11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

இராணுவ மூல உபாயத்தில் ஐக்கியமும், அரசியலில் முரண்பாடும்.

தமிழீழ புதிய சனநாயக கட்சியில் தேசபக்தன் இதழ் 17 இல் பல மார்க்சிய விலகலைக் கொண்டிருந்த போதும், முக்கியமானதும் அடிப்படையானவைகளை ஒட்டிய கோட்பாட்டு விவாதத்தை இக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கின்றது.


மூலதனப் பைத்தியம்

எனது மூன்று வயது மகன் "எனது பைத்தியம் எங்கே?" என தனது பொம்மை மாட்டைக் குறித்து கேட்க்குமளவுக்கு "மாட்டுப் பைத்தியம்" நோய் ஐரோப்பாவையும், உலகையும் உலுக்கி எடுக்கின்றது. உண்மையில் "மாட்டுப் பைத்தியம்;" என்பது உண்மைக்கு மாறானது, மாறாக மூலதனத்துக்கு பைத்தியம் என்பதே சரியான அரசியல் உள்ளடக்கமாகும்.

"முகம்" இழந்தவரின் ஆணாதிக்க பின்னணி இசையில் முகிழ்ந்த "சுதந்திர" பெண் விடுதலைக் கோசம்

28.1.2001 பாரிசில் நடந்த வேலணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க நிகழ்வில், பெண் விடுதலை என்ற பெயரில் ஒரிருவர் சுதந்திர கோசத்தை, புலம் பெயர் இலக்கியவாதிகள் அனைவரையும் எதிர்த்து எழுப்பினர். ஒரிருவர் அண்மையில் நடத்திய புலம் பெயர் இலக்கியச் சந்திப்பை மான வெட்கமின்றி அண்மையில் அலங்கரிக்கவும் தவறாதவர்கள். சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு முரண்பாடு. புலிகளின் பினாமியாக உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்ற நிலையிலும் இயங்கும், 99 சதவீதம் சினிமா திரைப்பட ஆணாதிக்க பாடல் குப்பைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக் காட்சிகளில், படுபிற்போக்கான அறிவிப்பளார்களாக பவனி வருபவர்கள். அங்கு தேவாரம் முதல் திருக்குறள் வரை குழந்தைகள் மீது திணித்து, ஆணாதிக்கத்தை மதத்தினுடாகவும் பண்பாட்டின் ஊடாகவும் ஊட்டி வளர்ப்பவர்கள். புலம்பெயர் இலக்கிய வாதிகளின் நேர்மையைப் பற்றி வாய் கிழிய கோசமிட்டவர்கள், பார்ப்பனிய ஆணாதிக்க அடிமை திருமணச் சடங்குகளின் சின்னமான தாலியை கழுத்திலும், ஆணின் அடிமையை பறை சாற்றும் குங்குமத்தை நெற்றியிலுமாக மடிசார் முறையில் வீற்றிருந்து, ஆணாதிக்கம் பற்றி தமது கோசத்தை, நேர்மையினமாக நடைமுறைக்கு எதிராகவே இரவல் கோசத்தில் எழுப்பினர். புலம்பெயர் இலக்கிய சீரழிவையும் வக்கிரத்தையும் குறித்து விமர்சிப்பதற்கு, அதாவது இங்கு பொதுவில் அல்ல, குறைந்தபட்சம் அதற்கு சமூக நடைமுறையில் ஆணாதிக்க ஒழிப்பில் நேர்மை தேவை. குறிப்பான பாதிப்பு இருப்பின் குறித்த விமர்சனமும், பொதுவான விமர்சனம் எனின் உயர்ந்த சமூக விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் நின்று செய்வதுமே நேர்மையாகும். இந்து மதத்தை ஒழிக்காமல் பெண்ணியம் என்பது வெற்றுப் பேச்சாகும். இந்து மதமே ஆணாதிக்க வக்கிரமாகவும் வன்முறையாகவும் இருக்கின்ற போது, இந்துமதச் சடங்குகளை கோயில் படியேறி செய்வதில் தொண்டராக இருந்தபடி, ஆணாதிக்க ஒழிப்பு பற்றி பிதற்றுவது எதற்காக? புலிகளின் ஆணாதிக்க உரைகள் முதல் நடத்தைகள் வரை சமரசம் செய்து சோரம் போய் விமர்சிக்க வக்கற்று, அனைத்து மனித விரோதத்துக்கும் துணை போபவர்கள், புலிகள் அல்லாத இலக்கிய வாதிகளின் கோட்பாடுகள் மீது பொதுவாக கொச்சைப்படுத்தி தாக்குவது எதற்காக? ஆனால் தேசியம் மீது மட்டும் ஆகயாக, என்ன காதல்! என்ன சமரசம்! என்ன ஆணாதிக்கம்! இதன் அரசியல் பின்னணி என்ன?  தாம் சொல்வதற்கு எதிராக ஆணாதிக்க அடிமைத்தனத்தை தனக்குள் பாதுகாத்தபடி, பெண் விடுதலை பற்றிய பிதற்றல், உள்ளடக்கத்தில் பிற்போக்கானவை. ஆணாதிக்க அடிமைத்தனத்தை தாலியிலும், குங்குமத்திலும், மெட்டியிலும் அணிகலனாக அணிந்தபடி, அந்த சடங்குகளை சுயவிமர்சனமின்றி பாதுகாத்தபடி, மேடையில் அச் சின்னங்களுடனும், வனொலியிலும் அதை பண்பாடாக கூறியபடி, கோசம் போடுவதே பெண் விடுதலை என்கின்றனர். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தியும், தமிழ் மக்களை ஆழ்ந்த அறியாமையிலும், வீட்டில் ஆணாதிக்க சினிமாவைக் கொண்டு தனிமையில் காலம் தள்ளி வாழும் அடிமைப் பெண்களின் தொலைபேசித் தயவிலும், பிழைப்பு நடத்தும் வனொலிகளின் அறிவிப்புத் திலகங்களின் பெண்ணியம் என்பது, நவீன ஆணாதிக்கத்தை பெண்ணுக்கு அணிகலனாக்கி அதை நடைமுறையில் கொண்டிருக்கும் "சுதந்திரத்தை" அங்கீகரிக்க கோருவதாகும். ஆணாதிக்க அடிப்படை நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரங்களை பேணியபடி "சுதந்திர" ஆணாதிக்கத்தில், பெண்களின் "சுதந்திர" ஆணாதிக்க நடத்தைகளை கோருவதில் இவை மண்டிக்கிடக்கின்றது. இப்படி நடைமுறையில் ஆணாதிக்கத்தை கொண்டபடி கோசம் போட்ட பெண்கள் புலம்பெயர் இலக்கியத்துடன் எந்தவிதமான ஒட்டோ உறவோ கிடையாது.  புலம் பெயர் இலக்கியத்தை படிப்பதோ, அது பற்றி தெரிந்து கொண்டவர்களோ அல்ல. ஆனால் புலம் பெயர் இலக்கியம் மீது தேசியத்தை விலத்தி மற்றைய கோட்பாடுகளின் மீது நடத்திய பொது தாக்குதலின் பின்னணி என்ன? (பார்க்க பெட்டிச் செய்தியை.)

