ஏழை நாடுகளின் மீது மறுகாலனியாக்கத்தைத் திணிப்பதற்கு வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களே, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள்.உலக வங்கி என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான வங்கியுமல்ல; ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கெல்லாம் கடனுதவி வழங்கும் வள்ளலுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை எல்லா ஏழை நாடுகளுக்கும் விரிவுபடுத்துவது, அதற்கேற்ப சட்டதிட்டங்களைத் திருத்தியமைக்குமாறு அந்நாட்டு அரசுகளை நிர்ப்பந்திப்பது,

ஆட்சிகள் மாறினாலும் எந்த நாட்டிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனத்துக்கோ சுரண்டலுக்கோ ஊறு நேராமல் உத்திரவாதப்படுத்துவது, உலக முதலாளித்துவத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்துவது — என்பவைதான் உலக வங்கியின் பணிகள்.
உலக வங்கியின் விதிகள் 1944இல் உருவாக்கப்பட்டவை. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் 85 சதவீத வாக்குகள் வேண்டும் என்கிறது அந்த விதி. ஆனால் வங்கியின் 17 சதவீதப் பங்குகளை அமெரிக்கா நிரந்தரமாகத் தன் கையில் வைத்திருக்கிறது. அதாவது, தான் விரும்பாத எந்த முடிவையும் அமெரிக்கா "வீட்டோ' செய்து தடுத்துவிட முடியும். உலகவங்கியின் தலைவரை நியமிக்கும் உரிமையும் அமெரிக்க அதிபருக்கு மட்டுமே உண்டு.


சுருக்கமாகச் சொன்னால், உலக வங்கி என்ற பெயரில் அமெரிக்க முதலாளிகள் நடத்தும் இந்தக் கந்துவட்டி பைனான்சு கம்பெனியின் நோக்கமே ஏழை நாடுகளை அடகுபிடிப்பதுதான்.


உலக வங்கி உதவி, தனியார்மய சதி!


"குடிநீர்த் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, பாசனத் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, தூர்வாருவதற்கு உலக வங்கி உதவி'' என்று உலக வங்கி அள்ளிக் கொடுக்கும் கடனுதவிகள் எல்லாம் ஏழை நாடுகளின் நீர்வளத்தை மேம்படுத்துவதற்காகத் தரப்படும் உதவிகள் அல்ல; அவற்றை விழுங்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செய்யப்படும் "உதவிகள்'.


பல்வேறு ஏழை நாடுகளின் நீர் வளங்களையும், நகரக் குடிநீர் விநியோகத்தையும் பிடுங்கி அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை 1990ஆம் ஆண்டு முதற்கொண்டே தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது உலகவங்கி.


"தண்ணீர் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் உரிமையுள்ள இயற்கையின் கொடை அல்ல அது காசுக்கு விற்க வேண்டிய சரக்கு; தண்ணீர் மனிதனின் அடிப்படை தேவையல்ல காசு தருபவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை; தண்ணீர் மனிதகுலமே போற்றிப் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமல்ல அது முதலாளிகள் லாபம் பார்ப்பதற்கான முதலீடு'' — என்பதுதான் உலகவங்கியின் கொள்கை.


"மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் குடிநீர் வழங்குவது, விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்குவது'' என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டுமென்று பகிரங்கமாக அறிவிக்கிறது உலகவங்கி. ஒழித்துக் கட்டியுமிருக்கிறது.


பணக்கார நாடான அமெரிக்காவிலோ ஐரோப்பிய நாடுகளிலோ அல்ல; ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த ஏழை நாடுகளில்தான் உலக வங்கி தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது. கடன்பட்டு வட்டி கட்ட முடியாமல் திணறும் ஏழை நாட்டு அரசுகளை மிரட்டி "தண்ணீரை தனியார்மயமாக்க ஒப்புக் கொள்வதாக' எழுதி வாங்கியிருக்கிறது. மறுத்தால் அந்த நாடுகளுக்கு வேறு யாருமே கடன் கொடுக்க விடாமல் தடுப்பது, அந்நாடுகளின் வணிகத்தை முடக்குவது, கடனை உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லி மிரட்டுவது என ஒரு கந்து வட்டிக்காரன் செய்யக்கூடிய எல்லா ரவுடித்தனங்களையும் செய்து காரியத்தைச் சாதித்திருக்கிறது.


