பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும்; அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான பிணங்கள் வெறுமனே எண்களை மட்டும் அடையாளமாகக் கொண்டு புதைக்கப்பட்டு வரும் கொடுமை காஷ்மீரில் நடந்து வருகிறது.


 காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ரெகிபோரா கிராமத்தின் இடுகாட்டில்தான் இவ்வாறு எண்கள் மட்டுமே கல்லறைகளின் அடையாளமாக உள்ளன. கல்லறைகளில் புதைக்கப்பட்டிருப்பது யார் யார் என்பது அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கோ தெரியாது. "தியாகிகளின் கல்லறை' என்று அழைக்கப்படும் இந்த இடுகாட்டில் ஜூன் 26, 1995 அன்று நான்கு ""எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின்'' பிணங்களைப் போலீசார் புதைக்கக் கொண்டு வந்ததிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. இன்று வரை ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு,  இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

 

 ""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்களைக் காட்டுவார்கள். அடையாளம் கண்டு கொண்டால் அவர்களிடம் கல்லறையின் அடையாள எண் தரப்படும். ஆனால் அங்கு புதைக்கப்பட்டிருப்பதோ, பெரும்பாலும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்தான்'' என்கிறார் ஒரு போலீசு  அதிகாரி.


 ஆனால், காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களோ, யூரி மாவட்டத்தைச் சேர்ந்த "மறைக்கப்பட்ட உண்மைகள்' எனும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ""இது வடிகட்டிய பொய். அங்கு புதைக்கப்பட்டிருப்பது பயங்கரவாதிகளல்ல. காஷ்மீரில் காணாமல் போனவர்கள்தான்'' என்கிறார்கள். யூரியில் மட்டும் இதைப் போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. இந்தத் தகவல் வெளியான பிறகு சிறீநகரில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போலீசு கலைத்தது.


 சிறீநகரை ஒட்டியுள்ள கந்தர்பால் மாவட்டத்தில் ""வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்'' எனப் புதைக்கப்பட்ட 5 பேரினுடைய பிணங்களைத் தோண்டி எடுத்து விசாரணை செய்தபோது, அவை போலி மோதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிகளுடைய பிணங்கள் என்ற உண்மை தெரியவந்தபோதுதான், "அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள்' உலகுக்குத் தெரிய வந்தது. இதனையொட்டி ஒரு போலீசு உயரதிகாரியின் மீதும் அவரது ஐந்து சகாக்களின் மீதும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


 காணாமல் போன பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரிகள், தங்களுடைய உறவினர்கள், உயிரோடிருக்கிறார்களா, சிறையிலிருக்கிறார்களா என்ற தகவல்கள் எதுவுமே தெரியாமல் மனதளவில் அனுபவித்து வரும் வேதனை சொல்லி மாளாது. அவர்களில் ஒருவர்தான் தாகிரா பேகம். 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரமுல்லாவிலுள்ள தனது சொந்த கிராமத்திலிருந்து டில்லிக்கு சென்ற தாகிராவின் கணவர் வீடு திரும்பவேயில்லை. பதறிப் போன தாகிராவின் குடும்பத்தினர், அவரைப் பல இடங்களிலும் தேடியலைந்தனர். காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய போலீசார், மாநிலம் முழுக்க வெவ்வேறு சிறைகளுக்கு அலைக்கழித்தனர். ஆனால் எந்தச் சிறையிலும் அவர் இல்லை. போலீசு விசாரணையில் எந்தத் தகவலுமே கிடைக்காததால், அவரின் பெயர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.


 தனது கணவர் உயிரோடிருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை அறிய முடியாமல் வாழ்ந்து வரும் பெண்களைக் குறிப்பிடுவதற்காக "அரை விதவை' எனும் வித்தியாசமான சொல் 1990களில் காஷ்மீரில் உருவானது. தாகிராவைப் போன்ற "அரை விதவைகள்' காஷ்மீரில் இன்று ஏராளமாய் உள்ளனர்.


 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் "தீவிரவாதிகள்', "எல்லை தாண்டிய பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தாலும் போலீசாலும்  தினமும் அங்கு நடத்தப்படும் படுகொலைகள், தேசப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகச் செய்தித்தாள்களால் சித்தரிக்கப்படுகின்றன. பரிசுப் பணத்திற்காகவும், பாராட்டு, பதவி உயர்வுகளுக்காகவும், பல அப்பாவிப் பொதுமக்களைப் பச்சையாகப் படுகொலை செய்து, அவர்களுக்குத் தீவிரவாத முத்திரை குத்தி வந்த இந்திய இராணுவத்தின் களவாணித்தனங்கள் இதற்கு முன்பே பல சமயங்களில் அம்பலப்பட்டுள்ளன. தொடர்ந்து பச்சைப் படுகொலைகளைச் செய்துவரும் இந்திய இராணுவம், காஷ்மீரையே கல்லறையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.


· பாவெல்