சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் முதிர்வே உலகமயமாதலாகும்.

மனித சமூக சாரத்தை நாம் உள்ளது உள்ளபடி புரிந்து  கொள்வதற்கு, ஒட்டுமொத்தமாகவே இயற்கை சார்ந்து  முழுமையாக ஆராயவேண்டும். மாவோ கூறியது போல் ""ஒரு விசயத்தைப் பூர்த்தியாக அதன் முழுமையில் பிரதிபலிக்க வேண்டுமானால், அதன் சாராம்சத்தையும் அதில் உறைந்து கிடக்கும் விதிகளையும் பிரதிபலிக்க வேண்டுமானால், புலன் உணர்வுகளின் மூலம் கிடைக்கும் ஏராளமான விவரங்களில் கொச்சையானதைத் தள்ளி, சாராம்சத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு பொய்யானதை அகற்றிவிட்டு உண்மையானதை வைத்துக் கொண்டு, ஒரு அம்சத்திலிருந்து இன்னொரு அம்சத்திற்குத் தொடர்பு கொண்டு, புறத்திலிருந்து உட்பொருளுக்குச் சென்று ஆராயவேண்டும்.

அவ்வாறு செய்து அவ்விசயம் பற்றி ஒரு கருத்தமைப்பையும், கோட்பாட்டு அமைப்பையும் உருவாக்குகின்றோம். புலன் அறிவிலிருந்து பகுத்தறிவுக்குப் பாய்வது அவசியமாகும்.'' நாம் உலகமயமாதலை புரிந்துகொள்ள கையாளும் விதி என்பது, ஓட்டுமொத்த எதார்த்தம் சார்ந்த உண்மைகளைக் காண்பதில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. கவர்ச்சிகரமான சொல் அலங்காரமான பிரதிபலிப்புகளையும் கடந்து, போலியான ஜனநாயகமான சுதந்திரமான கொச்சையான புலம்பல்களை உதறி எறிகின்றபோது, நமக்கு கிடைப்பது அதிர்ச்சியூட்டுவதாகவே எப்போதும் இருக்கின்றது.


 மனித இனம் சுதந்திரமாக முன்னேறுகின்றது என்றும் ஜனநாயகம் மக்கள் மயமாகி விழிப்புறுகின்றது என்ற எண்ணற்ற உலகமயமாதல் பற்றிய விளக்கங்ளை கடந்து, மனித இனம் அடிமை நிலைக்குள் சிதைந்து விட்டதையும், ஜனநாயகம் என்பது மறுக்கப் பட்டு அவை பரந்துபட்ட பொதுமக்களுக்கு, வெறும் சொற்களுக்கு வெளியே அவசியமற்ற ஒன்று என்பதை எதார்த்தம் நிறுவி வருகின்றது. உயர்ந்தபட்சம் மக்களை சூறையாடுவதற்கு ஏற்றவர்கள் யார் என்பதை வாக்கு போட்டு தெரிவு செய்யும் உரிமையே, உன்னதமான ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. மக்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பறிக்க, மக்களே அதற்கு வாக்களிக்கும் உரிமையே சுதந்திரம் ஜனநாயகம் என்பது மாற்ற முடியாத மூலதனத்தின் அடிப்படை விதியாகிவிட்டது. இதைத் தாண்டி மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் சார்ந்த எந்த தேர்வுகளும், எதார்த்தத்தில் மனித குலத்துக்கு இருப்பதில்லை. 


 சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பரிசளித்து இருப்பதாக ஏகாதிபத்தியங்கள் தாங்களாகவே மார்தட்டுகின்றனர். இதற்கு எதிரானவற்றை ஒடுக்க, உலகக் காவலராக தாம் இருப்பதாகக் கூறுவதுடன், உலகெங்கும் போலீஸ்கார வேலையைச் செய்கின்றனர். ஆனால் உண்மை எப்போதும் ஜனநாயக மறுப்பாகவே இருந்து வருகின்றது. பரந்துபட்ட மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பறித்தெடுப்பதே உலகமயமாதலின் அடிப்படை உள்ளடக்கமாகும். இதைச் செய்வதே, மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகளின் விதியாகின்றது. இதற்கு வெளியில் சுதந்திரம், ஜனநாயகம் என்பதற்கு, இந்த உலகமயமாதல் அமைப்பில் வேறு விளக்கம் எதுவும் இருப்பதில்லை.


 ஜனநாயகம், சுதந்திரம் என்பதின் அரசியல் உள்ளடக்கம், மனிதனை சுரண்டும் உரிமையை அங்கீகரிப்பதைத் தாண்டி இதற்கென வேறு விளக்கம் கிடையாது. அனைத்து மக்களுக்கும் சுதந்திரமும், ஜனநாயகமும் இருக்குமாயின், அவை உண்மையில் அதற்கேயுரிய தூய அர்த்தத்தில் இருந்தே அது செயல் இழந்துவிடும்;. ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் மறுக்கும் போதே, அங்கு சுதந்திரம் ஜனநாயகம் என்ற கோசம் எழும்புகின்றது. அதனால் ஒரு மனிதன் சுரண்டப்படும் வரைதான், சுதந்திரமும், ஜனநாயகமும் உயிர் வாழமுடியும். இதற்கு வெளியில் சுதந்திரம், ஜனநாயகம் என்பன சுயேச்சையானவையல்ல. சுரண்டல் உள்ளவரை, ஜனநாயகமும், சுதந்திரமும் சுரண்டப்படுபவனுக்கு இருப்பதில்லை. இதை சுட்டிக் காட்டும்போது, ஜனநாயகத்தின் எதிரிகள் என்கின்றனர், சுதந்திரத்தின் எதிரிகள் என்கின்றனர். பயங்கரவாதிகள் என்கின்றனர். இது இந்த உலகமயமாதலின் சமூக அமைப்பின், அடிப்படையான சித்தாந்தமாக உள்ளது. அதாவது இது மூலதனத்தின் அச்சாகவும், அதன் சித்தாந்தமாகவும் உள்ளது.


