1
"இனப்பெயர் ஏன்"என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
"நான்தான் திராவிடன்" என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
"முன்னாள்" என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் "திராவிடன்" ஒளிசெய் கின்றான்.
அன்னோன் கால்வழி யாகிய தொடர்கயிற்று
மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கா லத்தின் கடைசியோ டியைந்தது.
சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
"திராவிடன்" ஆலின் சிறிய வித்தே!
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்.

2
கடந்த காலப் படம் இது:
அடடே வடபெருங் குன்றமும் இல்லை!
அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே!
அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய
வெற்பின் வடபுறத்து விளையா டினவே!
மேற்கு அரபிக்கடல் கிழக்கு வங்கக்கடல்
இல்லை! என்ன வியப்பு இது!
ஆபி ரிக்கமும், ஆத்திரே லியமும்
குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும்
இடையீ டின்றி நெடிது கிடந்த
"தொடித்தோள் வையம்" தோன்றக் கண்டேன்.
அங்குக் கண்டேன்:
தென்மது ரைத்தமி ழின்முதற் கழகம்!
அதன்பாற் கண்டேன்:
ஆன்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை.
நான்ஓர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்!

தொடித்தோள் வைய நெடிய வானில்,
உடுக்கள் போற்பல உயர்நா டுகளும்
அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித்
தென்மா மதுரையும் திகழ்வ தாகப் -
பெருஞா லத்தின் இருள்கெடத் தமிழறிவு -
திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே.

3
என்னே! என்னே!
வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே!
தொடித்தோள் வையத் தூயநா டுகளில்
சிற்சில வற்றைச் சீறிவிழுங் கிற்றே!
அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே
மீண்டும் தெற்கில் ஈண்டிற்று வெள்ளம்!
மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன.
என்னே கொடுமை!
அங்குளார் இங்கு வந்தனர் அலறியே.
`தெய்'என்று செப்பும் தீமுதல் ஐந்தில்
நீர்ஒன்று அடிக்கடி நெடுநிலம் விழுங்கலால்
சிதறி வந்த தென்புலத் தாரை
ஓம்பும்நாள் இடைவிடாது உளவா யிற்றே!

4
கடற்கீழ்க் கிடந்த வடபெரும் பனிமலை
மேற்றோன் றும்படி மிகுபெருங் கடல்நீர்
தென்பால் ஐயகோ சீறி வந்ததால்
தொடித்தோள் வையமே படிமிசை மறைந்ததே.
இன்று தென்கடலில் இலங்கை முதலால்
ஒன்று மில்லை.
மேற்கிடம் அரபிக் கடலும்
கிழக்கிடம் வங்கக் கடலும்
அன்றி வேறில்லை.
வடபெரும் பனிமலை மண்மேற் றோன்ற
அங்கிருந்து விந்தியம்ஆம் குன்ற மட்டும்
நிலப்பரப் பானது!
திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர்
அங்கும் குடிபுகுந் தழகு செய்தனர்.
ஆரியர் கால்நடை அமைய வந்தவர்,
பனிவரை யடுத்த நனிபெரு நிலத்தில்
தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும்
மொழியையும் தமிழால் ஒழுங்கு செய்தனர்.
வடபால் இருந்துதென் குடபால் வந்த
ஆரியர் சிற்சிலர்
குடமலைச் சாரல் அடைந்தார் ஆதலின்
குடமலை தன்னைக் குடமுனி என்றனர்.
ஆரியர் இங்குச் சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாடொறும் விளைத்தனர் சூழ்ச்சிகள்.
இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம்
முதற்பெருங் கழகம் ஆகிய
எவற்றிலும் தம்பெயர் ஏற்றித் தம்மைத்
திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக்
காட்ட முயன்றனர் அன்றோ!
திராவிடன் நான்! என் பெருமை
இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt230