அரசு செய்கின்ற புதிய நுட்பமான ஒரு போர்க் குற்றம். இதுவோ மூலதனத்தின் கபட நாடகம். சுரண்டும் வர்க்க நலன்களே, இங்கு இந்த நிலையை உருவாக்கி வருகின்றது. 

 

பேரினவாதம் உருவாக்கி வைத்துள்ள திறந்தவெளி சிறை இதன் அடிப்படையிலானது. மக்களை அடைத்து வைத்திருப்பது இதற்காகத்தான்.

ஆனால்,

அரசு கூறும் காரணமோ, வன்னியில் இன்னமும் கண்ணி வெடியை அகற்றவில்லை என்கின்றது. அத்துடன் முகாமில் உள்ள மக்களுடன் புலிகள் உள்ளதால், அவர்களை கைது செய்ய வேண்டியுள்ளது என்கின்றது.

 

புலிகளோ இதற்கு கூறும் காரணம் வன்னியில் சிங்கள குடியேற்றம் செய்யவும், இனவழிப்பு செய்யவும், இப்படி மக்களை அரசு அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றது.

 

அரசுடன் கூடி தேனிலவை அனுபவிக்கும் புலியெதிர்ப்பு கும்பலோ, அரசு சொல்வதுதான் சரி என்கின்றது. அதற்கென்று தனியாக எந்தக் கருத்தும் கிடையாது. மகிந்த சிந்தனைக்கு ஏற்ப, நிறம்மாறும் பச்சோந்திகள்.

 

பேரினவாத அரச பாசிசம் வன்னி மக்களை சிறைவைத்திருக்கின்ற நிலைமைக்கு, பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். இவை அனைத்தும் உண்மைக்கு முன்னால் பொய்யானதும், புரட்டானதுமாகும். அதாவது ஏன் மக்களை இப்படி அடைத்து வைத்திருக்கின்றனர் என்ற  பொதுக் கருத்து, மிகத் தவறானதாகவே உள்ளது. இதன் எதிர் வினைகள் தவறானதாக மாறி, தோல்வி பெறுகின்றது.

 

மக்களை அடைத்து வைத்திருக்க, உண்மைக் காரணம் என்ன?

 

1. வன்னி மண்ணை பன்நாட்டு மூலதனத்துக்கு இந்த அரசு பங்கிட்டு வருகின்றது. இந்த பங்கீட்டில் ஏற்படும் இழுபறிகள்தான், வன்னிமக்களை அடைத்து வைத்திருக்கும் சூக்குமத்தில் மிக முக்கியமானது. இதில் உள்ள இழுபறிகள் என்ன? 

 

1.1. தமக்கான பங்கையும் பன்நாட்டு மூலதனத்திடம் மகிந்த கும்பல் கோருகின்றது.

 

1.2. வன்னி மக்களை இந்த மூலதனத்துக்கு ஏற்ப குடியேற்றும் பொறுப்பையும் மூலதனத்திடம்  கோருகின்றது. அவர்களின் வாழ்வாதாரத்தையும், மூலதனமே பொறுப்பெடுக்கக் கோருகின்றது. உறுதிக்குரிய காணிக்கு குறைந்தபட்ச கொடுப்பனவையும் கொடுக்கக் கோருகின்றது. 

 

1.3. மூன்று லட்சம் மக்களுக்கு மறுவாழ்வையும் வேலை வாய்ப்பையும் அளிக்க மூலதனம் மறுக்கின்றது. இதனால் வன்னி மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க, சிறை வாழ்வியல் மூலமான நிர்ப்பந்தத்தைக் கொடுக்கின்றது இந்த அரசு. இதன் மூலம் வன்னி மண்ணை கைவிட்டு, துறந்து ஓடக் கோருகின்றனர். 

 

1.4. இந்த வன்னியை கையகப்படுத்த முனையும் மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளாக மாறி நிற்கின்றது. இலங்கையுடனான மேற்கு முரண்பாடும், மூலதனத்தின் எதிர்காலத்தை நிச்சயமற்ற தன்மைக்குள் வலிந்து இட்டுச்சென்றுள்ளது. மூலதனத்தை இட அஞ்சும் நிலைமை, முரண்பாடுகள் மூலம் மேலோங்கி நிற்கின்றது.  

 

2. வன்னி மக்களை அடைத்து வைத்திருக்கும் மற்றொரு காரணம் போர்க்குற்றங்கள். இது வெளி உலகுக்கு தெரிய வராது இருக்க வேண்டுமென்றால், குற்றவாளிகள் அவர்களை தங்கள் கண்காணிப்பில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நடமாடும் சுதந்திரத்தைக் கூட மறுக்கின்றது.

 

இந்த இரண்டு பிரதான காரணம் தான், வன்னி மக்களைச் சிறைவைத்திருக்க முக்கிய காரணங்கள். நாளை மூலதனங்கள் தமக்கு இடையில் வன்னியை பங்கிட்டு, அங்கு பண்ணை அடிமைகளாக வன்னி மக்கள் மாற்றப்படும் நிகழ்ச்சி தான், மீள்குடியேற்றமாக மாறும்;. இதை வன்னி அபிவிருத்தி என்று நியாயப்படுத்தும் அரச எடுபிடிகளின் கூச்சல்கள், அரசியல் ரீதியாக மறுபடியும் அவர்களை இனம் காணக்கோரும்.

 

இன்று வன்னி மக்கள் உறுதிக்குரிய நிலத்தை மட்டுமல்ல, அவர்களைச் சுற்றி இருந்த இயற்கையைக் கூட இழந்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மலையக மக்கள் போல், கூலிக்கு வேலை செய்யும் நவீன குடியேற்றதின் மூலம் சுரண்டப்படுவது தான் நாளைய நிகழ்ச்சி நிரல்.

 

தனது சிறை முகாமில் இருந்து மக்களை எப்படி ஏன் அரசு வெளியேற்றுகின்றது

 

பிற மாவட்ட மக்கள் என்ற போர்வையில் நடக்கும் விடுவிப்பு ஒரு சதி. இது திறந்த சிறையில் இருந்தான விடுவிப்பல்ல. மாறாக வன்னி மண்ணில் இருந்து துரத்தும் சூழ்ச்சியான ஒரு சதி நடவடிக்கை. வன்னியைக் கோரும் மூலதனம், அங்கு வாழும் மக்கள் எண்ணிக்கையை குறைக்கக் கோருகின்றது. கொன்றாலும் சரி, துரத்தினாரும் சரி, இதுவே மூலதனத்தின் பொருளாதாரக் கொள்கை.

 

இதற்கமைய வன்னி திறந்த வெளிச்சிறை முகாமில் வாழ்வியலை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை வன்னியை மறந்து ஓட வைக்கின்றனர். தங்கள் பூர்வீக பிரதேசத்துக்கு, மீளவும்  நிரந்தரமாகவே செல்லுமாறு வலிந்து நிர்ப்பந்திக்கின்றனர்.

 

1970 களில் தான், பெருமளவில் வன்னியில் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அவர்கள் மேல் இன்று கொடுக்கும் வாழ்வியல் நிர்பந்தம், தங்கள் உறுதிக் காணிகளைக் கூட கைவிட்டு மீளவும் பூர்வீக மண்ணிற்கு செல்லுமாறு மூலதனம் நிர்ப்பந்திக்கின்றது. இப்படி வடக்கு (யாழ்) நோக்கியும், கிழக்கு நோக்கியும், வன்னியில் நிரந்தரமாக வாழ்ந்த மக்களை திட்டமிட்டே துரத்துகின்றது. வெளி உலகின் முன் இதை மீள்குடியேற்றம் என்கின்றது. மக்களை படிப்படியாக தாம் விடுவிப்பதாக காட்டும் அரசியல் நாடகமாக மாறுகின்றது.

 

வன்னியில் வாழ்ந்த மக்களை, வன்னிக்குள் மீள வாழ விடுவிக்கவில்லை. அந்த மண்ணில் இருந்து நிரந்தரமாக துரத்துகின்றது. மூலதனம் இன்று எதை விரும்புகின்றதோ, அதை பேரினவாத அரசு நாலு காலில் நின்று செய்கின்றது. 

 

பி.இரயாகரன்
20.10.2009