 உலகமயமாதல் சுரண்டலை உலகமயமாக்கும் போது, தனது சுதந்திரம், ஜனநாயகம் என்ற அடிப்படைக் கோசத்தில் இருந்தே தன்னை ஆயுதபாணியாக்குகின்றது. உலகளவில் உழைக்கும் மக்களைச் சுரண்டும் அடிப்படை சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உலகளாவிய சட்டமாக்குவதில், ஒவ்வொரு நாட்டின் சட்ட திட்டத்திலும் மாற்றங்களை உலகமயமாதல் செய்து வருகின்றது. அதை விசுவாசமாக வாலாட்டிச் செய்யும் அரசுகளையே, மக்கள் சுதந்திரமான வாக்களிப்பு மூலம் ஜனநாயகபூர்வமாக தெரிவு செய்வதாகப் பாசாங்கின்றி நியாயப்படுத்துகின்றனர். இன்று உலக மக்களை விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு தேசங்கடந்த நிறுவனங்கள் சுரண்ட அனுமதிப்பதே, ஒவ்வொரு நாட்டினதும் சுதந்திரமான ஜனநாயகமாகிவிட்டது. இதுவே உலகமயமாதல். இந்த எல்லையைத் தாண்டி சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் வேறு விளக்கம் எதுவும் உலகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. உலகில் ஜனநாயகம் என்ற பெயரில் மக்களைக் கொண்டு போட வைக்கும் வாக்குச் சீட்டுகள் அனைத்தும், உலகமயமாதல் என்ற சுரண்டலுக்கு வெளியில் சுதந்திரமாகவும் ஜனநாயகப்பூர்வமாகவும் செயல்படுவதில்லை. உலகமயமாதலை நிறைவு செய்யும் அரசியல் பொம்மைகளையே வாக்குச் சீட்டுகள் உலகெங்கும் உருவாக்குகின்றன. இன்றைய உலகளாவிய அரசுகள், அவர்கள் உருவாக்கும் சட்ட திட்டங்கள் முதல் பண்பாடுகள், கலாச்சாரங்கள் எல்லாம் உலகமயமாதலுக்குள்தான் அடங்குகின்றன.
 ஜனநாயகம் உருவாக்கும் சுதந்திர உலகமயமாதல் என்ற உலகளாவிய சுரண்டல், அடிப்படையில் பரந்துபட்ட மக்களை சுரண்டும் ஆற்றல் சார்ந்து சிறிய மற்றும் இடைப்பட்ட பொருளாதார கட்டமைப்பையே அழிக்கின்றது. தேசிய அரசு சார்ந்த பொருளாதாரத்தை சூறையாடி அழிக்கின்றது. பரந்துபட்ட ஏழை மக்களின் சிறு உற்பத்தி சார்ந்து இருந்த குறைந்தபட்ச வாழ்வை அழிப்பதன் மூலம், எஞ்சிக் கிடந்த தனிமனித ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் அழிக்கின்றது. சொத்துக்கள் இழந்த எதுவுமற்ற ஏழைகளுக்கு சுதந்திரம், ஜனநாயகம் என எதுவும் இந்த சமூக அமைப்பில் இருப்பதில்லை. கையெடுத்துக் கும்பிடவும், கையேந்தி இறைஞ்சிக் கேட்கும் எல்லைக்குள்தான் சுதந்திரம் எஞ்சிக் கிடக்கின்றது. இதையும் உழைக்கும் மக்களுக்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற சுதந்திர பிரகடனத்தின் மூலம், உலகமயமாதல் ஒற்றைக் காலில் நிற்கின்றது. தேசிய எல்லைகளை அழித்து முன்னேறி வரும் உலகமயமாதல், ஜனநாயகம் சுதந்திரம் என்ற கோசத்தை முன்வைத்து இன்று எதையெல்லாம் சாதிக்க முனைகின்றதோ, அதை பரந்துபட்ட உலக மக்களுக்கு மறுப்பதை அடிப்படையான கொள்கையாகவே பிரகடனம் செய்துள்ளது. சுதந்திரமான சுரண்டல், அதை உருவாக்கும் ஜனநாயகம் என்பன பரந்துபட்ட மக்களின் உரிமையல்ல என்பதையே, உலகமயமாதல் நடைமுறையில் நிறுவி வருகின்றது. பரந்துபட்ட மக்களின் சொத்துக்கள் எப்படி விரல்விட்டு எண்ணக் கூடிய தனிநபர்களின் கையில் குவிந்து வருகின்றது என்ற தெளிவு, இயல்பாகவே ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் கடைகெட்ட நிலையை அம்பலப்படுத்தி விடுகின்றது.