ஐக்கிய நாட்டுச்சபையின் உலகமயமாதலை விரைவாக்கும் ஆக்கிரமிப்புகள், மனித விரோத குற்றங்களாகும்

ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் அமெரிக்காவின் தலைமையில் மேற்கின் ஆதரவுடன் உலகை, உலகமயமாதலை நோக்கி வழிநடத்திச் செல்லும் மக்கள் விரோத சர்வதேச குற்றவாளியாக பரிணமித்துள்ளது. 1990 களில் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் வரைமுறையற்று அழித்தொழிக்கும் ஆக்கிரமிப்பின் போதும், யூக்கோசிலாவியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் நடத்திய தாக்குதல்கள் மிலேச்சச்தனமானவை. அணுகுண்டுக்கு பாவித்த யூரேனியக் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட யூரேனியக் குண்டுகள், இந்த நாட்டு மக்கள் மீது வரைமுறையற்ற வகையில் வரலாறு காணாத வகையில் வெடிக்க வைக்கப்பட்டது. உலக ஜனநாயக வாதிகள் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அறிவுஜீவிகளின் போராட்டமற்ற மௌனம் சாதிக்கும் சர்வதேச முற்போக்கு ஆய்வுகளிலும், மறுவாசிப்பிலும், தேடுதலின் பின்பு தான், இவை ஐக்கிய நாடுகளின் ஜனநாயக சுதந்திர ஆயுதமாக நீடிக்கின்றது.

பார்ப்பனிய, பின்நவீனத்துவ, தலித்தியல்வாதிகள் ஏன் நீட்சேயை தலையில் வைத்து கூத்தடிக்கின்றனர்?

நீட்சே எதை சமுதாயத்தின் மிக உயர்ந்த பண்பாக வருணிக்கின்றாரோ, அதுவே  சுரண்டலில் தொடங்கி ஆணாதிக்கம் ஈறாக யதார்த்த மனிதப் பண்பாகவுள்ளது. "காமவேகம், வலிமை சக்திக்கு ஆசை, சுயநலம் இம் மூன்றும் தான் முப்பெருந் தீமைகளாகப் பன்னெடுங் காலமாகச் சபிக்கப்பட்டு வருதிருக்கின்றன. ஆனால் அம்மூன்றும் தான் மனிதத் தன்மையில் நல்லனவாக நான் எடை போடுகிறேன்"1 என்று சமுதாயத்தை பிளந்து, அதில் இதைச் சாதிக்கும் சிறுகூட்டத்தின் திமிர்த்தனத்தையே நீட்சே, உயர்வான மனிதப் பண்பாக காட்டமுயல்கின்றார். காமம், ஆசை, சுயநலம் என்பன மனித சமுதாயத்தை பிளந்து அதில் சிலர் மட்டும் பெரும்பான்மைக்கு எதிராக அனுபவிக்க கூடியவை. சமுதாயப் பிளவு இந்த சமுதாயத்தில் இல்லாத வரை, இதை ஒருக்காலும் யாராலும் சாதிக்க முடியாது. சமுதாயப் பிளவற்றதாக இருக்கின்ற போது, இந்த உணர்ச்சிகள் சார்ந்த மனித இழிவுகள் கற்பிதமாக மாறிவிடுகின்றது. உலகமயமாதல் சரி நாசிகளின் பாசிசம் சரி மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும் இதையே ஆதிமூல மந்திரமாக, தனிமனித நடத்தையாக கொண்டே, கோடான கோடி மக்களின் உதிரத்தையே உறுஞ்சிச் சுவைத்து ரசிக்கின்றது. இதை நீட்சே இயற்கையின் விதி என்கிறார். "உயிர் வாழ்பிறவிகள் அனைத்திடமும் கொள்ளையடிப்பதும், கொலை புரிவதும் லட்சணங்களாக அமைந்திருக்கின்றனவே! இயற்கை நியதி அது தான் அல்லவா?" என்று கூறி உயிரியல் விதியையே திரித்து கொள்ளையடிக்கவும், கொலை புரியவும் உரிமை உண்டு என்று, உரக்க பாசிட் கோட்பாட்டாளனாக மூலதனத்தின் பாதுகாவலனாக பிரகடனம் செய்கின்றார். உயிர்த் தொகுதிகளில் இரண்டு வேறுபட்ட உயிர்களுக்கிடையில் உணவுக்கான போராட்டம் கொலையோ, கொள்ளையோ அல்ல. இயற்கை அதற்கு அப்படி பெயரிட்டதில்லை. இயற்கை மறுத்த வர்க்க சமுதாயத்தின் சுரண்டல் பண்பாக உழைப்பை திருடிய போதே, இது கொள்ளையாகவும் கொலையாகவும் அடையாளம் காணப்பட்டது. கொலையும் கொள்ளையடிப்பதும் மனித இயல்புகளாக வர்க்க சமுதாயத்தில் மனித உழைப்பை சுரண்டியதால் உருவானவை தான். உயிர்த் தொகுதியில் உயிர் வாழ்தல் என்ற அடிப்படையில் மட்டும் ஒன்றை ஒன்று உண்டு வாழ்வது நிகழ்கின்றது. இது சங்கிலித் தொடராக சுழற்சியாக நிகழ்கின்றது. ஆனால் மனிதன் அதை அப்பட்டமாக நிர்வாணமாக மீறுகின்றான்; மற்றவன் உழைப்பைச் சுரண்டி உபரியை திரட்டவும், அதைக் மூலதனமாக்கி அதை கொண்டு அடிமைப்படுத்தவும், மற்றைய உயிரினங்களை கொன்று கொள்ளையிடுவது என்ற பண்பு இயற்கையானது அல்ல. அடுத்து சொந்த மனித இனத்துக்குள் மற்றவன் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டு கொன்று போடும் தன்மை, உயிரியல் தொகுதியின் இயற்கையானவையல்ல. மனித இனம் இன்று உயிர்வாழ்வதற்குரிய மனிதப் பண்புக்கு இது நேர் எதிரானது. மனிதனை மனிதன் கொன்று அழித்து கொள்ளையிட்டிருப்பின், மனிதன் காட்டுமிரான்டி சமூகத்தை தாண்டி ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்திருக்க முடியாது. நீட்சேயின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு சுயநலத்தில் ஆசைப்பட்டு காமத்துடன் அலைந்து, கொள்ளையிலும் கொலையிலும் கொழுத்து எழும் பூதமாகவே உலகமயமாதல் காணப்படுகின்றது. இதன் பண்பாடு, பொருளாதார கலாச்சார அலகுகள் அனைத்துமே, விதிவிலக்கின்றி இதுவே தாரக மந்திரமாக உயிருடன் உலாவருகின்றது. இதை தீவிரமாக்க வர்க்கப் போராட்டத்தை அடக்கியொடுக்க, பாசிசத்தையே அதன் மூல மந்திரமாக கொண்டு கூத்தடிக்கின்றது. சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதை வெறுக்கும் நீட்சே " ~மானுஷிகத்தின் எதிர்காலத்திற்கு மிகக்கொடிய விபத்தை விளைவிப்பவர்கள் நன்மை நியாயம்" என்கிற வாதங்களைப் பேசித்திரிகிறவர்கள் தான்! தீங்கானவர்களின் செயலைக் காட்டிலும்  இந்த நன்மை வாதிகளின் செயல் தான் மிகக் கெடுதலானவை."1 என்று கூறுவதன் மூலம் சமுதாய நலன் சார்ந்த நடத்தைகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகின்றான். நன்மை, நியாயம் என்பன இந்த வர்க்க சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இருப்பது, நீட்சேக்கு அருவருப்பூட்டி வெறுப்பூட்டுவதாக இருக்கின்றது. இதனால் சமுதாய நலன்களை தூற்றுவது, இது இருக்கின்ற சுரண்டல் அமைப்புக்கு தீங்கானவை என்றும், ஆபாத்தானவை என்று கூறி வெறுப்பதில் வக்கரிக்கின்றான்.