Language Selection

புதிய கலாச்சாரக் கவிதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஓடு! ஓடு!
கடித்துக் குதறிவிடும்
ஓடு !
உயிர் பிழைக்கும் ஆசையில்லையா?
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
நீ நினைப்பதுபோல்
அது சைவமில்லை
'இவர்களை' நம்பி நிற்காதே! ஓடு !
.
'வெள்ளைப் புறா'
சமாதான சின்னமில்லை
அதன் கூட்டுக்குள்
எப்போதும் சதைத்துணுக்குகள்
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
புற்றுகளிலிருந்து
எறும்பு பிடித்துண்ணும்
குரங்குகளைக் கண்டதுண்டா?
கையில் ஒரு குச்சி
அதுதானிந்த அரசு
ஓடு ! ஓடு !
.உன் தலைமயிருக்கு
அவனிடம் இருக்கிறது
காப்புரிமை.
மொட்டையடிக்க முயற்சி செய்யாதே!
கத்தியும்
அவனிடமே இருக்கிறது.
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
இனியெல்லாம் தனியார்மயம்தான்
வலதுகை ஒருவருக்கு
இடதுகை ஒருவருக்கு
விரல்கள் பத்தும்
வேறொருவருக்கு
சரி!
நகங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டாயா?
நகங்களில் அழுக்கெடுக்க
'புதிதாய்' அறிமுகமாகியிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ ம் முத்திரையுடன்
விலை வெறும்
ஐம்பதே ரூபாய்தான்!
வாங்கிவிட்டாயா?
.ஏய்? இதென்ன?
காதுகளை அறுத்துப் போட்டுவிட்டு
ஓடுகிறாய்!
ஓடு ! ஓடு !
.எங்கேதான் போகமுடியும்?
பூமியின் விளிம்புக்கு?
பிரபஞ்சத்தின் எல்லைக்கு?
ஓடு ! ஓடு !
.எல்லா வழிகளும்
அடைத்து விட்டன.
தவிர்க்க முடியாதினி!
.
மூடிய அறைக்குள்
மாட்டிய பூனை
என்ன செய்யும்?
..
அதுகூடவா
நம்மால் முடியாது?
சொல்! தொழிலாலர் வர்க்கமே!.
-தீபன்
புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2000