Language Selection

சமூகவியலாளர்கள்

அடி, கிளை, காய், இலை, நிழல்

ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை!
போயின மிலார்கள் வானில் !
பொலிந்தன பவளக் காய்கள் !
காயினை நிழலாற் காக்கும்
இலையெலாம், உள்ளங் கைகள் !
ஆயஊர் அடங்கும் நீழல்,
ஆலிடைக் காண லாகும் !

விழுதும் வேரும்

து஡லம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர் ! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம் !
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல் !

பச்சிலை, இளவிழுது

மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னிழைகள் !
வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.

அடிமரச் சார்பு

அடிமரப் பதிவி லெல்லாம்
அடங்கிடும் காட்டுப் பூனை!
இடையிடை ஏற்பட் டுள்ள
பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
படைப்பாம்பின் பெருமூச்சுக்கள் !
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல் !
தடதடப் பறவைக் கூட்டம் !
தரையெலாம் சருகின் மெத்தை !


வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து

தொலைவுள்ள கிளையில் வெளவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குலைப்பழம், கிளை, கொ டுக்கும் ;
கோதுகள் மழையாய்ச் சிந்தும் !
தலைக்கொழுப் புக்கு ரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும் ; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்தி ழுக்கும் !

கிளிகள்

கொத்தான பழக்கு லைக்குக்
குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
பொத்தென்று வீழும் ; அன்பிற்
பிணைந்திடும் ; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குக் கசப்பைச் செய்யும் !

சிட்டுக்கள்

வானத்துக் குமிழ்ப றந்து
வையத்தில் வீழ்வ தைப்போல்
தானம்பா டும்சிட் டுக்கள்
தழைகிளை மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒ ளிக்கும் ;
புழுக்களைத் தின்று தின்று
தேனிறை முல்லைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.

குரங்கின் அச்சம்

கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
"விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்"
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.

பறவை யூஞ்சல்

ஆலினைக் காற்று மோதும் ;
அசைவேனோ எனச்சி ரித்துக்
கோலத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும் !
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும் !

குயில் விருந்து

மழைமுகில் மின்னுக் கஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
"வழங்குக குடிசை" என்று
வாய்விட்டு வண்ணம் பாடக்
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
குளுரிலைக் கைய மர்த்திப்
பழந்தந்து களிப்பாக் கும்பின்
பசுந்துளிர் வழங்கும் ஆலே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

விண்மீன் நிறைந்த வான்

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்; இதைத் தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!

நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை

பாற்புகை முகிலைச் சீய்த்துப்
பளிச்சென்று "திங்கட் சேவல்"
நாற்றிக்கும் குரல் எடுத்து
நல்லொளி பாய்ச்சிப் பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடிவிண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப் "பூனை
இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.

பகல் வானில் முகிலோவியங்கள்

பகல்வானிற் கதிரின் வீச்சுப்
பரந்தது! முகிலி னங்கள்
வகைவகை ஓவி யங்கள்
வழங்கின; யானைக் கூட்டம் !
தகதக எனும்மா ணிக்க
அருவிகள் ! நீலச் சாரல் !
புகைக்கூட்டம் ! எரிம லைகள்!
பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !

இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்

கிழக்குப்பெண் விட்டெ றிந்த
கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
செழித்தமேற் றிசைவா னத்தின்
செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது ! விரிவிளக்கின்
கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !

காலை வானம்

கோழிகூ விற்று ! வையம்,
கொண்டதோர் இருளைத் தங்க
மேழியால் உழுதான் அந்த
விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
ஆழிசூழ் உலகின் காட்சி
அரும்பிற்று ! முனைய விழ்ந்து
வாழிய வைய மென்று
மலர்ந்தது காலை வானம் !

வானவில்

அதிர்ந்தது காற்று! நீளப்
பூங்கிளை அசைந்தா டிற்று!
முதிர்ந்திட்ட முகிலின் சேறு
மூடிற்றுச் ! சேற்றுக் குள்ளே
புதைந்திட்ட கதிரிற் பூத்த
புதுப்புது வண்ண மெல்லாம்
ததம்பிற்றே வான வில்லாய்ப் !
பாரடி அழகின் தன்மை !

