்தைப்போராளி என பிள்ளையானுக்கு தூபம் போட்டு ஆராதனை செய்தார்கள், கிழக்கு தேசியத்தில் தலைமகன் என பிள்ளையானை புகழ்ந்து தள்ளினார்கள் மேற்படி புலம்பெயர் தலித்திய - இலக்கிய - அரசுசார் கும்பல். இந்த கும்பலின் இந்திய இலக்கிய வட்டத்தை சேர்ந்த அலோசகர்கள் சிலரும் இலங்கை சென்று  பிள்ளையானை தரிசித்து அருள் பெற்றார்கள் .

இன்று இதன் வளர்ச்சியால் மகிந்த அரசின் இடதுசாரி முகமூடியான வாசுதேவ நாணயகாரவை பாரிசுக்கு அழைத்து தேசிய பட்டியலில் "தலித்துகளுக்கு" குறைத்து ஒரு பராளுமன்ற ஆசனமாவது தரவேண்டுமெனவும், தலித்திய மேம்பாடுக்குஒரு மந்திரி தேவை எனவும், அதற்கு உதவுமாறும் அவரிடம் கோரிக்கை வைத்தார்கள். அத்துடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றினால் தேசிய இனபிரச்னையை முறியடிக்கலாம் என வாசு தேவ நாணயகாரவுக்கு ஆலோசனை சொன்னார்கள். மகிந்தவுக்கும் இந்த ஆலோசனையை கூறுமாறு வாசுவை வேண்டிக்கொண்டார்கள்.

இப்போ அதே கும்பலை சேர்ந்த யாழ்பாணிகளுக்கும், அரசசார்பு கும்பலுக்கும் முன்னாள் புலிகளின் தலைமையில் இருந்தவர்களின் உதவியும் , அறிவுசார் புலமையும் , அவர்களின் வரலாறும் தம்மை இலங்கை அரசியலின் மறுபடியும் நிலை நிறுத்த தேவைப்படுகிறது . இதேவேளை, பாசிசபுலிகளுக்கு தலைமை தாங்கி, அதன் அரசியலுக்கு துணைபோய் கொலை , கொள்ளை , பெண்ணொடுக்குமுறை, என அனைத்து சமூகவிரோத செயலில் ஈடுபட்ட பலருக்கு இப்போ புது அடையாளங்கள் தேவைப்படுகிறது. இதன் அடிபடையில் பன்முகவாதி, ஜனநாயக வாதி, தலித்தியவாதி, முற்போக்கு இலக்கியவாதி, பின்நவீனத்துவ எழுத்தாளர் போன்ற பட்டங்களையும் அடையாளங்களையும் அவர்களுக்கு வழங்குகிறார்கள், புலிகளின் அழிவுக்கு இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்பட்ட மேற்படி புலம்பெயர் தலித்திய - இலக்கிய - அரசுசார் கும்பல்.

இதன் தொடர்சியான வேலை திட்டத்தின் அடிப்படையிலேயே , ஆரம்பத்தில் கூறியது போல ஆனா மார்க்ஸ் இன் யாழ்பாண வருகை உள்ளது. ஆனா மார்க்ஸ் எவ்வாறு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நிறபிரிகை பத்திரிகை மூலமும் , தமது கைத்தடிகள் மூலமும் பல பத்து இடதுசாரி சக்திகளை சீரழித்ததுடன், தாற்காலத்தில் இலங்கை அரசுக்கு மிக உதவியாக புலம்பெயர் நாடுகளில் இயங்குபவர்களையும் எவ்வாறு உருவாக்கினார் என்பது ரகசியமான விடயமல்ல . யாழ்பாணம் செல்லும் ஆனா மார்க்ஸ் ‘தேசியமும் தலித்தியமும்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இதே தலைப்பையும் , அதன் உள்ளடக்கத்தையும் வைத்து தான் புலம்பெயர் தேசங்களில் சீரழிவை மேற்கொண்டார் . அதே வேலையே இப்போ நமது தேசத்தில் செய்யவுள்ளார் ஆனா மார்க்ஸ்.

இதே போன்று தான் இப்போ நடந்தேறும் தமிழினியின் விடுதலையும் , அவருக்கு வழங்கப்படும் பெண்ணியவாதி என்ற

பட்டமும். இன்னும் சில காலத்தில் அல்லது அடுத்தவருடம் நடக்கவிருக்கும் வடமாகாண தேர்தலில் தமிழ்பெண்களின் பிரதிநிதியாக , பாசிச அரசின் ஊதுகுழலாக பிரச்சாரம் செய்ய தமிழினி களத்தில் இறக்கப்படலாம். மேற்படி யாழ்பாணிய புலம்பெயர் தலித்திய - இலக்கிய - அரசுசார் கும்பல், இந்தியாவின் மாபெரும் பெண்ணியபோராளி, எழுத்தாளர், கவிதாயினி, திரைப்படஇயக்குனர் லீனா மணிமேகலையை இலங்கைக்கு அழைத்து, தமிழினி தான் இலங்கையின் முன்னிலை பெண்ணியபோராளி நிருபிக்க ஆவணப்படம் கூட எடுக்கலாம்.

இவ்வாறு அரசியல் சீரழிப்பு, மற்றும் மக்கள் விரோத அரசியலுக்கு தத்துவ முண்டுகொடுத்து மக்கள் எதிரிகளை காப்பாற்றுவதையே தொழிலாக கொண்ட ஆனா மார்க்ஸ்சின் இலங்கை வருகை பாரதூர விளைவுகளை எதிர்காலத்தில் எமது தேசத்தில் ஏற்படுத்தலாம். அதேபோன்றதே தமிழினியில் விடுதலையில்/ புனர்வாழ்வின் பின்னாலுள்ள அரசியலும்.இவ்வரசியல் இலங்கை பாசிச அரசுக்கும், யாழ்பாணிய புலம்பெயர் தலித்திய - இலக்கிய - அரசுசார் கும்பலுக்கு மட்டும்லாபமாக அமையும். இதற்கெதிராக  முற்போக்கு தேசிய சக்திகளும் , சாதி எதிர்ப்பு போராட்ட சக்திகளும் , பெண்ணியர்களும்

உடனடியாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.