07252021ஞா
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல்

(Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.


விற்றமின் மாத்திரைகள் தேவைதானா?

விற்றமின் மாத்திரைகள் தேவைதானா?

யாரைப்பார்த்தாலும் விற்றமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும்"நல்ல விற்றமின் மாத்திரைகள் எழுதித் தாருங்கோ' என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபா வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?

இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோஸ்தர் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது.

ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விற்றமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள்.

இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?

இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி இதழ் கூறுகிறது.

ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய மல்ரி விற்றமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது. 

உதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் மல்ரி விற்றமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.

அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?

எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.

காலத்திற்கு முன்பே நோயுற்று "இறைவனடி' சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.

பெரும்பாலான மல்ரி விற்றமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.

எனவே அடுத்த தடவை நீங்கள் விற்றமின் மல்ரி விற்றமின் போன்ற மருந்துகளை வாங்க முன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள் பரீசிலனை செய்யுங்கள்.

மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விடயம் அதை நிறுத்த வேண்டாம்.
-டாக்டர் எம்.கே. முருகானந்தன்-
http://hainallama.blogspot.com/2009/04/blog-post.html

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

கல்சியம் மாத்திரைகள் எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்? என மேலதிக கல்சியம் எடுப்பது பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் எழுதியிருந்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியானபோது பலர் மேலும் ஒரு சில சந்தேகங்களை எழுப்பினர். அதில் முக்கியமானது ஆண்களுக்கும் கல்சியம் தேவையா என்பதாகும்.ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் ஏற்படுவது உண்மையே. வயதான காலத்தில் இடுப்பு எலும்பு முறிவடைவது (Hip Fracture) ஒரு முக்கிய பிரச்சினையாகும். இடுப்பு எலும்பு முறிவுகளை எடுத்தால் அவற்றில் கால் பங்கு (1/4) ஆண்களிலேயே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

அதற்கும் மேலாக முப்பது சதவிகிதமான (30%) வயதான ஆண்களில் வெளிப்படையாகத் தெரியாத மென்வெடிப்புகள் ( Fragility Fractures) ஏற்படுவதாகவும் தெரிகிறது. எனவே, ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் என்பது ஒரு பிரச்சினையே என்பது தெளிவாகிறது.


இவ்வாறாக இருந்தபோதும் ஒஸ்டியோபொரோசிஸ் சம்பந்தமான ஆய்வுகள் ஆண்களில் அதிகம் செய்யப்பட்டதில்லை. பெண்களிலேயே பெரும்பாலும் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த "பாரபட்சத்தை' நிவர்த்திக்குமுகமாக நியூஸிலாந்தில் ஆண்களில் ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. 24 மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வின்போது மேலதிக கல்சியம் கொடுக்கப்பட்ட ஆண்களின் எலும்புத் திணிவு குறியஈடு (BMI) அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டது. எனவே, ஆண்களுக்கும் மேலதிக கல்சியம் உதவும் என்பது தெளிவாகிறது.

எவ்வளவு கல்சியம் தேவை. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தினமும் 1200 மி.கி. கல்சியம் தேவைப்படுகிறது. அத்துடன், தினமும் 400 முதல் 600 மி.கி. வரையான விற்றமின் "டி'யும் தேவைப்படுகிறது.

அதில் ஓரளவு கல்சியத்தை பால், மற்றும் தயிர், யோக்கட், சீஸ் போன்ற பாற் பொருட்களிலிருந்தும் தினமும் பெற முடியும். ஒரு கப் பால் அல்லது 8 அவுன்ஸ் கொழுப்பு நீக்கிய யோக்கட் உண்பதன் மூலம் எமது தினசரி கல்சியத் தேவையின் அரைவாசி அளவைப் பெற முடியும்.

மிகுதியை கல்சியம் மாத்திரைகளாகக் கொடுக்கலாம். எனவே, வயதான ஆண்களுக்கு தினமும் 600 மி.கி. போதுமானதா அல்லது 600 மி.கி. இரண்டு தடவைகள் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி அறிய மேலும் ஆய்வுகள் உதவக்கூடும்.

ஆயினும், எலும்பின் உறுதிக்கு இவை மட்டும் போதாது. போதிய உடற்பயிற்சி செய்தால் தான் எலும்புகளும் அதனைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் பெறும். எனவே, ஓடுவது, வேகமான நடை, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளும் அவசியம். இதன்மூலம் வயதான ஆண்களும் தமது எலும்புகளின் உறுதியைப் பேணி விழுகைகளையும் எலும்பு முறிவுகளையும் தடுக்க முடியும்.

-டொக்டர் எம்.கே. முருகானந்தன்-
தினக்குரல் 29.12.2008

பேன் தொல்லைக்கு நல்ல சிகிச்சை

பேன் தொல்லைக்கு நல்ல சிகிச்சை

'பறபற'வென தலையைச் சொறிந்து கொண்டு வந்தாள் அந்தப் 'குட்டித் தேவதை'. வயது பத்து இருக்கும்.
கூட்டிக் கொண்டு வந்த தாயின் முகத்தில் கோபமும் எரிச்சலும் பொரிந்தன.
'இவளின்ரை தலையிலை பேன் மண்டிப் போய்க் கிடக்கு. மருந்து, ஷாம்பு என்று எதுக்கும் ஒழியுதில்லை' எனச் சினந்தாள்.
உண்மைதான் பள்ளி செல்லும் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சனைதான் பேன் தொல்லை. அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 6 முதல் 12 மில்லியன் குழந்தைகள் பேன் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம்.
இதனை ஒரு நோய் என்று கூற முடியாவிட்டாலும் கூட பிள்ளைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. பெற்றோர்களும் ஆயாசத்திற்கு ஆளாகிறார்கள். மருந்துகளுக்குப் பேன்கள் பழக்கப்பட்டு விடுவதாலும், பாடசாலைச் சூழலில் மீண்டும் மீண்டும் தொற்றுவதாலும் அது என்றுமே தீராத பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
லின்டேன், மலத்தியோன் போன்ற வழமையான மருந்துகளை அந்த அம்மாவும் உபயோகித்துக் களைத்துவிட்டாள். இவை இரசாயன மருந்துகள் என்பதால் பக்க விளைவுகள் ஏற்படுமே என்ற எண்ணம் அவளை ஒத்த பெற்றோர்களை மேலும் பயமுறுத்துகிறது.
முன்பு நீங்கள் எல்லோரும் பாவித்திருக்கக் கூடிய பேன் சீப்பு பக்கவிளைவு அற்றது மாத்திரமல்ல பேன்களையும் ஈர்களையும் ஒழிப்பதில் வல்லதும் கூட. ஆயினும் ஒவ்வொரு தடவையும் சில மணி நேரமாகப் பல நாட்களுக்குத் தொடர்ந்து நேரம் இதற்கென ஒதுக்க வேண்டும். இன்றைய அவசர சூழலில் அவ்வாறு மினக் கூடியளவு நேரமோ பொறுமையோ பெற்றோர்களுக்குக் கிடையாது.
இப்பொழுது ஒரு நல்ல செய்தி! சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதன் மூலம் பேன்களையும், ஈர்களையும் கொல்ல முடியுமாம். இது ஒரு மருத்துவ ஆய்வின் முடிவு. சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதற்கு முடி உலர்த்திகளைப் (Hair dryer) பயன்படுத்தினார்கள்.
இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட (Louse buster) பேன் ஒழிப்பு உலர்த்தி, மற்றும் வழமையாக உபயோகப்படுத்தும் கைகளில் பிடிக்கும் (hand held blow dryer) உலர்த்தி, பொனட் (Bonnet) வகை உலர்த்தி, பொது இடங்களில் சுவரில் நிறுவப்படும் உலர்த்தி ஆகியவற்றை ஆய்வின் போது பயன்படுத்தினார்கள். உட்டா பல்களைக் கழகத்தின் (University of Utah) உயிரியல் துறையில் செய்யப்பட்ட ஆய்வு இது.
பேன் ஒழிப்புச் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிக்கப்பட்டது.
ஒவ்வொருவரின் தலை முடியையும் பத்து முதல் இருபது பகுதிகளாளகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்த முப்பது நிமிடங்களைச் சமமாகப் பிரித்து சிகிச்சை அளித்தார்கள். எந்த வித உலர்த்தியையும் பயன்படுத்திய போதும் 90 முதல் 98 சதவிகிதமான ஈர்கள் செத்தொழிந்தன. அதாவது ஈர்கள் ஒரு முறை சிகிச்சையிலேயே கிட்டத்தட்ட முற்றாக ஒழிகின்றன. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதுவரை உபயோகிக்கப்பட்டு வந்த எந்த மருந்துமே ஈர்களை ஒழிப்பதில் இத்தகைய சிறப்பான பலனைக் கொடுத்ததில்லை.
பேன்களைப் பொறுத்த வரையில் லவுஸ் பஸ்டர் உலர்த்தி 90 சதவிகிதமானவற்றைக் கொன்றது. ஏனைய உலர்த்திகள் மாறுபட்ட அளவுகளில் குறைவாகவே பேன்களைக் ஒழித்தன.
பொனட் (Bonnet) வகை உலர்த்தி 10 சதவிகிதமான பேன்களை மட்டுமே ஒழித்தன. கைகளில் பிடிக்கும் (hand held blow dryer) உலர்த்திகள் 22 முதல் 30 சதவிகிதமான பேன்களை அழித்தன. சுவரில் நிறுவப்படும் உலர்த்திகள் அதிலிருந்து வரும் அதிகளவு காற்றுக் காரணமாக 62 சதவிகிதமான பேன்களை ஒழித்தன. லவுஸ் பஸ்டரிலும் இரண்டு வகைகள் உபயோகிக்கப்பட்டன.
தலைமுடியைப் பிரிப்பதற்கான அகண்ட பல்லுள்ள சீப்புப் போன்ற பகுதியை உள்ளடக்கிய சிறப்பு லவுஸ் பஸ்டர் 80 சதவிகிதமான பேன்களையும், அது இல்லாத லவுஸ் பஸ்டர் 76 சதவிகிதமான பேன்களையும் ஒழித்தன. லவுஸ் பஸ்டரில் உள்ள பல்லுள்ள சீப்புப் போன்ற பகுதி தலைமுடியின் அடிப்பாகம் வரை காற்றுப் போக வசதியளித்து கூடியளவு பலனைக் கொடுக்கிறது.
மேற் கூறிய விதமாக 80 சதவிகிதமான பேன்கள் ஒழிந்த போது மிகுதிப் பேன்கள் மலடாவதாலோ அன்றி அழுத்தத்தாலோ இனப்பெருக்கம் செய்ய முடியாமல் முற்றாக அழிந்தன. ஆய்வின் போது ஒரு தடவை சிகிச்சை அளித்தபோதே பேன்கள் அழிந்தன. ஆயினும் பூச்சு மருந்துகளையும், ஷப்புகளையும் சிகிச்சை முறையாகப பயன்படுத்தும் போது 1முதல் 2 வார இடைவெளியில் மீண்டும் ஒரு முறை திரும்பவும் செய்ய வேண்டும்.
இரசாயன மருந்துகள் இல்லாததும், ஈர்கள் பெருமளவு ஒழிவதும், ஒரு முறை மட்டுமே சிகிச்சை அளித்தாலும் குணமடைவதும், மருந்துகளுக்குப் பேன்கள் பழக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது விடுவது போலல்லாது எப்பொழும் பலனளிப்பதும் இச்சிகிச்சை முறையின் சிறப்புகள் எனலாம். பக்க விளைவுகள் எதுவும் இல்லாத சிகிச்சை முறை என்பதால் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.
லவுஸ் பஸ்டர் உலர்த்தி கட்டுரை எழுதிய நேரத்தில் விற்பனைக்கு வரவில்லை. இப்பாழுது வந்துவிட்டதோ தெரியவில்லை. வரும்போது அதன் விலை உத்தேசமாக 100 அமெரிக்க டொலருக்கு அதிகமாக இருக்கும். எனவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு வீட்டுப் பாவனைக்கு என வாங்கக் கட்டுப்படியாகாது. எனவே வைத்தியசாலை, பாடசாலை போன்றவற்றில் நிறுவி பொது மக்கள் பாவனைக்கு விட வேண்டியிருக்கும். எனவே இப்போதைக்கு நீங்கள் வழமையான முடி உலர்த்தியைப் பயன்படுத்தலாம். 90 சதவிகித ஈர்கள் ஒழியும் தானே.
ஆயினும் இந்த ஆய்வைச் செய்த வைத்தியர் வழமையான முடி உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். அவர் சொல்லும் காரணமானது 'தலையிலுள்ள பேன்களும் ஈர்களும் முடி உலர்த்தியின் சூட்டினால் இறப்பதில்லை, மாறாக அது வீசும் காற்றினால் உலர்வதினாலேயே இறக்கின்றன. லவுஸ் பஸ்டர் வெளியேற்றும் காற்று வழமையான முடி உலர்த்திகள் வெளியேற்றும் காற்றை விடக் குளிர்மையானது, அத்துடன் இரு மடங்கு காற்றையும் வெளியேற்றுகிறது'. எனவே லவுஸ் பஸ்டர் பாதுகாப்பானதும் கூடிய பயன் அளிக்கக் கூடியதும் எனப் புரிகிறது.
'வழமையான முடி உலர்த்திகளைப் பயன்படுத்தி கூடிய சூட்டைப் பெறறோர் கொடுத்தால் குழந்தைகளின் முடியும், தலையின் சருமமும் எரிந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது' எனவும் எச்சரிக்கிறார்.. எனவே அவதானம் தேவை.
'இது என்ன புதினமே? நாங்கள் முந்தி முழுகினால் சாம்பிராணிப் புகை போடுறனாங்கள் தானே. அதைப் போலதானே உங்கடை புதுப் கண்டு பிடிப்பும்' என்றார் கூட வந்த அம்மம்மா.
இருக்கலாம்.
ஆயினும் சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதையே மேற் கூறிய ஆய்வு கடைப்பிடித்தது. சாம்பிராணிப் புகையில் சுடுகாற்று இருக்கிறது, புகையும் மணமும் இருக்கிறன. ஆனால் சாம்பிராணிப் புகைக் காற்றில் அழுத்தம் இல்லையே. எனவே இன்னுமொரு ஆய்வைச் செய்தால்தான் அம்மம்மாவின் கூற்று சரியா பிழையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.
பேன் பற்றி சில தகவல்கள்
எள்ளின் அளவே உள்ள பேன் ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேனகளும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காதோரங்களிலும் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடும்.
தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, பிரஸ், தொப்பி, ஹெட்போன், தலையணை போன்றவற்றலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்.
எம்.கே.முருகானந்தன்.

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

முகத்தில் வாட்டம்!

சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது.

எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப் பூச்சிகள் சுருண்டு திரண்டு கிடப்பது போல கருநீலத்தில் வீக்கங்கள் படர்ந்திருந்தன.

பார்க்க அருவருப்பாக இருந்தது. விளையாடப் போன நான் போன போக்கிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டேன்.

அப்பொழுது அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த சில காலத்தின் பின் அவரது கால்களில் வீக்கம் காணமல் மறைந்து விட்டிருந்தது.

இன்னொருவர் பற்றிய நினைவும் வருகிறது. நல்ல உயரமான, வாட்டசாட்டமான நடுத்தர வயது மனிதர். அவரது முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களிலும் சிறு பாம்புகள் சுருண்டு கிடந்து நெளிவது போல நாளங்கள் வீங்கிக் கிடக்கும்.


கணுக்காலடியில் பெரிய புண். நீண்ட நாட்களாக மாறாது கிடந்தது.

அது என்ன என வருத்தம் அவரது மகனிடம் கேட்டேன். ஏதோ நரம்பு வீக்கமாம். அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை.

இப்பொழுது அவர் காலமாகிவிட்டார். ஆனால் பிற்பாடு அவரது மகனுக்கும் அதே வருத்தம் வந்தபோது நானே வைத்திய ஆலோசனை வழங்கியுள்ளேன்.

இன்று சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அவர்களை மீள நினைந்து பார்க்கும்போது அவை நாளப் புடைப்புக்கள் அதாவது Varicose Veins என்பது தெரிகிறது. வரிக்கோஸ் வெயின்ஸ் என்பது திரண்டு சுருண்ட நாள வீக்கங்கள் ஆகும்.

நாளங்கள் எனப்படுபவை இரத்தக் குழாய்கள். இருதயத்திலிருந்து ஒட்சி ஏற்றப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட) குருதியை உடல் உறுப்புகளுக்கு எடுத்து வருபவை நாடிகள் (Artery) எனப்படும். உடல் உறுப்புகளால் உபயோகிக்கப்பட்ட குருதியை மீண்டும் இருதயத்திற்கு எடுத்துச் செல்பவை நாளங்கள் (Veins) எனப்படும்.

இது எத்தகைய நோய்

இவை பொதுவாக முழங்காலுக்குக் கீழே பிற்புறமாக கெண்டைப் பகுதியில் ஏற்படும். தொடையின் உட்புறமாகவும் தோன்றலாம். தோலின் கீழாக தடித்து சுருண்டு வீங்கி, நீல நிறத்தில் அல்லது கரு நீல நிறத்தில் தோன்றும் இவை நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக இயங்காததாலேயே ஏற்படுகின்றன. நாளங்களில் உள்ள வால்வுகள் ஒரு வழிப் பாதை போலச் செயற்படுகின்றன.


அதாவது கீழிருந்து மேலாக இருதயத்தை நோக்கி இரத்தத்தைப் பாய அனுமதிக்கின்றன. ஆனால் மேலிருந்து கீழ் வர அனுமதிக்கமாட்டா. ஆயினும் இந்த வால்வுகள் சரியானபடி இயங்க முடியாதபோது இரத்தம் வழமைபோலப் பாய முடியாமல், நாளங்களில் தேங்கி வீக்கமடையும். இப்படித்தான் நாளப் புடைப்புக்கள் தோன்றுகின்றன.

சாதாரணமாக நாளப் புடைப்புக்கள் எந்தவித துன்பத்தையும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோன்றும் என்ற உணர்வுதான் பெரும்பாலும் சிகிச்சையை நாட வைக்கும்.

ஆயினும் சற்று அதிகமானால் கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சற்று வலிக்கவும் செய்யலாம்.

கெண்டைக் காலில் தசைப் பிடிப்பும் ஏற்படுவதுண்டு.

நீண்ட காலம் தொடர்ந்தால் கால்களின் கீழ்ப் பகுதிகளில் வீக்கமடைந்த நாளங்களைச் சுற்றி தோல் கருமையடைந்து அரிப்பும் ஏற்படக் கூடும்.

கால் வீக்கமும் ஏற்படக் கூடும்.

மாறாத புண்களும் தோன்றலாம். இந்த நாளப் புடைப்புகளில் காயப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பித்தால் உங்களால் நிறுத்துவது கஸ்டம்.


நாளப் புடைப்பு நோய் யாருக்கு வரும்?

நாளப் புடைப்பு நோய் யாருக்கு வேண்டுமானால் வரலாம்.

ஆனால் பொதுவாக 30 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களையே பெரிதும் பாதிப்பதைக் காண்கிறோம்.

பரம்பரையில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஒருவருக்கு இந் நோய் இருக்குமாயின் அவர்களது நெருங்கிய உறவினர்களில் இருப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்கு அதிகமாகும். கட்டுரையின் ஆரம்பத்தில் தகப்பனுக்கும் மகனுக்கும் இந்நோய் வந்ததை ஞாபகப்படுததலாம்.

