ஒரிசாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த தின்கியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம் பட்னா. இரும்பு உற்பத்தி நிறுவனங்களிலேயே உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான போஸ்கோ, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அங்கு ஓர் இரும்புத் தொழிற்சாலையையும், ஒரு துறைமுகத்தையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள மிகவும் வளமான கடற்கரைப் பகுதி நிலங்களை ஆக்கிரமிக்க அந்த நிறுவனம் முயற்சித்து வருகிறது.


 தலைமுறை தலைமுறையாக பட்னாவில் வாழ்ந்து வரும் மக்கள்,  தங்களது சொந்த நிலத்தை விட்டே விரட்டியடித்து, தங்களது வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தத் திட்டத்தை  எதிர்த்து, தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒரிசா மாநில அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, மையமாநில அரசுகளின் உதவியுடன் அப்பகுதியில் நிலங்களை அபகரிக்க போஸ்கோ நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாகப் பல தகிடுதத்தங்களைச் செய்த போதும், அக்கிராம மக்களின் உறுதியான போராட்டத்தின் காரணமாக, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

 

 கனிம வளம் பொருந்திய, கடற்கரையோரம் உள்ள அந்த இடத்தில், தனது திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 6 கோடி டன் இரும்புத் தாதை, தங்களது துறைமுகம் வழியாகவே மிக எளிதில் கொண்டு சென்று விடலாம்; உலகச் சந்தையில் ஒரு டன் இரும்புத் தாதின் விலை 7000 ரூபாய்க்கும் அதிகமென்றாலும், அதனை எடுப்பதற்கான செலவு வெறும் 400600 ரூபாய் மட்டுமே; இதற்கான உரிமைத் தொகையாக இந்திய அரசுக்கு டன்னுக்கு வெறும் 25 ரூபாய் தந்தால் போதும். மொத்தத்தில், வெறும் 48,000 கோடி ரூபாய் மூலதனத்தைப் போட்டுவிட்டு, 4.5 லட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புத் தாதை  அள்ளிக் கொண்டு சென்றுவிடலாம் என்று போஸ்கோ நிறுவனத்தினர் கணக்குப் போட்டுக் காத்திருக்கின்றனர்.


 படிப்பறிவில்லாத மலைவாழ் மக்களை அங்கிருந்து எளிதில் துரத்திவிடலாம் என்று ஆரம்பத்தில் அரசும், போஸ்கோவும் நினைத்தன. ஆனால், மக்கள் தங்களது நிலங்களையும், காடுகளையும் அந்நியரிடமிருந்து காக்கத் தங்களது உயிரைக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு கலிங்கா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 ஆதிவாசிகள் கொல்லப்பட்ட பிறகும், தொய்வின்றி நடந்து வரும் போர்க்குணம் மிக்க போராட்டங்கள், பட்னா கிராம மக்களை, அவர்களது பூமியில் இருந்து அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தியது.


 அரசின் அடக்குமுறை ஒருபுறமி ருக்க, போஸ்கோவின் ஆலை வந்தால், உள்ளூரைச் சேர்ந்த 13,000  பேருக்கு வேலை கிடைக்கும் என அரசும், போஸ்கோவும் ஆசை வார்த்தை காட்டியதையெல்லாம் கேட்டு பட்னா கிராம மக்கள் மயங்கிப் போய்விடவில்லை. இதனால், போலீசின் அடக்குமுறை யைத் தீவிரப்படுத்தி, பட்னா கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போஸ்கோ நிர்வாகம், மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்தது.


 இதனையடுத்து, எதிரி நாட்டை ஆக்கிரமிப்பது  போல, ஒரிசா மாநில போலீசார் பட்னா கிராமத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். பட்னா கிராமத்தைச் சுற்றிலும் மூங்கிலால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பட்னா தனித் தீவாக போலீசாரின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது. பட்னா கிராம மக்கள், கிராமத்தை விட்டு வெளியேற முடியாமலும், வெளியூரைச் சேர்ந்தவர்கள் பட்னா கிராமத்தை நெருங்க முடியாமலும் தடுக்கப்பட்டனர். இதற்காக, பட்னா கிராமத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பலிதுதா என்ற ஊரில் போலீசார் தங்க வைக்கப்பட்டு, பட்னா கிராமம் 24 மணி நேர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. மனிதர்கள் மட்டுமின்றி, பட்னா கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வெளியூரில் இருந்து வருவதும் தடுக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், பட்னா மக்களைப் பட்டினி போடுவதன் மூலம், அவர்களின் போராட்டத்தை, மன உறுதியை உடைத்துவிட முயன்றது, மாநில அரசு.


 இந்த முற்றுகை ஒருநாள் அல்ல, இரு நாளல்ல; கிட்டதட்ட சனவரி 2008 தொடங்கி மார்ச் இறுதி வரை நீடித்தது. மாநில அரசின் சட்டவிரோதமான இந்த முற்றுகையை உடைக்காவிட்டால், ""நாம் வாழவும் முடியாது; போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியாது'' என உணர்ந்து கொண்ட பட்னா கிராம மக்கள், எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது எனத் தீர்மானித்தனர்.


 ஒரிசா மாநிலம் உருவான நாளான ஏப்ரல் முதல் நாள் முற்றுகை உடைப்பு போராட்ட தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று மதியம் 2 மணி அளவில், குறுகிய கிராம வீதிகளின் வழியாக அணிவகுத்து வந்த மக்கள், கலிங்கா நகரில் 15 பேரைக் கொன்றதை நினைவுபடுத்தி உங்களையும் கொல்வோம் என்று மிரட்டுவது போலக் குவிந்திருந்த ஆயுதம் தாங்கிய போலீசாரின் அச்சுறுத்தலையும் மீறி, தங்களது கிராம நுழைவாயிலில் போலீசு அமைத்திருந்த தடுப்பரணை உடைத்து, அரசின் முற்றுகையை முறியடித்தனர். தங்களது வாழும் உரிமைக்காக அரசை எதிர்த்துப் போராடும் பட்னா கிராம மக்களுக்கு ஆதரவாக ""போஸ்கோ ப்ரதிரோத் சங்கர்ஷ் சமிதி'' என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டு, மாநிலம் முழுவதிலிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.


 திரளான மக்களிடையே பேசிய ""போஸ்கோ ப்ரதிரோத் சங்கர்ஷ் சமிதி'' அமைப்பின் தலைவர் அபய் சாகு ""எங்களது நிலங்கள் வேண்டுமானால், இறுதிவரை நீங்கள் எங்களிடம் போரிட்டாக வேண்டும்'', என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே போஸ்கோவிற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
 அந்நியனுடன் கைகோர்த்து கொண்டு சொந்த மண்ணைத் தாரை வார்க்கும் அரசுக்கெதிரான ஒரிசா மக்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.


· அழகு