Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முல்லைத்தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால்

 அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார்.

கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வந்திறங்கிய கல்லுளி மங்கன் மன்மோகன் சிங், பத்திரிகையாளர் சந்திப்பில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் அக்கறை கொண்டிருப்பதாக அருளினார். நல்ல அக்கறை!

சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து, அதிகாரிகளை அனுப்பியும் அக்கறை கொண்டிருக்கும் காங்கிரசு பெருச்சாளிகள் என்ன திமிரிருந்தால் தங்களால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக பேசுவார்கள்? போரை நிறுத்தவில்லை என அன்றாடம் எக்காளமிட்டு வரும் ராஜபக்க்ஷே அரசு இறுதி யுத்தம் என்ற பெயரில் பாதுகாப்பு வலையப் பகுதியில் மிச்சமிருக்கும் மக்களை கூண்டோடு அழித்து வருகிறது. இந்த கொலை பாதகச் செயலுக்கு இந்திய அரசு உதவுவதை நன்றியோடு வெளிப்படையாகவே இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகிறது.

tamilnadu1

செருப்பை வீசினால் படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பான தூரத்தில் இருந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் மன்மோகன் சிங், பயங்கரவாதிகள் தாக்குவது இருக்கட்டும், தன்னை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி கூட பறப்பதை அனுமதிக்க முடியாது என விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக வந்திறங்கும் சோனியா இருவர் மீதும் சிறு துரும்புகூட படக்கூடாது என்பதற்காக எவ்வளவு கோடிகள் செலவு, எத்தனை போலீசார் பாதுகாப்பு?

ஆனால் கேட்பார் கேள்வியின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்படும் ஈழதமிழ் மக்களின் பிணங்கள் எவ்வளவு என்பது கூட எண்ண முடியாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை நாடகங்கள்? ஈழத்தை பிணக்காடாக மாற்றும் இலங்கை அரசின் செயலுக்கு பால் வார்க்கும் காங்கிரசு அரசு, காங்கிரசு அரசுக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அரசு, மத்தியில் பொறுக்கித் தின்பதற்காக தொகுதிகளை வெல்லவேண்டுமென்றால் கருணாநிதியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக ஈழத்தை வலிந்து பேசும் ஜெயலலிதா….இவர்கள் கையில் ஈழம்தான் என்ன பாடுபடுகிறது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சோனியா அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து தீவுத்திடலில் இறங்கி ஒரு இருபது நிமிடம் பேசிவிட்டு, போஸ் கொடுத்து விட்டு, கையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவை தியாகத்தின் திருவிளக்கு என்றார் கருணாநிதி. அன்னை சோனியா வாழ்க என்று முழங்கிய திருமாவளவன் கைகளை மேலே கூப்பி எப்படியாவது ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தொழுதார். தீவுத் திடலையே இராணுவக் கோட்டை போல முற்றுகையிட்ட போலீசின் பாதுகாப்பிற்குள் கூட்டிவரப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க காங்-தி.மு.கவின் தேர்தல் கூட்டம் ஒருவழியாக முடிந்தது.

சோனியா சென்னையில் இருந்த நேரம் அவரை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.க.இ.கவுன் அதன் தோழமை அமைப்புக்களும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையின் முன்பு இரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பி போ என்ற முழக்கத்துடன் எழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தின. பின்னர் பெண்கள், குழந்தைகள், பார்வையற்றவர்கள் தவிர 77 தோழர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் வராதபடி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின் பழ.நெடுமாறன், பாரதிராஜா தலைமையில் தமிழார்வலர்கள், திரைப்படத்துறையினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்களில் 109பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மெமோரியல் ஹால் அருகே தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பெண்கள் குழுவினர் முப்பது பேர் ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

ம.க.இ.கவின் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம்.