பல்வேறு அரசியல் சித்தாந்தங்களினதும் போக்குகளினதும் மையப் பொருளாகவிருப்பது சுதந்திரம் என்பதாகும். ஆனால் நேரெதிரான அர்த்தங்கள் இந்த ஓரே வார்த்ததைக்குள் சுமத்தப்பட்டுள்ளது. சோசலிசம்; பசியிலும் வறுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என்கிறது. அனர்க்கிசம் தன்னுடைய வாழ்வை தானே ஆளவேண்டும் என்கிறது. தாராளவாதம் என்பது தனியொருவன் தன்னுடைய மகிழ்ச்சியை எட்ட முயற்சிப்பதற்கு குறுக்கீடுகள் தடைகளின்றிய சுதந்திரம் வேண்டும் என்கின்றது. 1776 ம் ஆண்டில் இந்த தாராளவாதத்தின் தந்தை எனப்படும் ஆடம் சிமித் இனால் வெளிவிடப்பட்ட «An Inquiry into the Nature and Causes of the Health of Nations» நூலின் மூலம் இக்கோட்பாடுகள் தோற்றம் பெற்றது. அன்று முதன்மையானதாக நடைமுறையிலிருந்த வர்த்தகக் கோட்பாடுகள், வணிகக் கொள்கையுடன் எதிர்நிலையெடுத்தது. அன்றைய வணிகக் கொள்கை ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய பொருளாதாரநலன்களை உறுதியாக வைத்திருக்க வேண்டுமாயின் எவ்வளவு கூடுமானவரை ஏற்றுமதியினை அதிகரிக்க முடியுமோ அதே வீதத்தில் இறக்குமதியையும் குறைந்தளவாக பேணவேண்டும் என்ற சிந்தனையே வணிகக் கொள்கையின் அத்திவாரம்.