மழை வான்

பகல்வான்மேல் கருமு கில்கள்
படையெடுத் தன ! வில்லோடு
துகளற்ற வாளும், வேலும்
சுழன்றன மின்னி மின்னி !
நகைத்தது கலகல வென்று
நல்ல கார்முகில்தான் ! வெற்றி
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
இறைத்தாள்பூ மழையை அள்ளி !

எரிகின்ற வானம்

தேன்செய்யும் மலரும் தீயும் !
செந்தீயும் நீறாய்ப் போகும் !
கான், செய், ஊர், மலை, கா, ஆறு
கடலெல்லாம் எரிவ தோடு
தான்செய்த தணலில் தானும்
எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத் தால்இவ்
வையத்தின் அடியும் வேகும் !

உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்

உச்சியில் இருந்த வெய்யோன்,
ஓரடி மேற்கில் வைத்தான்,
நொச்சியின் நிழல்கி ழக்கில்
சாய்ந்தது ! நுரையும், நீரும்,
பச்சையும், பழுப்பு மான
பலவண்ண முகில்கள் கூடிப்
பொய்ச்சான்று போல, யானை
புகழும்; பின் மலையைக் காட்டும்.

வான் தந்த பாடம்

எத்தனை பெரிய வானம் !
எண்ணிப்பார் உனையும் நீயே ;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
நீஅதில் சிற்றெ றும்பே
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித் தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

எழுந்த ஞாயிறு

ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்
தொருபொருள், வாராய்! நெஞ்சக்
களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்
கனற் பொரு ளே, ஆழ் நீரில்
வெளிப்பட எழுந்தாய்; ஓகோ
விண்ணெலாம் பொன்னை அள்ளித்
தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.

வையத்தின் உணர்ச்சி

எழுந்தன உயிரின் கூட்டம்!
இருள் இல்லை அயர்வும் இல்ல!
எழுந்தன ஒளியே, எங்கும்!
எங்கணும் உணர்ச்சி வெள்ளம்
பொழிந்தநின் கதிர் ஒவ் வொன்றும்
பொலிந் தேறி, மேற்றி சைமேல்
கொழுந்தோடக் கோடி வண்ணம்
கொழித்தது சுடர்க்கோ மானே!

காட்சி ஞாயிறு

பொங்கியும் பொலிந்தும் நீண்ட
புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி
திகு திகு என எரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே!
மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத்
தகளியிற் பெருவிளக்கே!

ஒளிசெய்யும் பரிதி

கடலிலே கோடி கோடிக்
கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
நெடுவானில் கோடி கோடி
நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ
இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளவா
அமைந்தனை! பரிதி வாழி!

கதிரும் இருளும்

என்னகாண் புதுமை! தங்க
இழையுடன் நூலை வைத்துப்
பின்னிய ஆடை, காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து
நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
உன் கதிர், இருட்ப லாவை
உரித் தொளிச் சுளையூட் டிற்றே!

கரைபோக்கி எழில் செய்தாய்

இலகிய பனியின் முத்தை
இளங்கதிர்க் கையால் உண்பாய்!
அலை அலையாய் உமிழ்வாய்
அழகின், ஒலியை யெல்லாம்!
இலை தொறும் ஈரம் காத்த
கரை போக்கி இயல்பு காப்பாய்!
மலையெல்லாம் சோலை யெல்லாம்
நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்;

எங்கும் அது

தாமரை அரும்பி லெல்லாம்
சரித்தனை இதழ்கள் தம்மை!
மாமரத் தளிர்அ சைவில்
மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்!
ஆமாமாம் சேவற் கொண்டை
அதிலும் உன் அழகே காண்பேன்!
நீமன்னன்; ஒளியின் செல்வன்;
நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன்.