அந்த நாடுகளின் நாடாளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ தெரிந்தால் அரசியல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் ரகசிய ஒப்பந்தங்கள் மூலமே பல நாடுகளின் தண்ணீர் வளத்தை பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது.


நரியைப் பரியாக்கும் வித்தை!


தனியார்மயத்தைச் சாதிக்க உலகவங்கி கையாளும் உத்திகள் நரித்தனமானவை. ஏற்கெனவே இலவசக் குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கவேண்டும். பிறகு கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். "கட்டணம் அதிகம் அரசின் சேவை மோசம்'' என்ற கருத்து மக்களுக்கு ஏற்படத் தொடங்கியவுடனே "தரமான சேவை' என்று கூறி தனியார்மயத்தை அறிமுகப்படுத்தும் வேலையையும் அந்த அரசே முன்நின்று செய்ய வேண்டும் — இதுதான் தண்ணீர் தனியார்மயத்திற்கு உலகவங்கி போட்டுத் தந்திருக்கும் பாதை. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்குவதற்கு இதே பாதைதான் நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


1990 முதல் 2002ஆம் ஆண்டு வரை குடிநீருக்காக உலகவங்கி கொடுத்த 276 கடன்களில் 84 கடன்கள் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நிபந்தனையோடு கூடியவை. 1996 முதல் 1999 வரை கொடுக்கப்பட்ட மற்ற கடன்கள் 193 இல் 112க்கு தண்ணீர் தனியார்மயம் ஒரு நிபந்தனை.


உலக வங்கியின் நிபந்தனைக்கிணங்க தண்ணீரைத் தனியார்மயமாக்கிய நாடுகளில் நடந்தது என்ன? சில அனுபவங்களைக் காண்போம்:


பொலிவியா (தென் அமெரிக்கா) நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான கொச்சபம்பாவின் நீர்விநியோகத்தை பெக்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 40 ஆண்டு குத்தகைக்கு விட்டது நகராட்சி.


"தண்ணீரைத் தனியாருக்கு விட்டால்தான் கடன் தருவேன்'' என 1996இல் அந்த மாநகராட்சியை நிர்பந்தித்தது உலக வங்கி. "பொலிவியாவின் கடன்களை அடைக்க காலநீட்டிப்பு தரவேண்டுமானால் தண்ணீரைத் தனியார்மயமாக்கு'' என 1997இல் பொலிவிய அரசையும் மிரட்டியது. குடிநீருக்கு மானியம் தரக்கூடாதென 1999இல் நிர்பந்தம் கொடுத்தது. கடைசியில் 2000ஆவது ஆண்டு கொச்சபம்பா நகர குடிநீர் விநியோகத்தை பெக்டெல் நிறுவனம் கைப்பற்றியது.


உடனே குடிநீர்க் கட்டணம் 200% முதல் 500% வரை உயர்த்தப்பட்டது. மாதம் 2000 ரூபாய் சம்பாதிக்கும் சாதாரணத் தொழிலாளர்களின் குழாய் நீர்க் கட்டணம் 200இலிருந்து 800 ரூபாயாக உயர்ந்தது. சோறா தண்ணீரா, மின்சாரமா தண்ணீரா, பிள்ளைகளின் கல்வியா தண்ணீரா என்று முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்தனர். "தண்ணீர் எனக்குச் சொந்தமென்றால் மழையும் எனக்குச் சொந்தம். மழைநீர் சேமிக்கும் விவசாயிகளும் வரி கட்டி எங்களிடம் அனுமதி பெற வேண்டும்'' என்று அறிவித்தது பெக்டெல்.


உடனே வெடித்தது மக்கள் போராட்டம். 3.5 லட்சம் மக்கள் திரண்டனர். பொலிவிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 170 பேர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். போராட்டத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்து நடுக்காட்டிலுள்ள சிறையில் அடைத்தது அரசு. எனினும் போராட்டம் வெற்றி பெற்றது.


பெக்டெல் வெளியேறியது. ஆனால், தான் சம்பாதித்திருக்கக் கூடிய லாபத்தின் ஒரு பகுதியாக சுமார் 200 கோடி ரூபாயை பொலிவிய அரசு இழப்பீடாகத் தரவேண்டுமென, உலக வங்கி நடத்தும் முதலீட்டாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களிடமிருந்து குடிக்கிற தண்ணீருக்குக் காசு பிடுங்க முடியாத அந்த அமெரிக்க நிறுவனம், குடிக்காத தண்ணீருக்கு 200 கோடிரூபாய் வசூலிக்கப் போகிறது — பொலிவிய மக்களின் வரிப்பணத்திலிருந்து.


