முன்பு  போராளிகளின் இரத்தம் சிந்திய தியாகத்தை மாவீரர் தினமென அறிவித்து ரோல்சும், வடையும், பிளாஸ்டிக் கார்த்திகைப் பூவும் விற்று மில்லியன் கணக்கான காசு உழைத்தவர்கள், இந்த புலிப்பினாமிகள். ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது. அதுபோல ஒருவருடமாக உழைப்பில்லாமல் இருந்த புலம்பெயர் புலிப்பெருச்சாளிகளுக்கு, நாலுகாசு பார்க்க வாய்ப்பு வந்துள்ளது. அதற்கு வசதியாக, மக்களின் சாம்பல் பூத்த மேட்டை வியாபார இஸ்தலமாக்கி, தொடர்ந்தும் பணம் சம்பாதிக்க இந்தப்  பினாமிகளில் ஒரு தரப்பு  "துக்கதினம் என்கிறது" இன்னொரு தரப்பு மே18 போர்க்குற்றவியல் நாள் என்கிறது. மற்றொரு தரப்பு கடந்த 2009 ஆண்டு தமிழின அழிப்பின் உச்ச ஆண்டாகவும், மே 12 முதல் 18 வரை உச்ச நாட்களாகவும், அனுஷ்டிக்கும்படி தமிழ் மக்களை அழைக்கின்றனர்.

புலிகள் ஆதிக்கத்துடன்  இருந்தபோது இப்படி ஆளுக்கொரு பக்கமாக நினைவு நாட்களையும், பணச்சடங்குகளையும் நடதுவதற்கு அனுமதித்தவர்கள் அல்லர். இப்போ பாகப்பிரிவினை, சொத்துக்கான அடிபாடு, சாதிப்பிரிவினை என புலம்பெயர் பினாமிகள் பிரிந்திருப்பதனால், ஆளுக்கொரு திகதியை அறிவித்து, புலிகளினதும், மக்களினதும் அழிவை வைத்து பணச்சடங்கு செய்ய கிளம்பி விட்டார்கள்.

 

இந்த பிரகஸ்பதிகளுக்கு 3000 மேற்பட்ட பெண்போராளிகள், மற்றும் 8000 ஆண்போராளிகள்     பாசிசஅரசின் பிடியில் உடல் உளவியல் பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டு, சீரழிவதைப் பற்றி கவலை இல்லை.  பிரபாகரனும்  அவர் தலைமையும் எப்போ அழிந்ததோ அப்போதே இவர்களுக்கு, அத்தலைமையின் தவறுகளால் சந்திக்கு  வந்த போராளிகளின் கவலை இல்லாமல் போய் விட்டது.

இந்த ஒரு வருட காலத்தில் இந்தப் பினாமிகள் சிறைப்பட்ட போராளிகளுக்காக என்ன செய்தார்கள்?  உள்நாட்டிலும்; வெளிநாட்டிலும் உள்ள,  அரச கைகூலிகள் கூட,  இப் போராளிகளின் நிலைகண்டு, மனம் இரங்கி தம்மாலான உதவிகளை செய்கின்றனர். ஏன் சிங்களப் பெண்கள் அமைப்புகளும், மனிதாபிமானமுள்ள தனிமனிதர்கள் பலரும் பலர் போராளிகளுக்கு உதவிய வண்ணம் உள்ளனர். இதற்கு மேலாக சிறைவைத்திருக்கும் முகாம்களில் பணிபுரியும் சிங்கள பெண்சிப்பாய்கள் பல தடவைகளில் தமது பணிக்கும், கட்டளைக்கும் அப்பால், மனிதாபிமானமுறையில் பெண் போராளிகளுக்கு  உதவுவது,  போராளிகளின் உறவுகளால் வியந்து போற்றப்படுகிறது.


இந்தக் குறுந்தேசிய வெறிபிடித்த தரகுகள் என்ன செய்தார்கள்?   புலம்பெயர் மக்கள் மீதான தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், புலிகள் விட்டுச் சென்ற சொத்துக்கள்,  கோடிக்கணக்கான பணம் என்பவற்றை தமதாக்குவதற்கு ஏதுவாக யுத்தம் முடிந்த சில வாரங்களிலேயே, வட்டுக்கோட்டை  வாக்கெடுப்பு, புலம்பெயர்ந்த தமிழீழ அரசு என ஜில்மால் விட்டபடி தொடர்ந்து மக்களை ஏய்த்தபடி   உள்ளனர்.

 

சிங்கள மக்களைப் பொருத்த மட்டில்; யுத்தம் முடிந்த நிலையில் பல்லாயிரம் குடும்பங்கள், இலங்கை படைகளில் பணியாற்றிய தமது வருமான ஈட்டுனரை இழந்துள்ளது. அத்துடன் உடல் உள ஊனமாகப்பட்டு, குடும்ப, சமூக வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் சில ஆயிரம் படையினர் உள்ளதால் அவரது குடும்பங்கள் சந்திக்கு வரும் நிலையில் உள்ளது. இதைவிட யுத்தஇயந்திரத்தை சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது நாளாந்த சீவியம் நடத்தியவர்கள் பலர் , அதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர். அத்துடன் அன்றாட பாவனைப்பொருட்களின் விலையேற்றம், உயர்ந்து  வரும் வேலையில்லாத் திண்டாட்டம் என்பனவும் இன்றைய மாபெரும் பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளது.

 

நாம் இப்போது வன்னியை சேர்;ந்த 10000 மக்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அங்கலாய்க்கிறோம். நியாயமான விடயம். அதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட, தென்னிலங்கை கரையோரப்பகுதியை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இன்றுவரை         குடியேற்றப்படவில்லை. இவர்களில் கணிசமானவர்கள் மகிந்தாவின் ஹம்பாந்தோட்டையை சேர்த்தவர்கள். இவர்கள் முன்பு குடியிருந்த காணிகள் அபிவிருத்தி என்ற பெயரில் சீன, இந்திய, சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்லாயிரம் மக்கள் வேலை இல்லாமல் திண்டாட, இதே பிரதேசத்தில் கப்பல்துறைமுகம், விமானநிலையம் கட்டவும், நெடுஞ்சாலை விரிவாக்கவும் சீன, தென்கொரிய தொழிலாளர்களும், இந்திய பொறியியலாளர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். இவை அனைத்திற்கும் பின்புலத்திருந்து இயங்குவது நவீன பாசிச-தரகுகளான மஹிந்த குடும்பமும் அதன் அடிவருடிகளுமே.

 

இப்படி நாம், இந்தப் புலித்- தமிழ்த்தரகு பினாமிகள் பற்றியும், நவீன பாசிச-தரகுகளான மஹிந்த குடும்பமும் அதன் அடிவருடிகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம்.

 

அதேவேளை, இவ்வகையான விமர்சனங்களை முன்வைக்கும், தமிழ் இடதுசாரிகள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம், வெறும் வாய்ச்சவடாலுடன் நின்று விடப்போகிறோமா என்ற கேள்வி எம்முன் எழுப்பப்படுகிறது !

 

அதேபோல் சிங்கள இடதுசாரிகள் மகிந்தாவின் பாசிச அரசுக்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் எதிராக விமர்சிகின்றனர். ஆனால் அவர்களும், வெறும் விமர்சனத்துடனேயே நின்று விடுகின்றனர், என்ற குற்றச்சாட்டும் அவர்கள் முன் வைக்கப்படுகிறது. இலங்கையில் அரசுக்கெதிரான இயங்குசக்திகளின் தொகை வெகுகுறைவானதே. அதைவிட இன்றுள்ள சூழ்நிலையில் பகிரங்கமாக இயங்குவதென்பது ஆபத்தான விடயம்.     

 

இந்தவகையில்  மக்கள் நலனுக்கான  எதிர்காலச் சிந்தனையுடன் இயங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர் இடதுசக்திகளுக்கு உள்ளது. குறிப்பாக தமிழ் இடதுசாரிகளுக்கு  உள்ளது.  காரணம் தமிழ் தேசியப்போராட்டத்தை பாசிசமாக்கி மக்களை பலியெடுத்த புலிகளை அழித்தது, புலிகளை விட படுபயங்கரமான மஹிந்த தலைமையிலான அரசபாசிசம். இது இன்று நாடு முழுவதையும் தன் பாசிச கட்டுப்ப்பாட்டில் கொணர்ந்து, மலிவு விற்பனையில் நாட்டைக் கூறு போட்டு விற்கின்றது.   இதன் அடிப்படையில்; இன்றைய நிலையில் மக்கள் நலனுக்கான வேலைத்திட்டத்தின்,  முதல்படியாக எம் மக்களில் நியாயமான தேசிய உரிமைப் போரை பாசிசவடிவம் ஆக்கிய சக்திகள்    அழிக்கப்பட்டதுடன், அநியாயமாக பலிகொள்ளப்பட்ட மக்களின், போராளிகளின் நினைவாக   15 -18  வைகாசி மாதத்தின் நாட்களை  பாசிச-ஏகாதிபத்திய எதிர்ப்பு  நாட்களாக அனுஷ்டிக்க முன்வர வேண்டும்.