அதே போல ஆண்களை விட பெண்களுக்கு வருவதற்கான சாத்தியமும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

அதிலும் முக்கியமாக கர்ப்பணியாக இருக்கும்போது அதிகம் தோன்றுவதுண்டு. இதற்குக் காரணம் வயிற்றில் வளரும் கருவானது தாயின் தொடைகளினூடாக வயிற்றுக்கள் வரும் நாளங்களை அழுத்துவதால் இரத்த ஓட்டம் பாதிப்புற்று நாளப் புடைப்பை ஏற்படுத்துவதேயாகும்.

கர்ப்ப காலத்திலும், பெண் பிள்ளைகள் வயசிற்கு வரும் காலங்களிலும், மாதவிடாய் முற்றாக நிற்கும் காலங்களிலும் பெண்களது உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் பின்பு அவர்களுக்கு நாளப் புடைப்பு உண்டாவதற்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

நீங்கள் அதீத எடையுடையவராக இருந்தால் உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பானது நாளங்களை அழுத்தி நாளப் புடைப்பு நோயை ஏற்படுத்தலாம். கொலஸ்டரோல், பிரஸர், நீரிழிவு போன்ற நோய்களுக்கும் அதீத எடைக்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே அறிவீர்கள். எனவே உடற் பயிற்சிகளாலும், நல்ல உணவுப் பழக்கங்களாலும் எடையை சரியான அளவில் பேணுங்கள்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதும், உட்கார்ந்திருப்பதும் கூட நாளப் புடைப்பை ஏற்படுத்தலாம்.

முக்கியமாக காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு, அல்லது மடித்துக் கொண்டு உட்காரும்போது நாளங்கள் கடுமையாக உழைத்தே இரத்தத்தை மேலே செலுத்த வேண்டியிருக்கும். இதனால் அவை நாளடைவில் பலவீனப்பட்டு நாளப் புடைப்பு உண்டாகலாம்.

வைத்தியர்கள் கண்ணால் பார்தவுடனேயே இது என்ன நோய் என்பது தெரிந்துவிடும் என்பதால் பெரும்பாலும் மேலதிக பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. ஆயினும் சில தருணங்களில் டொப்ளர் ஸ்கான் (Doppler UltraSound)போன்ற பரிசோதனைகள் செய்ய நேரலாம்.


நீங்கள் செய்யக் கூடியது என்ன?

இதனைத் தணிக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?

நீண்ட நேரம் ஒரேயடியாக நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நிற்க நேர்ந்தால் சற்று உட்கார்ந்தோ அல்லது கால்களைச் சற்று மடித்து நீட்டிப் பயிற்சி செய்து நாள இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துங்கள்.

நாளப் புடைப்பு உள்ளவர்கள் கால்களைத் கீழே தொங்க விட்டபடி உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. சிறிய ஸ்டூல் போன்ற ஏதாவது ஒன்றில் கால்களை உயர்த்தி நீட்டி வைத்திருங்கள்.

தூங்கும்போது ஒரு தலையணை மேல் கால்களை உயர்த்தி வைத்தபடி தூங்குங்கள். உங்கள் இருதயம் இருக்கும் நிலையை விட உயரமாக உங்கள் கால்கள் இருந்தால் காலிலுள்ள இரத்தம் சுலபமாக மேலேறும். அதனால் வீக்கமும் வேதனையும் குறையும்.

சுலபமான உடற் பயிற்சிகள் உங்கள் தசைகளின் இழுவைச் சக்தியை அதிகரிக்கும். இது நாளங்களின் ஊடான இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி நாளப் புடைப்பைக் குறைக்க உதவும்.அத்துடன் உங்கள் உடலிலுள்ள மேலதிக எடையைக் குறையுங்கள். நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துவதுடன், நாளங்களின் மேல் அதீத எடையினால் உண்டாகும் அழுத்தத்தையும் குறைக்கும்.