பிலிப்பைன்சின் தலைநகரான மணிலாவில் மாநகராட்சியின் குடிநீர்ச் சேவை மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தது. குழாய்கள் உடைந்து தண்ணீர் கசிவது, தண்ணீர்த் திருட்டு, முறையான சேவையின்மை என தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்கான எல்லா முகாந்திரங்களும் அங்கே இருந்தன.


உலகின் இரண்டாவது பெரிய பன்னாட்டுத் தண்ணீர்க் கம்பெனியான சூயஸ் நிறுவனத்திடம் 1997இல் மணிலா நகரின் தண்ணீர் விநியோகம் ஒப்படைக்கப்பட்டது. முதல் சில ஆண்டுகளில் நன்றாக இருந்த சேவை, போகப் போக நகராட்சிச் சேவையைக் காட்டிலும் மோசமாக மாறத் தொடங்கியது. தண்ணீர்க் கட்டணமோ 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. "மீட்டரைப் பார்த்துக் குறிப்பதற்குக் கட்டணம், குழாய் ரிப்பேர் செய்ய வந்தால் 2500 ரூபாய் என்று விதவிதமாகக் கொள்ளையடிக்கிறார்கள். சேவையே வழங்காமல் காசு பார்க்க அலைகிறார்கள்'' என்பதுதான் மணிலா மக்கள் தனியார் "சேவை'யைப் பற்றித் தெரிவித்த கருத்து.


"தண்ணீர்ச் சேவைக்கான கட்டணத்தை டாலரில் செலுத்த வேண்டும்'' என்பது பிலிப்பைன்ஸ் அரசுடன் சூயஸ் போட்டிருந்த ஒப்பந்தம். டாலருக்கெதிராக பிலிப்பைன்ஸ் நாணயமான பெசோவின் மதிப்பு வீழ்ந்து விட்டதால் அதற்கு 1400 கோடி ரூபாய் நட்டஈடு கேட்கிறது சூயஸ். டிசம்பர் 2002இல் சூயஸ் வெளியேறிவிட்டது.


உடைந்து ஒழுகும் குடிநீர்க் குழாய்களையும், கழிவுநீர்க் குழாய்களையும் சரி செய்து பழையபடி மாநகராட்சியை வைத்து இயக்குவதற்கான செலவை இனி அந்த அரசுதான் ஏற்கவேண்டும். இதுதான் தனியார்மயத்தால் பிலிப்பைன்ஸ் நாடு கண்ட பலன்.


தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நெல்சல் மண்டேலாவின் தலைமையில் 1994இல் ஆட்சி அமைத்தது. "எனது ஆட்சியின் அடிப்படைக் கொள்கை தனியார்மயம்தான்'' என்று ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவித்தார் மண்டேலா. உலகவங்கியோ "தென் ஆப்பிரிக்கா எங்கள் சோதனைச் சாலை'' என்றது.


1998இல் தலைநகரம் ஜோகனஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் குடிநீர் விநியோகம் சூயஸ், விவென்டி, பைவாட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டது. மீட்டர் விலை 7500 ரூபாய். தண்ணீர்க் கட்டணம் மாத வருவாயில் 30 சதவீதத்தை விழுங்கியது. 4 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் இரண்டே ஆண்டுகளில் 1 கோடி மக்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் காவல்படையுடன் தண்ணீர்க் கம்பெனி ஊழியர்கள் வந்து இறங்கி குழாய் இணைப்பைத் துண்டிப்பதும் அந்த இடத்தில் கலவரம் வெடித்து ரத்தக் களரியாவதும் அன்றாட நடைமுறையானது.


வீட்டில் குழாய் வசதி இல்லாமல் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் குடிசைவாழ் மக்களையும் பன்னாட்டுக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் காசு பிடுங்க ப்ரீ பெய்டு கார்டு (செல்போனுக்கு உள்ளதைப் போல முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பெறும் அட்டை) முறையை அமலாக்கின. குழாயின் மீட்டரில் அட்டையைச் செருகினால் தண்ணீர் வரும். அட்டையில் காசு தீர்ந்துவிட்டால் தண்ணீரும் நின்று விடும்.


"கையில காசு வாயில தண்ணி'' என்ற இந்த வக்கிரமான முறை காரணமாக ஏழைகள் குளம் குட்டைகளிலிருந்து மாசுபட்ட தண்ணீரைக் குடிக்குமாறு தள்ளப்பட்டனர். கார்டு முறை அமல்படுத்தப்பட்ட ஆறே மாதத்தில் குவாசுலூ நகரில் காலரா தொடங்கி தலைநகர் வரை பரவியது. இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 265 பேர் இறந்தனர். முன்னர் அதேநகரில் வெள்ளை நிறவெறி ஆட்சியின்போது காலரா பரவி 24 பேர் இறந்ததால், நிறவெறி அரசு 9 பொதுக் குழாய்களை அமைத்திருந்தது. அந்தக் குழாய்களுக்கும் மீட்டர் போட்டு சாவு எண்ணிக்கையை 265 ஆக்கியது "கறுப்பின'த் தலைவரின் ஆட்சி.


தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து "உடையுங்கள் மீட்டரை சுவையுங்கள் தண்ணீரை'' என்ற மக்கள் இயக்கம் அங்கே பரவத் தொடங்கியதும் பயந்து போன அரசு, குழாய் இணைப்புள்ள வீடுகளில் "ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் இலவசம். அதற்கு மேல் காசு'' என்று அறிவித்தது.


குடிக்க, குளிக்க, துவைக்க எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு இது எப்படிப் போதும்? "5 நாளுக்கு ஒருமுறை குளி, ஒரு நாளைக்கு 2 தடவைக்கு மேல் கக்கூசுக்குத் தண்ணீர் ஊற்றாதே'' என்று பிரச்சாரம் செய்தது அரசு. கழிவறைக்கு இப்போது பழைய செய்தித்தாளைப் பயன்படுத்துகிறார்கள் ஏழைமக்கள்.


இதை எதிர்த்து மக்கள் குழாய்களை உடைக்கத் தொடங்கியதால், குடிசைப் பகுதிகளில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வருவது போல குழாய்களுக்குள் அடைப்பான்களை வைத்து விட்டன தண்ணீர்க் கம்பெனிகள்.


மக்களின் போராட்டம் தொடர்கிறது. தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டதனால் "கறுப்பின' ஆட்சியில் 73% கறுப்பின மக்களுக்கு குடிநீர் இல்லை. 97% வெள்ளையர்கள் தண்ணீரை அனுபவிக்கிறார்கள்.


தென் ஆப்பிரிக்காவில், கறுப்பின அரசைக் கொண்டே வெள்ளை நிறவெறியைப் புதிய வடிவத்தில் அமல்படுத்த வைத்திருக்கிறது தனியார்மயக் கொள்கை.


தண்ணீர் தனியார்மயம்: படுதோல்வி!


இவை மூன்று உதாரணங்கள் மட்டுமே. பன்னாட்டுக் கம்பெனிகள் நடத்தும் தண்ணீர் விநியோகம் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலேயே கூட வெற்றியடையவில்லை.


"சுத்தமான குடிநீர் தரமான சேவை' என்ற அவர்களது முழக்கம் முழுப் பொய். இரசாயனக் கழிவுகள் கலந்த மோசமான தண்ணீரை விநியோகித்ததற்காகவே பல நாட்டு மக்கள் இக்கம்பெனிகளை விரட்டி யிருக்கிறார்கள். நகராட்சிக் குழாய் நீரைப் பிடித்து பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்பனை செய்த கோக் நிறுவனம் சமீபத்தில் பிரிட்டனில் பிடிபட்டது. கழிவு நீரை ஆற்றில் விடுவது, சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது என எல்லா மோசடிகளுக்காகவும் இவர்கள் பிடிபட்டிருக்கின்றனர். முதன்முதலில் தண்ணீர் தனியார்மயம் அமலாக்கப்பட்ட இங்கிலாந்தில் மட்டும் 1989 முதல் 1997க்குள் 128 வழக்குகளில் தனியார் கம்பெனிகள் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று அபராதம் கட்டியுள்ளனர்.


ஏழை நடுத்தர மக்களின் மாத வருவாயில் மூன்றிலொரு பங்கு வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளையடித்தது ஒன்றுதான் தனியார்மயத்தை வரவேற்றவர்களுக்கு முதலாளிகள் தந்த பரிசு. "காசில்லாமல் குடிநீர் இல்லை' என்பதால் தனியார்மயம் அமல்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் காலரா, வயிற்றுப் போக்கு, குடற்புண் போன்ற நோய்களுக்கு இரையாகியிருக்கிறார்கள்.