1946 கப்பற்படை எழுச்சியைக் காங்கிரசுத் துரோகிகள் காட்டிக் கொடுத்து இந்திய விடுதலையின் முதுகெலும்பையே முறித்துவிட்டனர். தொழிலாளர்களும், மாணவர்களுமாக 30,000 பேர் பம்பாய் கப்பற்படைக் கலகத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். வேலை நிறுத்தம் செய்தனர். ஏறத்தாழ 20,000 கப்பற்படை வீரர்கள் செங்கொடி ஏந்தி பம்பாய் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். "புரட்சி ஓங்குக! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!' என விண்ணதிர முழங்கினர். ராயல் இந்தியக் கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் கையகப்படுத்தி விட்டனர். எல்லா கப்பல்களிலும் காங்கிரசு, முசுலீம் லீக் மற்றும் செங்கொடிகள் இணைந்து பறந்தன. கப்பற்படை வீரர்களை இந்திய இராணுவத்தினர் சுட மறுத்துவிட்டனர்.


கப்பற்படையின் கலகத்தை அடக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட மிருகத்தனமான அடக்குமுறைகளை காங்கிரசோ முசுலீம் லீக் தலைவர்களோ ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஏகாதிபத்திய விசுவாசிகளிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் கண்டிக்கும் "புனிதச் செயல்களை' அவர்கள் ஜுர வேகத்தில் துவங்கினர். அகிம்சா தர்மத்திற்கு மாறாக இந்துக்களும் முசுலீம்களும் "புனிதமற்ற ஒரு கூட்டில்' சேர்ந்ததாக மக்களைச் சாடினார் காந்தி.


"நம்முடைய வேலை நிறுத்தம் நம் நாட்டு வாழ்க்கையில் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருந்துள்ளது. முதன்முதலாக ஒரு பொது இலட்சியத்திற்காக இராணுவத்திலுள்ள மனிதர்களின் ரத்தமும், வீதியிலுள்ள மனிதர்களின் இரத்தமும் சேர்ந்து பெருகின. படையிலுள்ள நாங்கள் ஒருக்காலும் இதை மறக்க மாட்டோம். எங்கள் சகோதர சகோதரிகளான நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நம்முடைய பெருமக்கள் நீடுழி வாழ்க!'' என ஆரவாரமில்லாமல் மக்களிடையே வேண்டுகோள் விடுத்த கப்பற்படை வேலை நிறுத்தக் கமிட்டியைக் கைது செய்யவும், கப்பற்படை எழுச்சியை அடக்கவும் "அரசாங்கத்தின் வசமுள்ள அதிகபட்ச சக்தியைப் பயன்படுத்துவேன். இதனால் கடற்படையே அழிந்து போனாலும் சரி'' எனப் பிரிட்டிஷ் அட்மிரல் காட்பிரே கடற்படையினரை மிரட்டினான்.


மாபெரும் கப்பற்படை எழுச்சியைக் கண்டு "மகாத்மா' என்ன செய்தார்? பச்சைத் துரோகத்தனத்தால் முதுகில் குத்திக் கொல்லப்பட்ட அந்தப் போராட்டத்தின் சவப்பெட்டிக்குக் கடைசி ஆணியை அறைந்தது அவர்தான். அந்தப் போராட்டம் எங்கே வெற்றி பெற்று விடுமோ எனக் குலை நடுங்கினார். "அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டை காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காணுவதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக, தீயில் குதித்து என்னை அழித்துக் கொள்வேன்'' (ஹரிஜன், ஏப்ரல் 2, 1946) என அரற்றிய காந்தி, போராடும் மக்களைக் "காலிகள்' என வருணித்து மக்கள் விரோத நெருப்பை அள்ளி உமிழ்ந்தார்.