நேற்று இடப்பட்ட ‘ஈழத்தின் எதிரி ஜெ - ஆதாரங்கள்!‘ கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்

// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //

// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //

// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//

// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//

ஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.

“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

காங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி..   - இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா?

1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா? 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை? உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன? ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா?

 

jayalalithathumb

 

இந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன? அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா? ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா?

இன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.

பெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல்? பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள்? இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.

அல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.