நாளப் புடைப்பினால் ஏற்படும் வேதனையையும் வீக்கத்தையும் குறைக்க அவற்றைச் சுற்றி பண்டேஜ் அணிவது உதவியாக இருக்கும். இதற்கென தயாரிக்கப்பட்ட விசேடமான பண்டேஜ்கள் மருந்தகங்களில் கிடைக்கும். முழங்காலுக்கு கீழ் மட்டும் அணியக் கூடியதும், தொடைவரை முழக் கால்களையும் மூடக் கூடியதாக அணியக் கூடியதும் போன்று பல வகைகளில் கிடைக்கும்.

வைத்தியரின் ஆலோசனையுடன் உங்களுக்கு ஏற்றதை உபயோகிக்க வேண்டும்.

இவற்றை பொதுவாக காலையில் படுக்கையிலிருந்து எழுந்து நடமாட முன்னரே அணிய வேண்டும். நடமாடும் நேரம் முழவதும் அணிந்திருந்து இரவு படுக்கைக்குக் போகும் போதே கழற்ற வேண்டும்.

இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வயிறு, அரைப்பகுதி, தொடை ஆகியவற்றைச் சுற்றி இறுக்கமான ஆடைகளை அணிந்தால் நாளப்புடைப்பு மோசமாகக் கூடும்.

சிகிச்சை முறைகள்

பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.

நோயின் தன்மைக்கும், நோயாளியின் தேவைகளுக்கும் ஏற்ப இவை மாறுபடும்.

மிக இலகுவானது ஊசி மூலம் நோயுற்ற நாளங்களை மூடச் செய்வதாகும். நோயாளி நிற்க வைத்து நாளத்தினுள் ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். மருந்து அவ்விடத்தில் உள்ள நோயுற்ற நாளங்களை கட்டிபடச் செய்து அடைத்து மூடும்.

மூடச் செய்வது என்று சொன்னவுடன் பயந்து விடாதீர்கள். புடைத்த நாளங்களை மூடச் செய்வதால் இரத்தச் சுற்றோற்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. அருகில் உள்ள சிறு நாளங்கள் ஊடாக அது திசை திருப்பப்பட்டு இடையூறின்றித் தொடரும். ஊசி போட்ட பின் இறுக்கமான பன்டேஸ் போட்டுவிடுவார்கள்.

இச் சிகிச்சை பொதுவாக சிறிய நாளப் புடைப்புகளுக்கும், மிகச் சிறிய சிலந்திவகைப் அடைப்புகளுக்கும் (Spider Veins) பொருந்தும்.

பல வகையான சத்திர சிகிச்சைகள் நாளப்புடைப்பு நோயைக் குணப்படுத்தச் செய்யப்படுகின்றன.

லேசர் (Laser) சிகிச்சையானது சிறிய நாளப்புடைப்புகளை ஒளிச் சக்தி மூலம் கரையச் செய்யும்.

அகநோக்கிக் குழாய் (Endoscopy) மூலம் செய்யப்படும் சத்திர சிகிச்சையின் போது சிறிய துவாரம் ஊடாக செலுத்தப்படும் குழாயுடன் இணைந்த கமரா மூலம் நோயுற்ற வால்வுகளை நேரடியாகப் பார்த்து, அதனுடன் இணைந்த நுண்ணிய உபகரணம் மூலம் நோயுற்ற வால்வுகளை மூடச் செய்வதாகும்.

வேறும் பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன.


சிகிச்சையின் பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீரும். நாளாந்த நடவடிக்கைகளில் நீங்கள் வழமை போல ஈடுபடலாம். ஆயினும் தொடர்ந்தும் சில நாட்களுக்கு பன்டேஸ் அணிய நேரலாம். கால் வீக்கம், தசைப்பிடிப்பு, தோல் அரிப்பு, தோல் கருமை படர்தல் போன்ற இறிகுறிகள் ஏற்கனவே இருந்திருந்தால் அவை குணமாக சற்றுக் கூடிய காலம் எடுக்கும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
http://hainallama.blogspot.com/2008/12/varicose-veins.html&type=P&itemid=