பரிதியும் செயலும்

இறகினில் உயிரை வைத்தாய்
எழுந்தன புட்கள்! மாதர்
அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்!
ஆடவர் குன்றத் தோளில்
உறைகின்றாய்! கன்று காலி
உயிர் பெறச் செய்கின் றாய்நீ!
மறத் தமிழ் மக்கள் வாழ்வில்
இன்பத்தை வைத்தாய் நீயே.


பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை

வாழும் நின் ஒளிதான் இன்றேல்
வானிலே உடுக்கள் எல்லாம்
தாழங்காய், கடுக்காய் கள்போல்
தழைவின்றி அழகி ழக்கும்!
பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
பயிரிட்ட உழவன் நீ ; பைங்
கூழுக்கு வேரும் நீயே!
குளிருக்குப் போர்வை நீயே!

ஞாயிறு வாழி

விழிப் பார்வை தடுத்து வீழ
விரிகின்ற ஒளியே, சோர்வை
ஒளிக்கின்ற உணர்வே, வையத்
திருளினை ஒதுக்கித் தள்ளித்
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
சாய்ப் போயே, வெயிலில் ஆடித்
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
தனிச்சொத்தோ வாழி நன்றே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

நீர், இலை, நீர்த்துளிகள்

கண்ணாடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத்துக்கள்
இறைந்தது போல்கு ளத்துத்
தண்ணீரி லேப டர்ந்த
தாமரை இலையும், மேலே
தெண்ணீரின் துளியும் கண்டேன்
உவப்போடு வீடு சேர்ந்தேன்.

தாமரையின் சிற்றரும்பு

சிலநாட்கள் சென்ற பின்னர்க்
குளக்கரை சென்றேன்! பச்சை
இலத்தட்டில் சிந்தும் பால்போல்
எழில்நீரும், கரிய பாம்பின்
தலைகள்போல் நிமிர்ந் திருந்த
தாமரைச் சிற்ற ரும்பும்
இலகுதல் காணப் பெற்றேன்;
காட்சியின் இன்பம் பெற்றேன்.

முதிர் அரும்பு

மணிஇருள் அடர்ந்த வீட்டில்
மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்வி ளக்கின்
அழகிய பிழம்பு போலத்
தணிஇலைப் பரப்பி னிற்செந்
தாமரைச் செவ்வ ரும்பு
பிணிபோக்கி என்வி ழிக்குப்
படைத்தது பெருவி ருந்தே!

அவிழ் அரும்பு

விரிகின்ற பச்சைப் பட்டை
மேனிபோர்த் துக் கிடந்து
வரிக்கின்ற பெண்கள், வான
வீதியைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கின்ற இதழ்க்கூட் டத்தால்
மாணிக்கம் சிதறு தல்போல்
இருக்கும்அப் பச்சி லைமேல்
அரும்புகள் இதழ்வி ரிக்கும்!

மலர்களின் தோற்றம்

விண்போன்ற வெள்ளக் காடு,
மேலெலாம் ஒளிசெய் கின்ற
வெண்முத்தங் கள்கொழிக்கும்
பச்சிலைக் காடு, மேலே
மண்ணுளார் மகிழும் செந்தா
மரைமலர்க் காடு, நெஞ்சைக்
கண்ணுளே வைக்கச் சொல்லிக்
கவிதையைக் காணச் சொல்லும்.

ஒப்பு

வாய்போலச் சிலம லர்கள்!
'வா' என்றே அழைக்கும் கைபோல்
தூயவை சிலம லர்கள்!
தோய்ந்துநீ ராடி மேலே
பாயும்நன் முகம்போல் நெஞ்சைப்
பறிப்பன சிலம லர்கள்!
ஆயிரம் பெண்கள் நீரில்
ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!

செவ்விதழ்

ஓரிதழ் குழந்தை கன்னம்!
ஓரிதழ் விழியை ஒக்கும்!
ஓரிதழ் தன்ம ணாளன்
உருவினைக் கண்டு கண்டு
பூரிக்கும் உதடு! மற்றும்
ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!
வாரித் தரச்சி வந்த
உள்ளங்கை யாம் மற்றொன்று!

