Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.

 

இவையனைத்தும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன், இந்தியாவின் ஆசியுடன் நடக்கின்றது இந்த இனவழிப்பு. மனித குலத்துக்கு எதிரான வகையில் புலிகள் செய்யும் தவறான ஒவ்வொன்றையும், பேரினவாதம் தன் இனவழிப்பை மூடிமறைக்க, தன் மேல் போர்த்திக் கொள்கின்றது. பேரினவாதம் செய்வதை இன அழிப்பாக வரையறுக்க முடியாது என்று ஐ.நா சொல்லுகின்றது. ஏனென்று கேட்டால் புலிகளும் தமிழரை கொன்று இனவழிப்பை செய்கின்றது என்ற விளக்கம் அளிக்கின்றது. இப்படி ஒரு இனவழிப்பு சமப்படுத்தப்பட்டு, நியாயப்படுத்தப்படுகின்றது. இப்படி உலகமே புலிகளின் மனித விரோதச் செயல்களை அடிப்படையாக கொண்டு, இன அழிப்பை ஊக்குவிக்கின்றது.

 

இதன் மூலம் தமிழன் என்ற அனைத்து அடையாளங்களும் புலி முத்திரை குத்தப்பட்டு, அதனூடாக அணுகப்படுகின்றது. தமிழ்மக்கள் விட்டில் பூச்சியாக, அங்குமிங்குமாக வேதனையான வாழ்க்கையில். வெந்த புண் மேல் ஈட்டி முனைகளால் குத்தி குதறுகின்றது பேரினவாதம்.

 

ஒரு இனத்தின் மேல் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான வாழ்வியல் திணிக்கப்படுகின்றது. ஒரு இனத்தின் மேல் அடிமைத்தனம் புகுத்தப்படுகின்றது.

 

இதை தாண்டி தமிழருக்காக எழும் குரல்கள் முதல் உரிமைகள் பற்றி எந்த முன் மொழிவையும், சிங்கள பாசிச அரசு இயந்திரம் மட்டும் எதிர்க்கவில்லை. சிங்கள பெரும்பான்மை கட்சிகள் அனைத்தும் ஓரே குரலில், தம் பேரினவாத சிந்தனையில் நின்று எதிர்கின்றது. ஜே.வி.பி பச்சை இனவாதத்தை, தமிழினம் மீது காறி உமிழ்கின்றது.

 

பாசிச அரசினால் தமக்கும் தம் கட்சிக்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை, தமிழனுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றது. இனவாத அரசியல் மூலம், ஆளும் வர்க்கமாக உள்ள அனைத்து சிங்களக் கட்சிகளினதும் நிலைப்பாடு இதுதான்.

 

மறுபக்கத்தில் இவர்களால் தமிழ் மக்கள் ஓடுக்கப்படுகின்றனர். இனவழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இதை தமிழ் மக்கள் மேலான ஓடுக்கமுறையாக பார்க்க மறுப்பதே, புலியிசத்தின் குறுகிய தன்மையாகும். பேரினவாதம் எப்படி புலியொழிப்பின் பெயரில் தமிழின அழிப்பை செய்கின்றதோ, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழின ஒழிப்பை பொதுமைப்படுத்த மறுக்கின்றனர். இதைப் புலிகள் தம் மீதான ஓழிப்பாகவே காட்டி நிற்கின்றனர். அரசு விரும்புகின்ற மாதிரி, புலி தன் மீதான அழிப்பாக கருதும் புலியின் குறுகிய வரையறை தான், பேரினவாதத்தின் இன அழிப்பை மூடிமறைக்கின்றது.

 

இன அழிப்புக்கு எதிரான போராட்டங்கள் புலி அழிப்பாக காட்டப்பட்டு, ஒரு குறுகிய எல்லைக்குள் போராட்டங்கள் முடங்கிப் போகின்றது.

 

தமிழனின் ஒற்றுமை என்பது, முரண்பாட்டை களைதல் தான். அதை புலிகள் செய்வதன் மூலம் தான் சாத்தியம். தமிழ் மக்கள் தம் மேலான இன அழிப்பாக போராட அனுமதிப்பது தான், இதில் முதல் படி. கடந்தகால தவறுகளை பாதுகாத்துக் கொண்டு, உணர்வு பூர்வமாக யுத்தம் செய்யவும் முடியாது, போராடவும் முடியாது.

 

இப்படி இன்று தமிழ் இனவழிப்பு நடப்பது புலிகளால் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களை இனவழிப்புக்கு எதிரான பொதுக்கோசத்தின் கீழ் மக்களை அணிதிரட்ட புலியிசம் தடைசெய்கின்றது. இனவழிப்புக்கு எதிரான போராட்டமாக பொதுமைப்படுத்தத் தவறி, தம்மை சுற்றி போராட்டங்களை விலங்கிட்டு வைத்துள்ளனர்.

 

தமிழ் மக்களை குறுகிய தம் எல்லைக்குள் மந்தைக் கூட்டமாக புலியை சுற்றி வீதியில் இறக்கும் புலியிசம், தனக்குத்தானே குழியை வெட்டுவதுடன் தமிழினத்தை அழிக்க பேரினவாதிகளுக்கு உதவி செய்கின்றனர். தமிழினமோ தன் மேலான இன அழிப்பை எதிர்த்து போராட முடியாத வண்ணம், புலிகள் இதை தம் குறுகிய எல்லைக்குள் தள்ளியுள்ளனர்.

 

சிங்கள பேரினவாதம் புலியொழிப்பாக கூறுவதை ஏற்று, அதற்கு உட்பட்ட கோசத்தை வைத்து அவனுக்கு ஏற்ப போராடுகின்றது. இதுவோ எம்மினத்தின் அவலம். 'சிங்களவன் மோடன்" என்று சொல்லிக்கொண்டு புலிகளால் நாம் மோடராகிப் போன துயரம். 

 

பி.இரயாகரன்
02.03.2009