அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்
அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இனம், மதம், சாதி.. என்று மக்களைப் பிரித்து – அவர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தி ஒடுக்குவதே, அரசுகளாக இருக்கின்றது. வர்க்கங்களுக்கு இடையில் சமரசம் செய்து சொத்துடமை வர்க்கத்தை பாதுகாக்க உருவான அரசுகள், இன்று மக்களிடையே இன, மத, சாதி பிரிவினையை உருவாக்கி, சொத்துடமை வர்க்கத்தைப் பாதுகாக்க முனைகின்றது.
உழைப்பைச் சுரண்ட பண்ணை அடிமைகளாக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்களை, முதலாளித்துவ உற்பத்திக்கு தேவையான உழைப்பு சக்தியை திரட்டுவதற்கு ஏற்ற «சுதந்திர» மனிதனாக கறுப்பின மக்களை மாற்றியது. அதேநேரம் முதலாளித்துவ வர்க்கச் சுரண்டல்முறைக்கு எதிராக கறுப்பின வெள்ளையின மக்கள் அணிதிரண்டுவிடாத வண்ணம், நிறவொடுக்குமுறையாக மாற்றியது.
இந்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவினைவாத நிறவொடுக்குமுறையை எதிர்த்து, நிறபேதமற்ற மக்கள் போராட்டமாக எழுந்திருக்கின்றது. அமெரிக்க மக்களின் முன்மாதிரியான போராட்டத்தை போல், இன-மத ஒடுக்குமுறை மூலம் ஆளப்படும் இலங்கை மக்கள் கற்றுக் கொள்ளவும் - போராடவும் வேணடும். அமெரிக்க நடைமுறைகள் எமக்கு முன்மாதியாக இருக்கின்றது.
அமெரிக்காவில் கறுப்பினத்தவன் கொல்லப்பட்ட போது, வெள்ளையின மக்கள் அலைஅலையாக அணிதிரண்ட நிகழ்வுதான், அமெரிக்காவின் நிறவெறி அதிகார வர்க்கத்தை திணறடித்திருக்கின்றது. அதிகார வர்க்கத்தின ஒரு பகுதி மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்திருக்கின்றது. கையை குலுக்குகின்றது, கட்டி அணைக்கின்றது.