வெள்ளாளியக் கல்வியைப் பாதுகாக்க முனைந்த தமிழினவாதம் - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 14
தமிழினவாத அரசியல் வரலாறே புரட்டலானது. 1948 களில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பானது வர்க்க ரீதியானதல்ல, இனரீதியானதே என்று தமிழினவாதம் மூலம் திரித்து உருவாக்கிய கட்சியே தமிழரசுகட்சி. தேர்தல் மூலம் இடதுசாரிகளின் ஆட்சியதிகாரம் இலங்கையில் ஏற்பட்டு விடும் என்ற சுரண்டும் வர்க்கத்தின் அச்சமே, மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறிக்க காரணமாகியது. இந்த வர்க்க அரசியலை மூடிமறைத்து வர்க்க அரசைப் பாதுகாக்கவே, தமிழ் சுரண்டும் வர்க்கம் தமிழினவாதத்தை முன்வைத்தது. இதன் மூலம் தமிழினவாதத்தை வடகிழக்கில் விதைத்தனர்.
இப்படி தமிழினவாதத்தை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களை எப்போதும் சிங்கள மக்களுக்கு எதிரானவராக வைத்திருப்பதையே கொள்கையாகவும், நடைமுறையாகவும் கொண்ட அரசியலையே முன்வைத்தனர். தேர்தல் அரசியலில் வெற்றி பெற, இனவாதம் தவிர்ந்த வேறு கொள்கை எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை.