Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

10_2005.jpgசிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் "டெலிபோன் கேபிள்' புதைப்பதற்கு அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அந்நகரின் மேல்கரை பிரதான சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு இரண்டாகப் பிளந்தது. மீண்டும் தார்ச்சாலை அமைக்காமல், அதில் அவசரமாக மண்ணை மூடிவிட்டு ஓடிவிட்டது.

 

நகரின் பிரதான சாலை புழுதி மேடாகிப் போனதால், நகரப் பேருந்துகள் ஊருக்குள் வரமுடியாமல் புறவழிச்சாலை வழியே இயங்க ஆரம்பித்தன. போக்குவரத்து தொடர்பு அறுந்து, நகரமே தனித்து, தீவாகிப் போனது. மாணவர்களும் பொதுமக்களும், வர்த்தகர்களும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர். அப்பகுதியில் இயங்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் நகர வர்த்தகர்கள் சங்கமும் சேர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் தார்சாலை அமைத்துத் தரும்படி கோரிக்கை மற்றும் சுவரொட்டி இயக்கம் நடத்தினர். அதிகாரவர்க்கம் கண்டு கொள்ளவேயில்லை. அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கைக் கண்டித்து, சாலை மறியல் போராட்டம் திட்டமிடப்பட்டது.

 

மானாமதுரை நகரத்தின் வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பு.மா.இ.மு.வும் இணைந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 26.9.05 அன்று மதுரை இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேநாளில், அப்பகுதியில் இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யின் வருகை பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசு பட்டாளம் போராட்டக்காரர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

 

ஆனால், போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியினர் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்ததும், உடனே நெடுஞ்சாலைத் துறையின் உதவி செயற்பொறியாளரைத் தொடர்பு கொண்டு போராட்டப் பகுதிக்கு வரவ ழைத்தது போலீசு. ரஜினி என்ற நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ""15 நாட்களில் மீண்டும் தார்ச்சாலையாக அமைத்துத் தருகிறோம்'' என்று வாய்வழி உறுதிமொழியை கொடுத்து விட்டு ஓட நினைத்தார். ஆனால், போராட்டக்கா ரர்களின் உறுதியைக் கண்டு ஒரு வாரத்திற்குள் அமைத்துத் தருகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார்.

 

சமரசமற்ற, உறுதியான, ஒன்றுபட்ட போராட்டம்தான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதைத் தங்களின் அனுபவம் மூலமே கற்றுணர்ந்தனர், மானாமதுரை நகர மக்கள்.


தகவல்: பு.ஜ. செய்தியாளர், மானாமதுரை.