தத்துவமும், கோட்பாடுகளுமின்றி எதையும் முத்திரை குத்தமுடியாது, வழிபடவும் முடியாது. தத்துவமும், கோட்பாடுகளுமின்றிய முன்முடிவுகள், அக விருப்புக்கும், சுயநலனுக்கும் உட்பட்டவையே. புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்று தத்துவமும், கோட்பாடுகளுமின்றி கூறும் போது, அவை மக்கள் விரோத அரசியலிலிருந்து கூறுகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தல்ல.
புலிகள் என்ற ஆயுதமேந்திய பாசிச சர்வாதிகார அதிகார அமைப்பு இன்று இல்லையென்ற போதும், அதன் கோட்பாடுகளே தமிழ் தேசியமாக தொடர்ந்து முன்தள்ளப்படுகின்றது. இப்படித் தமிழ் தேசியமாக உயர்த்தப்படுவது, தமிழ் தேசியமல்ல தமிழ் இனவாதமே. இந்த இனவாதமே, மதவாதமாகவும் திரிவுபடுகின்றது.
இந்த வரலாற்றுப் போக்கில் வளர்ச்சியுற்ற தமிழ் பாசிசத்தை மூடிமறைக்கின்றனர்;. இன்றைய சாதிய சமூக அமைப்பின் வெள்ளாளியச் சிந்தனையை எப்படி மூடிமறைக்கின்றனரோ, அதேபோல் புலிப் பாசிசத்தை மறுதளிக்கின்றனர். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. இதுவே ஒடுக்கும் இனவாத சாதிய அரசியலாக நீடிக்கின்றது.
இதை மூடிமறைக்க புலிகளை தேசிய இயக்கமாகக் காட்டுகின்ற பித்தலாட்டத்தை செய்கின்றனர். இதனை விரிவாக ஆராய்வது அவசியமாகின்றது.
புலிகள் தேசிய இயக்கமா?
தமிழ் இனவாதிகள் கூறுவது போல், புலிகள் தேசிய இயக்கமல்ல. புலிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத, அவர்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடாத எந்த இயக்கமும், தேசிய இயக்கமல்ல. இந்த வகையில் 1980களில் தோன்றிய தமிழ் தேசிய இயக்கங்களுக்கு இது பொருந்தும்.
தேசியம் என்பது சமூகப் – பொருளாதாரக் கோட்பாடுகளாலானது. தனிநபர் பயங்கரவாதத்தை நடத்துவதாலோ, இராணுவத் தாக்குதலை நடத்தி விடுவதாலோ அது தேசிய விடுதலை இயக்கமாகிவிடுவதில்லை. உரத்துக் குரல் கொடுத்துவிடுவதால் தேசியவாதியாகி விடுவதில்லை.