Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொண்டாட்டங்கள் காட்சிக்காக கொண்டாடப்படுகின்றது. இந்தக் காட்சிக்காக நடிப்பதை மகிழ்ச்சி என்கின்றனர். தாம் நடித்ததை மீளப் பார்ப்பது தமக்கு மகிழ்ச்சி என்கின்றனர். ஆக போலியான ஒரு நாள் வாழ்க்கை, வாழ்நாள் மகிழ்ச்சியாக்கப்படுகின்றது. இப்படி தங்களை அறியாமல் மற்றைய நாட்கள், மகிழ்ச்சியற்ற நாட்களாக்கப்படுகின்றது. இப்படி இதற்கு வெளியில் மகிழ்ச்சியை காணமுடியாத பகட்டுத்தனத்தில் தான், சம்பிரதாயங்களும் சடங்குகளும் விபச்சாரம் செய்யப்படுகின்றது.

 

 

 

எளிமையில் அழகையும், தன் சொந்த இயல்பில் மகிழ்ச்சியையும் காணமுடியாத மனவக்கிரங்களுக்குள், மகிழ்ச்சி பற்றி கற்பனைக் கனவுகளுடன் மகிழ்ச்சிக்காக போலியாக நடிக்கின்றனர்.

மேல் உள்ளவனுடன் ஒப்பிட்டு உருவாக்கும் போலி வாழ்க்கை, கீழ் உள்ளவருடன் ஒப்பிட்டு தன் மகிழ்ச்சியை உருவாக்குவதை வெறுக்க வைக்கின்றது. மகிழ்வைத் தேடி நடிக்கின்றனர். சினிமா காட்சிகளை மையப்படுத்தி நடிக்கும் ஆடம்பரமான வக்கிரக் கூத்து கொண்டாட்டங்களாக அரங்கேறுகின்றது. உங்களைப் போல் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் வாழ்க்கை தான் மகிழ்ச்சியாக இருக்கின்றதா? நடிப்பதை மகிழ்சியாக கொண்டபின், பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் நடிக்கத் தொடங்கிவிடுவர்.

இந்த நடிப்பை பெரும்பாலும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மேல் திணிக்கின்றனர். தங்கள் சொந்த குறுகிய வக்கிரங்களை இப்படித்தான் அடைகின்றனர். சமூகம் இந்தப் போலித்தனத்தின் பின் மந்தைகள் போல் ஆட்டிப்படைக்கப்படுகின்றனர்.

உற்றார் உறவினர் நண்பர்களுடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய கொண்டாட்டங்கள், அதைச் சுற்றிய சடங்குகள் இன்று போலியான நடிப்பை மையப்படுத்தி சீரழிந்துவிட்டது. புலம்பெயர் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திய காலத்தில், சடங்குகள் சம்பிரதாயங்களை முன்னிறுத்திக்கொண்ட கொண்டாட்டங்கள், பணத்தைக் குறிவைத்து தான் நடந்தேறி வந்தது.

இது இன்று படிப்படியாக ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் கூத்தாக மாறியிருக்கின்றது. இதற்கான காட்சிக்காக நடிப்பதே, கொண்டாட்டமாகின்றது. ஆக ஒரு சினிமாக் காட்சி படமாக்கப்படுகின்றது. கொண்டாட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டவர்கள் நடிப்புக் காட்சியை பார்க்க கோரப்படுகின்றனர். ஓரு சினிமா சூட்டிங் காட்சி அரங்கேற்றப்படுகின்றது. இந்த படமாக்கல் என்பது, எவ்வளவு போலியாக நடிக்கப்பெறுகின்றதோ, அதுதான் படமாக்கலின் வெற்றி. படுமெடுத்தல் என்பது நடிக்க வைத்தலில் தொடங்கி, கவர்ச்சியாக படமாக்குவது வரையான வக்கிரத்துக்கு உட்பட்டது. ஒரு பெண்ணை நெளிவு சுழிவுகளுடன் படமாக்குவது மூலம், வக்கிரமாக காட்சியாக்கப்படுகின்றாள். இதுதான் சினிமாக் காட்சியின் ஆன்மாவும் கூட. அதைத்தான் தன் பிள்ளையிடம் பெற்றோர் எதிர்பார்க்கின்;றனர் என்றால், இதுதான் படமாக்கப்படுகின்றது.

அனைத்துவிதமான கொண்டாட்டங்களிலும் இதுவே காணப்படுகின்றது. வீடியோ, போட்டோ எடுப்பவர்களை மையப்படுத்தி, காட்சிகளும் ஆடம்பரங்களும் தற்பெருமைகளும் படமாக்கப்படுகின்றது. சினிமா காட்சிகளை ஒத்த படங்களை மையப்படுத்தி நடிக்கும், நடிக்கவைக்கும் கூத்துக்குப் பெயர் திருமணம், பிறந்தநாள், சாமர்த்திய சடங்குகளாகின்றது.

இங்கு இதை படமாக்குவோரோ, சினிமா காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட உடல் அசைவுகளை ஏற்படுத்தி செயற்கையான காட்சிகளை தயாரிக்கின்றனர். இதற்கு வெளியில் இவர்களுக்கு இந்தத் துறையில் எந்த அறிவும் இருப்பதில்லை. இதில் அவர்களுக்கு உள்ள வக்கிரமான பார்வையும் கண்ணோட்டமும் தான், இந்தத் துறையில் உள்ள அறிவாகும்;. அந்த காட்சியை மீள எடுக்கத் தூண்டும் மனவக்கிரம் மீளக் காட்சியாக்கப்படுகின்றது. இயற்கையான மனித உணர்வுகளை தத்ரூபமாக காட்சியாக்க முடியாதவர்கள், செயற்கையாக சினிமா வெளிப்படுத்தும் வக்கிரமான காட்சிகளை படமாக்குகின்றனர். இந்தக் காட்சியின் அசைவியக்கம் பாலியல் சார்ந்த வக்கிர உணர்வுதான். இப்படி சடங்குகளும் கொண்டாட்டங்களும் நடிக்கும் காட்சியை மையப்படுத்திய, சினிமாவைச் சுற்றிய ஆடம்பரக் காட்சிக்குள் குறுகிவிட்டது.

நடக்கும் சினிமா சார்ந்த கூத்தையும், நடிப்பவர்களின் ஆடம்பரத்;தையும் பகட்டுத்தனத்தையும் பார்க்க, உற்றார், உறவினர் நண்பர்கள் அழைக்கப்படுகின்றனர் தங்கள் நடிப்புக் காட்சியை பார்த்தவர்களுக்கு உணவிட, கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். இப்படி உற்றார் உறவினர் நண்பர்கள் கூடி மகிழ்ந்த சடங்குகள், கொண்டாட்டங்கள், கூடி விருந்துண்ணல் என்பது சூட்டிங்காகிவிட்டது. தங்கள் நடிப்பை பார்க்க வந்த, அதில் நடிக்க வந்தவர்களுக்கு, அதாவது தங்கள் சூட்டிங்குக்கு வந்தவனுக்கு உணவு போடவென கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். இந்த நடிப்பை பார்க்க காசு கொடுப்பதுடன், நானும் இதுபோல் நடிக்கும் ஒரு மந்தையாக மாறிய மனவுணர்வுடன் இது தொடருகின்றது.

இந்த நடிப்பு சார்ந்த கொண்டாட்டங்களின் பின்னிலையில், இதை உருவேற்றி சம்பாதிக்கும் வியாபாரிகள் கூட்டம் இயங்குகின்றது. ஜயர் முதல் மண்டபம் வரை சட்டவிரோத தொழில் கும்பலால் நிர்வகிக்கப்படுகின்றது. இங்கு இதில் திட்டமிட்டே கூட்டு சேர்ந்துக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வண்ணம், இந்த நடிப்பைச் சுற்றிய காட்சிபடுத்தலைக் கூட வியாபாரிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

வாழ்வின் தங்கள் இலட்சியமாக இந்த நடிப்பு சார்ந்து காட்சிகளை படமாக்கி கொள்வதன் மூலம், பெரும் செலவு செய்து அவர்கள் அடைவது என்ன? தங்கள் போலியான மனப்பாங்கையும், தங்கள் ஆடம்பரமான பகட்டுத்தனத்தையும் தவிர வேறு எதையும் அல்ல. இதுதான் மகிழ்ச்சி என்று பீற்றிக்கொள்கின்ற தற்பெருமையைத் தவிர, இந்த ஒரு நாள் நடிப்புக்கு வெளியில், இதை தங்கள் சொந்த வாழ்க்கையாக கொண்டு வாழ்வது கிடையாது.

இந்த ஒருநாள் நடிப்புத்தான் தங்கள் மகிழ்ச்சி என்று உணருகின்ற மனப்பாங்கு, ஒரு நாளை விடுத்து மிகுதி அனைத்து நாட்களையும் மகி;ழ்ச்;சியற்ற நாட்களாக எண்ணும் மனப்பாங்கை உருவாக்கி விடுகின்றது.

எது மகிழ்ச்சியானது? ஒரு நாள் நடிப்பா அல்லது இயல்பான எம் வாழ்வா? நாம் ஏன் எதற்காக நடிக்கவேண்டாம்? எம் இயல்பையும், தனித்தன்மையையும் மறுத்து நடிக்கும் போது, மொத்த வாழ்க்கையும் பரஸ்பரம் நடப்பில் இருந்துதான் தொடங்குகின்றோம். போலியான கற்பனை வாழ்க்கைகாக நடிக்கத் தொடங்கும் வாழ்க்கை, எப்படி தான் மகிழ்ச்சியான இருக்கமுடியும்? மேல் உள்ளவனுடன் ஒப்பிட்டு உருவாக்கும் போலி வாழ்க்கை, அதன் ஒரு போலியாக எம்மை மாற்றிவிடுகின்றது. இது வாழ்க்கையை துலைத்துவிடுகின்ற கனவுலகில், மகிழ்ச்சியை இல்லாதாக்குகின்றது. ஒரு சமூகமாக, ஓரு சமூகத்தின் உறுப்பாக வாழமறுத்து, சினிமாவில் நடிக்கின்ற காட்சியை மையப்படுத்திய நடிப்பு எம் சடங்காக மாறும் போது எம்மை நாம் படுகுழியில் புதைப்பது மட்டுமின்;றி, எமது குழந்தைகளை அதில் பிடித்து தள்ளியும் விடுகின்றோம்;.

பி.இரயாகரன்

11.09.2011