பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை  நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.

 

புலிகளை மட்டும் கொடுமையான கொடூரமான ஒன்றாகவும், அதை ஒழிக்க தான் புறப்பட்டுள்ளதாகவும் இது சித்தரிக்கின்றது. இதை தமிழ் இடதுசாரியம் வரை, அது ஏற்க வைத்துள்ளது. இப்படி பேரினவாத ஊடகவியல், தன் இனவொழிப்பு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இதை தமிழ் ஊடகவியல் அப்படியே வாந்தியெடுக்கின்றது.

 

நடப்பது இனவொழிப்பு யுத்தம் என்பதை ஏற்றுக் கொள்ளாத தமிழ் ஊடகவியல். புலியெதிர்ப்பு,  பேரினவாதத்தை நிலைநாட்டுவதுதான் இன்று அவர்கள் முன்வைக்கும் அரசியலாகவுள்ளது. புலிகள் இந்த இனவழிப்பை முன்னிறுத்துவதற்கு பதில், புலி புலித்தலைமை என்று இனவழிப்புக்கு உதவி செய்கின்றது.

 

மொத்தத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக தமிழ் ஊடகவில் சோரம் போகின்றது. மொழி சார்ந்த அணுகுமுறை, முன்பு அனைத்தும் புலியாக இருந்ததுபோல், இன்று அனைத்தும் பேரினவாதமாகி வருகின்றது.

 

ஏகாதிபத்தியங்கள் தன்னையும் தனது உலக அதிகாரத்தையும் தக்கவைக்க, எதிரிகளை உருவாக்குகின்றது. தற்போது 'இஸ்லாம் பயங்கரவாதம்" என்று ஊடகங்கள் மூலம்  ஊளையிட்டு, மக்களை மூளைச் சலவை செய்கின்றது. இதுபோல்; பேரினவாதம் சொற்களை தேர்ந்தெடுத்து இன்று பிரச்சாரம் செய்கின்றது.

 

இந்த பேரினவாத சொற்களுக்குள் தான், தமிழ் ஊடகவியல் அரசியல் விபச்சாரம் செய்கின்றது. இதன் ஊடாக பேரினவாதம் தன் சொந்த இனவாத அழித்தொழிப்பு யுத்தத்தை நடத்துவதுடன், அதை நியாயப்படுத்தி விடுகின்றது. தமிழ் மக்களை காப்பாற்றவே பேரினவாதம் போராடுவதாக காட்டும் சொற்கள் மூலம், தமிழ் இனத்திற்கு எதிராகவே அதை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

 

இந்த வகையில் 'மீட்பு" 'மீட்பு நடவடிக்கை", 'பயங்கரவாத ஒழிப்பு", 'தஞ்சம்", 'அடைக்கலம் கோரல்", 'பணயக்கைதி", 'மக்கள் இராணுவத்துக்கு நன்றி தெரிவித்தல்", 'சரணடையும் புலிகளுக்கு புனர்வாழ்வு", 'சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற்றம்", 'பொதுமக்கள் தப்பி வருவதைத் தடுக்கும் புலிகள்", 'புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவம்", 'உலகிலேயே மிகப் பெரிய மீட்புப் பணி", 'பொதுமக்கள் படையினரிடம் தஞ்சம்!", 'மனிதக் கேடயங்களாக மக்கள்", 'யுத்தப் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் மக்கள்", 'புனர் வாழ்வு", 'மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வருதல்", 'மக்களை பாதுகாப்பாக வெளியேற்றல்", 'மக்களை வெளியேற்ற பாதை திறப்பு", 'பாதுகாப்பு படையை நோக்கி மக்கள் வருதல்", 'பொதுமக்கள் தப்பி வருதல்" 'மக்களுக்கு தேவையான சகல அத்தியாவசிய வசதிகளை வழங்கல்", 'புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி வருவதற்கு தயாராக உள்ளனர்" இப்படி வார்த்தைகள், சொற்கள். இதுவே நாம் பார்க்கும், கேட்கும், வாசிக்கும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிற்கின்றது.  

 

முழுப் பேரினவாத பிரச்சாரமும், இப்படி இந்த சொற்களுக்குள் தான் அடங்குகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. எல்லாக் கட்டுரைகளும், செய்திகளும் இது போன்ற சொற்கோவைக்குள் உள்ளடக்கப்பட்டு பிரச்சாரம் செய்கின்றனர். அரசுக்காக பிரச்சாரம் செய்யும் தேனீ இணையமாகட்டும், ஊடக விபச்சாரம் செய்யும் தேசம் இணையமாகட்டும், பேரினவாத கொலைகார பத்திரிகையான தினகரனாகட்டும், பொய்யையும் பித்தலாட்டத்தையும் செய்யும் இலங்கை ரூபவாகினியாகட்டும், இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழ் மக்களின் பிரச்சனையை இதற்குளளே தான் திட்டமிட்டு காட்டுகின்றனர்.

 

இலங்கையில் பேரினவாதம் நடத்துவது இனவழிப்பு என்பதையும், இனப் படுகொலை என்பதையும், இனச் சுத்திகரிப்பு என்பதையும், இனக் களையெடுப்பு என்பதையும் இவை திட்டமிட்டு மூடிமறைத்து மறுதலிக்கின்றனர். அந்த மக்கள் தங்கள் சொந்த மண்ணில் அனாதையாகி, அடிமையாகி, அனாதரவாகி பேரினவாதம் படுகொலை செய்கின்றது. திறந்தவெளி சிறைக்கூடங்களில் வைத்து வதைக்கப்படுவதுடன், அவர்களை பேரினவாதம் திட்டமிட்டு நலமடிக்கின்றது. சொந்த பந்தங்களை இழந்து, அனாதரவாக, இடம் வலம் தெரியாத, முட்கம்பிக்குள் தமிழினத்தை அடைத்துவைத்து உளவியல் ரீதியாகவே பேரினவாதம் கொல்லுகின்றது. ஒரு சமூகம், தன் வாழ்வை, உழைப்பை எல்லாம் பேரினவாத வெறியாட்டத்துக்கு பறிகொடுத்து, இன்று தம் உயிரையே இழக்கின்றனர்.

 

அரச பயங்கரவாதம் மூலம் மக்களை விரட்டி, பின் கொன்று குவித்து, தப்பிப் பிழைப்பவர்களை எல்லாம் வளைத்துப் பிடிக்கின்றனர். இப்படி பிடிபட்டவர்கள், பிடித்து இழுத்து வரப்படுகின்றனர். பின் தம் மிருககாட்சியகத்தில் அடைத்துவைக்கப்பட்ட நிலையில்,  உலகம் பார்க்கும் வண்ணம் அடைத்து வைக்;கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் உற்றார் உறவினர்களைக் கூட சந்திக்க முடியாது. வெளி உலகுடன் தொடர்பு கொள்ளமுடியாது. சுதந்திர நடமாட்டம் எங்கே, இயல்பு வாழ்வு எங்கே.

 

வன்னி நிலப்பரப்பில் அந்த மக்கள் கொஞ்சமாவது சுதந்திரமாக வாழ்ந்தார்கள். இங்கு அதை விட மோசமான நிலையில் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும் இழந்து, சொந்த இரத்த உறவுகளை இழந்த நிலையில், தமிழினம் பேதலித்து நிற்கின்றது.

 

இந்த கொடூரத்தை செய்த பேரினவாதத்தை போற்றிப் பாடும் ஊடக விபச்சாரம், பேரினவாதம் இழைத்த கொடுமையை மிஞ்சும் வண்ணம், அதை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள மொழி வன்முறை. மன்னிக்க முடியாதது. ஊடக கிரிமினல்கள், எழுத்தாளர்கள் கொண்ட பச்சோந்திகள், தமிழ் மக்கள் மேல் இன்று கும்மியடிக்கின்றனர்.   

 

பி.இரயாகரன்
22.04.2009