அன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே!!!

ஓலங்கள், அடிவயிற்றில் இருந்து எழுந்து தொண்டையை அடைக்கும் ஓலங்கள். அழுதழுது உடல் வற்றி, உயிர் வற்றி போனாலும் மார்பிலும், தோளிலும் போட்டு சீராட்டிய தம் கண்மணிகளை நினைத்தவுடன் விம்மி வெடித்து எழும் ஓலங்கள். மடியில் இருந்து மழலை பொழிந்த மகனை, மகளை தேடி மார்பில் அடித்து மன்றாடும் ஓலங்கள். தெருவில் இருந்து புழுதி அளைந்தவர் புகை போல மறைந்ததை எண்ணி ஏங்கும் ஓலங்கள். ஒளிநகை ஊறும் இதழ் உகந்து முத்தம் தந்த தம் குழந்தைகளை, சின்னஞ்சிறு குஞ்சுகளை கூவி அழைக்கும் ஓலங்கள்.

எனது இரண்டு அண்ணன்களை இழந்து விட்டேன், இருக்கும் ஒரு அண்ணனையாவது கண்ணில் காட்டுங்கள் என்று கதறி அழுகின்றாள் சின்னஞ்சிறு குழந்தை ஒன்று. உண்பதில்லை, உறங்குவதில்லை என் கணவனை மீட்டு தாருங்கள் என்று துயரம் தாங்காமல் தரையில் விழுகிறாள் துணைவி ஒருத்தி. தளிர்நடை போட்டு தத்தி தத்தி நடந்தவன் போன இடம் எங்கே என்று அடி எடுத்து வைக்க முடியா முதுமையிலும் அங்கு வந்து அன்புமகனை தேடுகிறார் கிழவர் ஒருவர்.


தலைவரும், முதலமைச்சரும் பிரதமமந்திரியுடன் உப்பரிக்கையில் நின்று அளவளாவிக் கொண்டு நிற்கும் போது காவல்துறை நாய்கள் கடைவாய்பற்கள் மின்ன கடித்து குதறுகின்றன. தமிழ்மக்களின் தலைவருக்கு, தமிழ்மக்களின் முதலமைச்சருக்கு தமிழ்மக்கள் மீது விழுந்த அடி தெரியவில்லை. எந்தக் காலத்தில் தெரிந்தது இப்போது தெரிவதற்கு. தடியடியும், தனிமைச்சிறைகளும் தமக்கு அல்ல மற்றவருக்கு தானே. துப்பாக்கி குண்டுகளும், தூக்கு மேடைகளும் பற்றி பேசுவது பல்லக்கில் ஏறிப் போவதுக்கு தானே.


பிரதம மந்திரி, இலங்கையின் இனப்பிரச்சனையை ஆழமாக்கியவர்களின் அசல் வாரிசு. அமெரிக்காவில் குண்டு விழுந்ததற்காக அடுத்த நாளே அப்கானிஸ்தானிற்கு ஆள், அம்பு, படை அனுப்பி வைத்த ஆக்கிரமிப்பாளர். இல்லாத ஆயுதத்தை தேடி ஈராக்கில் அழிவுவேலை செய்பவர். "நடந்தது நடந்து விட்டது. மகிந்தா இனியாவது சால்வையை சரியாக போட்டுக் கொள்" என்று ஒரு இனப்படுகொலையை, தமிழ்மக்களின் பேரழிவை, ஆயிரக்கணக்கான மக்களின் அவலத்தை ஒரு சின்ன விடயம் போல் கடந்து போகச் சொல்கிறார்.


சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் தங்களது பரம்பரை பண்ணையார்களான பிரித்தானியர்கள் வந்து நீதி பெற்று தருவார்கள் என்று தமது சரணாகதி அரசியல் மூலம் தமிழ்மக்களை எமாற்றுகின்றனர். மறுபுறத்தில் காலனித்துவ எதிர்ப்பு நாடகம் ஆடுகிறார் மகிந்த ராஜபக்ச. "கமரோன் அண்ணாச்சி, பழங்கணக்கு என்னாச்சு" என்று கமரோனின் கழுத்தை பிடித்து கணக்கு கேட்பது போல சிங்கள மக்களிற்கு படம் காட்டிக் கொண்டு ஆயிரம் கோடிக்கு புதுக்கணக்கு தொடங்குகிறார்கள். தீவிர முதலாளித்துவ கட்சியான ஜக்கிய தேசியக்கட்சி கூட கை வைக்காத இலங்கை மக்களின் அடிப்படை உரிமையான இலவசக்கல்வியில் தனியார்மயத்தை, வெளிநாட்டு தலையீட்டை கொண்டு வருகிறார் நாட்டுப்பற்றாளர் மகிந்த ராஜபக்ச.

வடக்கு மாகாணசபையை வெற்றி கண்டு விட்டோம், இனி வாழ்வில் வசந்தம் தான் என்று தமிழர்களை ஏமாற்றும் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைகள், தேர்தல்கள், மாநாடுகள் மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று நம்பச் சொல்கின்றனர். எது என்றாலும் நாங்கள் வெட்டி விழுத்துவோம், இல்லயென்றால் இந்தியா அல்லது மேற்குநாடுகளைக் கொண்டு புடுங்குவோம், நீங்கள் வாக்கு மட்டும் போட்டால் போதும் போராடத் தேவையில்லை என்று மீட்பர்களை நம்பச் சொல்கிறார்கள்.


ஆனால் எரிந்த புத்தகங்களினால் கரியாகிப் போன அந்த முற்றவெளி மண்ணில் நின்று போராடிய நம் அன்னையர் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. எமது பிள்ளைகள் எங்கே என்று அவர்கள் பிடித்தவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். உலகம் அறிந்து கொள்ளட்டும் என்று உரத்த குரலில் கோசமிடுகிறார்கள். நம்முடைய பிரச்சனையை நாமே எடுத்துச் செல்வோம் என்று வீதிக்கு வருகிறார்கள். அன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே.