சந்தி சிரிக்கும் அமெரிக்க ஜனநாயகம்

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இராணுவச் செய்திக் குறிப்புகள், அமெரிக்க இராணுவம் செய்து வரும் அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ{க்குச் சேகரித்துக் கொடுத்த பிராட்லே மேனிங் என்ற அமெரிக்கர், அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுடன், கடந்த மார்ச் மாதம் புதிதாக 22 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது, அமெரிக்க இராணுவம். அவற்றில் ஒன்று, எதிரிக்கு உதவி செய்வது  என்ற பிரிவின் கீழ் வரும் குற்றச்சாட்டு. இதன்படி, அமெரிக்க இராணுவ இரகசியங்களை  தகவல்களை அமெரிக்காவின் எதிரிக்குக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மேனிங். எதிரி யாரென்று குற்றச்சாட்டில் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மேனிங்கிற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால், இத்தகைய குற்றச்சாட்டின் ஆபத்து குறித்து அமெரிக்க ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. மேனிங் தண்டனைக்குரியவர் எனில், விக்கிலீக்ஸ் எதிரி எனில், இவற்றை பிரசுரித்த அமெரிக்க ஊடகங்களும்கூட எதிரிகளாகி விடுவர். அரசின் அயோக்கியத்தனங்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தினால் மரணதண்டனை என்று சொல்வதன் மூலம், மக்கள் நலன் கருதி ஊடகங்களில் இவற்றை வெளியிடுவதும் மரண தண்டனைக்குரியவைதான் என்று அமெரிக்க இராணுவம் இதன் மூலம் மிரட்டுகிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை!