புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்
23.07.2011 கொழும்பு
1. இலங்கை ஒரு நவ கொலனித்துவ நாடாகும். அதற்குரிய பொருளாதார அரசியல் சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பாதுகாக்கும் வகையில் நிலவுடைமை முதலாளித்துவக் கருத்தியல், சிந்தனை, நடைமுறைகளைக் கொண்ட ஆளும் வர்க்கம் பலமுடையதாகக் காணப்படுகிறது. அதுவே இலங்கையின் தரகு- பெரு முதலாளித்துவமாக ஆட்சியதிகாரத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக வர்க்கம், இனம், சாதி, பெண்கள் ஆகிய நான்கு தளங்களில் முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நீடித்து நிலைத்தும் வருகின்றன. இவற்றில் வர்க்க முரண்பாடு அடிப்படையானதாகவும் இன முரண்பாடு பிரதானமானதாகவும் இருந்து வருகின்றன. அடிப்படை முரண்பாடு காரணமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள், பெண்கள், அரசாங்க- தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 90 சதவீதத்தினரான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்போர் சுரண்டப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை தரகு- பெரு முதலாளித்துவ சக்திகள், சொத்து சுகம் உடையோர், அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள், இவர்களுடன் கைகோர்த்து நிற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் சுரண்டுவோராக இருந்து வருகின்றனர். அவர்களது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாம்.