சீ ன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை உருவாக்குகின்றன. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்கும் இங்குமாக ஓடவைக்கின்றன. இன்றைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறி விட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையின் விலைகள் பலவற்றை, சீன உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. சீன உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் ஏற்படுத்துகின்றன. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள், அதிக இலாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தியும், உற்பத்திகளில் அராஜகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது.