கனவுலகிலிருந்து நனவுலகிற்கு! அதைப்பற்றிப் பேசுவோம்!

இந்நாட்களில் பிரபலமான தொனிப்பொருள் எது?

சமீபகாலமாக நாட்டில் பேசப்பட்ட தொனிப்பொருட்களில் முக்கிய இடத்தை வகித்தது போதைப் பொருள் பாவனை. நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் பொது வேட்பாளர் குறித்த பிரச்சினை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு வந்தாலும், அதையும் கடந்து, அதிகாரமாற்றம், ஆட்சிமாற்றம் குறித்துப் பேச்சுக்களும் அடிபடுகின்றன. சிலர் அதற்காக பொதுவேட்பாளரைத் தேடுகின்றனர். இவற்றுக்கிடையில் எந்த வித்தி;யாசமுமில்லை.

போதைப் பொருளுக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையில் எந்த மாற்றமும் கிடையாது?

 

உண்மையான பிரச்சினை என்ன?

பிரச்சினையே அதுதான். உண்மையான பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதளவுக்கு நாங்கள் ஆளாக்கப்பட்டுள்ளோம். பிரச்சினையைப் பற்றி நினைக்கக்கூட எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் வேகமாக ஓடுகிறோம், உழைக்கிறோம், பிள்ளைகளைப் படிப்பிக்கிறோம். சாப்பாட்டுக்கு ஏதாவது தேடிக்கொள்ளக் கஷ்டப்படுகிறோம். ஏதாவது பொருட்களை வாங்க முயல்கிறோம். பலவிதமான கட்டணங்களைக் கட்டுகிறோம், கடன் கட்டுகிறோம், வீடு கட்ட நினைக்கிறோம். அல்லது பாதி கட்டிய வீட்டுக்கான கடனை செலுத்த மேலும் கடன்படுகிறோம். மூச்சுவிட முடியாதளவுக்கு வேலை. உலகம் சுற்றும் வேகத்தில் நாங்களும் ஓடுகிறோம். சற்று நின்று நிதானமாக யோசித்தால் எங்களுக்கு இருப்பது வாழ்க்கையல்ல ஒரு இருப்பு மாத்திரமே என்பது புலப்படும்.

 

இது வாழ்க்கை இல்லையா?

வாழ்க்கை என்பதும், ஏதோ இருக்கிறோம் என்பதும் ஒன்றல்ல, வேறுவேறானவை. சாப்பாட்டுக்கு வழியில்லாமலும், உடுக்க உடையில்லாமலும் பெரும்பாலானோர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். அடிப்;படைத் தேவைகள்கூட இல்லாதிருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாழ்க்கையை, வாழ்க்கையின் சாரத்தை, சந்தோசத்தை இல்லாமலாக்கிக் கொண்டவர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால் ஒரு நாளில் பாதி நாளாவது உழைக்க வேண்டும். பஸ்ஸுக்கும், ரயிலுக்கும் மணிக்கணக்கில் பலியிட வேண்டும். வாழ்வதற்கு பணம் தேட நாளெல்லாம் ஓட வேண்டும். இதனால் வாழ்க்கை இல்லாமலாகிறது. மூச்சு விடுவதனாலோ, இருப்பு ஒன்று இருப்பதனாலோ அது மனித வாழ்க்கையாக ஆகாது.

 

முயன்றால் இதிலிருந்து மீள முடியாதா?

தனித்து முயற்சி செய்து இதிலிருந்து மீள முடியாது. அதனால் அதற்குள்ளேயே இருந்து மேலும் மேலும் மூழ்க நேரிடும். இந்த சமூகமுறை பிரச்சினைகளையும் உருவாக்கி, அதிலிருந்து மீள்வதற்காக பலவிதமான கனவுகளையும் தயாரித்திருக்கிறது. மிருகத்தனத்திற்குள் இழுத்து வீசப்பட்டிருக்கும் சமூகத்திற்கு பொருத்தமானவாறு விதவிதமான தனிநபர் கனவுகளையும், நிர்மாணித்திருக்கிறது. அந்தக் கனவுகளை நனவாக்கிக் கொள்ள கடுமையாக போராடும் எங்களை அதிகமதிகமாக சுரண்டித் தின்கிறது. வேலைத்தலத்திலும், சந்தையிலும், நாங்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி செய்யும் சிறு வியாபாரத்திலும், நுகர்விலும், கலாச்சார வாழ்விலும் எல்லா இடங்களிலும் சுரண்டப்படுகிறோம். நாங்கள் கூட்டாக முழு சமூகம் சம்பந்தமான, எமது வாழ்க்கை சம்பந்தமான, சுற்றாடல் சம்பந்தமான விடயங்களில் பொறுப்பை எமது கையில் எடுத்தால் மாத்திரமே இதனைத் தடுத்து நிறுத்த முடியும். இதனை வேறு யாராவது செய்வார்கள் என பார்த்துக் கொண்டிருந்தால் இந்த நரகத்தில் வெந்து சாகத்தான் வேண்டும்.

 

மாற்றமொன்று தேவைதானே?

மாற்றமொன்று தேவை. எங்களது வாழ்க்கையில், சிந்தனையில், சமூகத்தில் இந்த எல்லா இடத்திலும் மாற்றம் தேவை. இருப்பவருக்குப் பதிலாக இன்னொருவரை பிரதிசெய்யும் மேலோட்டமான மாற்றமல்ல. உண்மையான மாற்றமொன்றே தேவை. மஹிந்த ராஜபக்ஷ தமது கனவுகளை நிறைவேற்றுவாரென சிலகாலமாக எதிர்ப்பார்த்திருந்ததைப் போன்று, இப்போது பொது வேட்பாளர் என்ற கனவில் சிக்கிக் கொள்வதில் பயனில்லை. பழைய ஊசிப்போன கேக் அப்படியே இருக்க ஐசிங் பூசி அழகுபடுத்துவதால் எந்தப் பிரயோசனமாவது இருக்கிறதா?

 

இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

யாராவது ஒரு மீட்பர் அல்லது சுப்பர்ஸ்டார் வருவார், எங்களுக்கிருப்பது பார்த்துக் கைதட்டுவதும் வாக்களிப்பதும் மட்டும்தான் என பாரத்துக் கொண்டிருக்க வேண்டாம். எங்களது மீட்பும், எங்களது விடுதலையும் எங்கள் கையில்தான் உள்ளது. தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள், சுய தொழில் புரிவோர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட இனவாதத்தால் துன்புறுவோர், மற்றும் சுரண்டலுக்கு, அவமானத்திற்கு, மிரட்டலுக்கு பலியாக்கப்பட்ட எங்களைப் போன்றோர் அடுத்தவர்களின் கனவுகளை கடன் வாங்குவதை நிறுத்துவோம். நாங்கள், எங்களுக்கேயான கொள்கையை வகுத்துக் கொள்வோம். நிறுவனமாவோம், செயற்படுவோம். சமூகத்தைப் பற்றிய, சுற்றாடலைப் பற்றிய பொறுப்பை எமது கையில் எடுப்போம். அப்படியானால் நாம் அரசியல் செய்வோம்.

 

இருந்தாலும்... அரசியலென்றால் எங்களுக்கு...?

நீங்கள் சொல்ல வருவது அரசியல் எங்களுக்கு தேவையில்லை, அரசியலுக்கு நாங்கள் விருப்பமில்லை, எங்களுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது என்பதைப் போன்று எப்போதும் சொல்வதைத்தானே. நாங்கள் சொல்வது வேறு அரசியலைப்பற்றி. எப்போதும் கேட்டதை விட வித்தியாசமான ஒன்று குறித்து. இந்த நெருக்கடி வெடித்துச் சிதறும்வரை காத்திருக்க வேண்டாம். வித்தியாசமான வாழ்க்கையை, வித்தியாசமான சமூகத்தை அமைப்பது பற்றி, புதிய வாழ்க்கையை – புதிய சமூகத்தை உருவாக்குவதைப் பற்றி  பேசுவோம்,

நீங்கள் விரும்பினால் முன்னிலை சோஷலிஸக் கட்சி அது குறித்து பேசுவதற்குத் தயாராக இருக்கிறது.

நீங்கள் விரும்பாவிட்டால் எங்களிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இதைப்பற்றி அதிகமாக சிந்தியுங்கள், பகுப்பாய்வு செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் பேசுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

முன்னிலை சோஷலிஸக் கட்சி

Last Updated on Monday, 26 May 2014 12:11