Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தேசியம் ஒரு கற்பிதம்" என்ற நூலில் நிறப்பரிகை, அ.மார்க்ஸின் கருத்துக்களை வெளியில் எடுத்து இந்த சிறு நூல் மூலம் விமர்சித்துள்ளேன். அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட நிறப்பிரிகைக்குழுவால் முன்தள்ளப்படும் நவீன திரிபுவாதம், மற்றும் மார்க்சிய விரோதப் போக்குகளை நான் இப்புத்தகம் மூலம் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். அ.மார்க்சை அடிப்படையாகக் கொண்ட உயிர்ப்பு, மனிதம், அன்மைக்காலமாக சரிநிகர், மற்றும் ஐரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகள், மலர்களில் வெளியிடப்படும் அடிப்படை தேசியக் கருத்துகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கின்றது. அ.மார்க்சை தாண்டியது அல்ல இவர்களின் கோட்பாடு அ.மார்க்சை பின்பற்றி அதில் இருந்து கோட்பாட்டை முன்வைக்கும் இப்பிரிவுகள், தமது அன்னிய வாழ்நிலையுடன், எம்மண்ணிலும், புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள சூழ்நிலையில், மக்களுக்காகப் போராடுவதை விட்டு கலைந்து செல்ல முன்வைக்கும் கோட்பாடுகளே இவை.


எம்மண்ணிலும், புலம் பெயர்ந்த நாட்டிலும், இயக்கங்களால் சந்தித்த அனைத்து இழப்புக்கள், அழித்தொழிப்புகள், தோல்விகளை விட, நாம் இந்த மார்க்சிய விரோதத் திரிபுகளால் சந்தித்த சேதம் தான் தமிழ் ஈழப் போராட்டத்தினதும், இலங்கையின் வர்க்கப் போராட்டத்தினதும் மிகப் பெரிய இழப்பாகும்.


அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட இந்த திரிபு வாதிகளால் இந்தியாவைவிட அதிகம் இலங்கையில்தான் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று உளள் இலங்கை நிலையில் அ.மார்க்சையும், அவரின் சீடர்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத் தனத்தின் செயற்பாடுகள் மட்டும் இன்றி, ஏகாதிபத்திய தலையீட்டுக்குத் தேவையான கோட்பாட்டு உருவாக்கத்தை முன்னணி சக்திகளுக்குள் முன் வைத்து அதன் மூலம் ஏகாதிபததியத்துக்கு சார்பாக பிரச்சாரம் செய்வது என்பது இலங்கை மக்களால் பொறுத்து கொள்ளக் கூடியது அல்ல. அதை எதிர்த்துப் போராடும் பணியில் தான் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.