தேன்

மூடிய வாய்தி றந்து
உளமார முன்னா ளெல்லாம்
தேடிய தமிழு ணர்வைத்
தின்னவே பலர்க்கும் தந்தும்
வாடாத புலவர் போலே
அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
வாடாது தேன்கொ டுக்கும்
வண்டுகள் அதைக் குடிக்கும்!

வண்டுகள்

தேனுண்ண, வண்டு பாடும்!
தேனுண்டபின், ஓர் கூட்டம்
தானோர்பால் தாவும்! வேறோர்
தனிக்கூட்டம் களியாட்டத்தை
வானிடை நடத்தும்! ஒன்று
மலர் என்னும் கட்டி லுண்டு
நானுண்டென் றுறக்கம் கொள்ளும்
நறும்பொடி இறைக்கும் ஒன்று.

பாட்டு, மணம்

என்னைநான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழ லுற்றேன்
பொன்துகள், தென்றற் காற்றுப்,
புதுமணம், வண்டின் பாட்டுப்,
பன்னூறு செழுமா ணிக்கப்
பறவைபோல் கூட்டப் பூக்கள்
இன்றெலாம் பார்த்திட் டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்தே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

நீரற்ற ஆற்றுப்பாதை

இருபக்கம் மண்மே டிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன், அந்தப்
பாதையின் உள்இ டத்தில்
உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்த்த தைப்போல்
பெருமணல், அதன்மே லெல்லாம்
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!

வழிப் போக்கு

மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணகரை மேட்டின் அண்டை
அடர்மர நிழலில் நின்று
தணலேறும் தம்கால் ஆற்றிச்
சாலைகண் டூரைக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
பாதை "வான்வில்" போல் தோன்றும்.

வெள்ளம் வருமுன்

வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

வெள்ளத்தின் தோற்றம்

ஒலிஒன்று கேட்டேன். ஓஓ
புதுப்புனல்! பெரிய வெள்ளம்,
சலசல என்று பாய்ந்து
வரக்கண்டேன் தணல் நிறத்தில்
நிலவொத்த நிறம்க லந்து
நெடுவானின் சுடரும் வாங்கிப்
பொலிந்தது! கோடை யாட்சி
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.

வெள்ளப் பாய்ச்சல்

பெருஞ்சிங்கம் அரைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து
வரும்வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும் !
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்!
பருந்து, மேற் பறக்கும்! நீரில்,
பட்டாவைச் சுழற்றும் வாளை!

வெள்ளத்தின் வரவறிதல்

கரையோரப் புலத்தில் மேயும்
காலிகள் கடமை எண்ணும்!
தரையினிற் காதை ஊன்றிச்
சரிசரி புதுவெள் ளத்தின்
திரைமோதும் ஒலிதான் என்று
சிறுவர்கள் செங்கை காட்டிப்
பெரியோரைக் கூவு கின்றார்;
பேச்சொன்றே ஒலியோ நீளம்!

வெள்ளத்தின் ஒளி அழகு

இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள் !நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒருநாரை வெண்டா ழம்பூ!
உவப்புக்கோ உவமை இல்லை.

வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்வாழ்த்து

ஒரேவகை ஆடை பூண்ட
பெரும்படை ஒழுங்காய் நின்று
சரேலெனப் பகைமேற் பாயும்
தன்மைபோல் ஆற்று வெள்ளம்,
இராவெல்லாம் நடத்தல் கண்ட
இருகரை மரங்கள், தோல்வி
வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!

உழவர் முயற்சி

ஆற்றுவெள் ளத்தைக் காணச்
சிற்று஡ரார் அங்கு வந்தார்!
போற்றினார் புதுவெள்ளத்தைப்!
புகன்றனர் வாழ்த்து ரைகள்!
காற்றாகப் பறந்து சென்று
கழனிகள் மடைதி றந்து
மாற்றினார் வாய்க்கால்! மற்றும்
வடிகாலை மறித்தார் நன்றே!

ஆற்று நடை

நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார்,
நு஡ற்றுக்கு நு஡று பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை து஡க்கி
உழவுப்பண் பாட லானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய்நடக் கின்றாள் வையம்
தழைகவே தழைக என்றே!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE