11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

உங்களுடன் சமர்

வழமைபோல கடந்த இதழுக்கும், இந்த இதழுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. இதற்கிடையில் எத்தனையோ நிகழ்வுகள், இந் நிகழ்வுகளுக்கு வெளியில் சமர் இயங்குவதாக ஒரு சாராரின் விமர்சனம். இது ஒரளவு உண்மையாக இருந்தாலும் முழுமையானதல்ல. சமர் மூன்றாம் பாதையை அமைத்திடும் போக்கில் செயற்பட முனைகிறது. அந்த வகையில் கடந்த கால, நிகழ்கால அரசியல் போக்குகளையொட்டி விமர்சனத்தை முன் வைக்கின்றது. கடந்த கால, நிகழ்காலத்தின் மீதான அரசியல் விமர்சனம் எதிர்காலத்தில் எழும் போராட்டத்தை வழிநடத்தும்.

நாம் கடந்த காலத்தின் மீது விமர்சனம் செய்யும் அதே நேரத்தில் மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு வி;டுகிறார்கள். நாம் இக் கொலைகளுக்கு வெறும் எதிர்ப்பைக் காட்டுவதாலோ அல்லது கண்டிப்பதாலோ மட்டும் இக் கொலைகள் தடுக்கப்பட்டு விடாது. இக் கொலைகளை நிறுத்தும் வகையில் மூன்றாவது பாதைக்கான அமைப்பை உருவாக்க வேண்டும். எப்போழுது மூன்றாவது பாதை உருவாகிறதோ அப்போதிருந்தே தமிழ் மக்களின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக மாற்றப்பட்டு விடும்.

இந்த வகையில் மூன்றாவது பாதை அமைத்திடும் நோக்கில் நாம் கொண்டிருந்த நிலைப்பாடு, சில சஞ்சிகைகளில் கதை, கவிதை மட்டும் கவனத்தில் எடுத்து செயற்படுவதை கண்டித்தோம். ஆனால் அதற்காக அவை சமூகத்திற்கு அவசியமற்றது என்று அர்த்தமல்ல. இவை இச் சமூகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்த மூன்றாவது பாதையை உருவாக்கியிருக்க வேண்டும். மூன்றாவது பாதை உருவாகாமல் தடுப்பதில் இரு பிரதான விடயங்கள் பங்காற்றுகின்றன. இவை இரண்டிற்கும் எதிராக சமர் முழுமையாக போராட முற்படுகின்றது. இலங்கையரசு, புலிகள் என்ற தரகு முதலாளித்துவம் முதல் தடையாகும். திரிபுவாதமும், பிழைப்பு வாதமும் இரண்டாவது தடையாகும். இரண்டாவது தடை முற்போக்கு அலைகளுடன் வெளி வருகிறது. முதல் தடை எப்போதும் நேருக்கு நேராகவும், இரண்டாவது தடை முதுகுக்குப் பின்னாலும் செயற்படுகிறது.

இவ்விரண்டையும் உடைப்பது மூன்றாவது பாதையின் மிக அடிப்படையான விடையமாகும்.

இவ்விரண்டு விடயமும் மூன்றாவது பாதையை உருவாக விடாமல் தடுக்கும் இன்றைய நிலையில். தொடர்ந்து ஆயிரகணக்கில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்த நபர்களும், குழுக்களும் செயற்படுகின்றனர். இவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தவென புறப்பட்ட நோங்களில் புதிய புதிய இராணுவ நடவடிக்கைகளை முழுத்தமிழ் மக்கள் மீதும் நடத்தி முடித்து விடுகின்றனர். இந்தியா விடுதலைப்புலிகள் மீது தடையென்ற பெயரில் தமிழீழப் போராட்டத்தையே தடை செய்து, தமிழ் மக்களை கொன்று குவிக்க பச்சைக் கொடியும் காட்டியுள்ளது. இன்று தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக பாரிய தாக்குதல்களை ஸ்ரீலங்கா அரசு தனது இனவெறி இராணுவத்தை காட்டுமிராண்டித்தனமாக கட்டவிழ்த்து விட்டுள்ளது. தெரிவுக்குழு நீண்டகாலத்தை கடத்தி எந்த உருப்படியான தீர்வையும் முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் தெரிவுக்குழு தீர்வு எனச் சொல்லி இராணுவ நடவடிக்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துகின்றனர். இலங்கையரசுடன் கைகோர்த்த தமிழ் துரோகக் குழுக்கள் தெரிவுக்குழுவை கூறியே காலத்தை கடத்துகின்றனர். அதே நேரம் புலிகள் மீதான இந்தியாவின் தடையை தமிழீழ போராட்டத்தில் புரட்சிகரமான நடவடிக்கையென, துரோக வாய்களால் ஒரு பாராட்டைக் கொடுத்து அண்டிப் பிழைக்க முயல்கின்றனர். புலிகளோ மேலும் பாசிசத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு, ஈழப்போராட்டத்தை முன்னேற்றுவதாக உண்மைக்கு மாறாக மிரட்டலுடன் கூறுகின்றனர். மறுத்துக் கூறுவோர் மீது கொலைப் பயமுறுத்தல், கடத்தல் மூலம் வாய்களை மூடி வைக்க முயல்கின்றனர்.

மக்களை நேசிக்கும் அனைவருக்கும் எதிர்காலத்தின் வெற்றிக்கு துரோகத்திற்க்கும், பொய்களுக்கும், உருட்டல், மிரட்டல்களுக்கும் எதிராக ஒன்றிணைந்த திரிபுகளையும், பிழைப்பு வாதத்தையும் எதிர்கொள்ள கைகோர்த்திட சமர் அழைக்கிறது.

 


வாசகர்களும் நாங்களும் 1

சமரின் கருத்து தொடர்பாக தூண்டிலில் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அது பற்றி அறிவது அவசியமாகிறது. மனிதம், சமர் இரண்டையும் ஒரு தட்டில் போட்டுப் பார்க்க முடியவில்லை. எனது நிலைப்பாடு சீனத் தலைமையும், மூன்று உலகக் கோட்பாடும் பிழை என்பதும், தமிழீழத்திலிருந்து முழு இலங்கைக்கான போராட்டம் பற்றிய விடயத்தில் சற்று தத்துவார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும், அவசரம் கூடாது எனவும் எண்ணுகிறேன். எதற்கும் ஒரு இதழுடன் முடிவுக்கு வருவது முட்டாள்தனம்.

தூண்டிலில் சமரும் அழிவுக்காரர் என்று சொல்லும் பாணியானது, தீண்டாமை மட்டும் தேசியப் பிரச்சனை என்று கூறிய, மரபுவாதிகளில் நின்று சற்று முன்னேறி, ஒரு அடைப்பு வாதத்துக்குள் வீழ்ந்த சீன சார்பு இடதுகள் தமிழ்த் தேசியப் பிரச்சனையை தீண்டத்தகாத பிரச்சனை போல் கருதினார்கள். கூட்டணியும் சாதியப் பிரச்சனையை தீண்டத் தகாத பிரச்சனையைப் போல் கருதினார்கள். தமிழ்த்; தேசியப் போக்குக்குள் இருந்து தமது கருத்துக்களை வலியுறுத்த முடியாது. வெளியேறிய சமூகவிஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டிருப்பவர்கள் கூட அழிவு யுத்தம் என்று கூறுவது ஒரு கேலித்தனம் சேர்ந்தே தொனிக்கிறது என்றே எனக்குப் படுகிறது.

கருத்துகள் கருத்துகளாக மதிக்கப்பட்டு ஆராயப்படுதல் தான் இயங்கியல் போக்குக்கான அழகும், கருத்துக்கு மதிப்பளித்தலுமாகும் என்று நான் கருதுகிறேன். கருத்துக்கள் எள்ளி நகையாடப்படுதல் ஒரு பத்திரிகைக்கான ஜனநாயகத்தன்மையை மறந்து வாசகர்களை சரியாக சிந்திக்க விடாது மயக்க நிலையில் சில பிழையான அர்த்தத்தை உண்டு பண்ணி, அந்த நிலையில் கருத்துச் சொல்பவர் பத்திரிகையினை பிழையாக விளங்கிக்கொள்ள தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. (இது கடந்தகால சீன தலைமைகள் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதும் போதும் நான் இது பற்றி சீன சார்பு க.கட்சி தலைவர்களுடன் பேசும் பொழுது முதலாளித்துவப் பத்திரிகைகள் அப்படித்தான் கூறும் என்று கூறியே தப்பித்துக்கொண்டனர். இது தவிர கட்சிக்கட்டுபாடு என்று கட்டியே போட்டு விடுவார்கள். இந்த மாதிரியான துரோகத்தனமான நடவடிக்கையினால் கிடைத்த அனுபவங்கள் எம்மை மேலும் சிந்திக்கத் தூண்டியது. அடைப்புவாத போக்கு தமிழ் இயக்க ஆயுதக்கவர்ச்சி என்பன அக்கட்சி அழிவதற்கு காரணமானாலும் புதிய |ஜனநாயக கட்சி செந்தில்--மணியம் போன்றவர்கள் கட்சி சீர்குலைவுக்கு காரணமாகியது.

தமிழ் பகுதியில்(யாழ்ப்பாணம்) 70 பதுகளில் பலமான கட்சி ஒன்று இருந்ததும், அதிலிருந்து பிரிந்த செந்தில், மணியம்(இவர் இறந்து விட்டார்)தற்போது புதிய ஜனநாயக் கட்சி அமைத்துள்ளனர். இவர்களுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என சமர்(3) மூலம் அறிந்து கொண்டமையால் சில விடயங்கள் சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எழுதியுள்ளேன். இனங்கண்டு கொள்ள முடியுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் எழுதியுள்ளீர்கள் சீனத்தலைமையும் மூன்று உலகக்கோட்பாடும் பிழையென்று. இக்கருத்து தொடர்பாக சீனாவிலிருந்த மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று உலகக் கோட்பாட்டையும் பிழை என்கிறீர்களா? அல்லது இன்றைய சீனத்தலைமையையும் இலங்கையிலுள்ள சீனா கம்யூனிஸ்ட் கட்சியையும் பிழை என்று கூறுகிறீர்களா என்பதை கடிதம் தெளிவாக சுட்டிக்காட்டவில்லை. இருந்தும் இது பற்றி விவாதிக்க முற்படுகிறோம். மாவோ தலைமையிலிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அக்காலத்தில் தவறுகள் இருந்திருக்கலாம் அவை விமர்சனத்துக்குட்பட்டவை ஆனால் இன்று இருக்கும் சீனத்தலைமையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று சீனாவில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் சீரழிந்த முதலாளித்துவ மீட்பாளர்களே. இவர்கள் இப்படியெனில் இலங்கையிலுள்ள சீன சார்பு கம்யுனிஸ்ட்டுகள் (புதிய ஜனநாயகக் கட்சிக்காரர்கள்) பிழைப்புவாதிகளாகவேயுள்ளனர். மற்றும் மூன்றுலகக் கோட்பாடு தொடர்பாக எம்மிடம் புத்தகமின்மையும், அது பற்றி நாம் ஒரு கருத்தையும் வந்தடையவில்லை இது தொடர்பாக பொதுவாக மூன்று உலக கோட்பாட்டை மாவோ வரையறை செய்தபோது, அக்காலத்தில் உலக நிலைமையோடு பொருந்;துவதாக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே பொதுவானது என இன்று பாவிக்க முற்படுவது, பிழைப்பு வாதத்தின் அடிப்படைக் குணாம்சமே.

தமிழீழத்திலிருந்து முழு இலங்கைக்கான போராட்டம் பற்றிய விடயத்தில் சற்று தத்துவார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும்|| என்ற உங்கள் கருத்து தொடர்பாக சமுகத்தில் எழும் முரண்பாடுகளிலிருந்தே போராட்டம் வளர்த்து எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இனமுரண்பாடு 1983க்குபின் கூர்மையடைந்து. இம் முரண்பாட்டை எந்த மார்க்ஸிசவாதியும் கவனத்தில் எடுக்கதவறின் ஒரு புரட்சிக்கு தலைமை தாங்க முடியாது. குறிப்பிட்ட இம் முரண்பாடு இலங்கையில் தீவிரமடைந்து உள்ளது. இம் முரண்பாட்டை முன்னெடுத்தலுக்கூடாகவே தமிழீழம் அல்லது இலங்கைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அந்த வகையில் எம் மக்கள் மத்தியில் உள்ள இம் முரண்பாட்டை முன்னெடுக்கும் போது தமிழீழம் தீர்வாக முன் வைக்கப்படுகிறது. இப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் தமிழீழம் நோக்கி முன்னேறும் பொழுது, சிங்கள மக்கள் மத்தியில் எழும் ஒரு புரட்சிகர கட்சி நேசக்கரம் நீட்டுவதைப் பொறுத்தே ஜக்கிய இலங்கைக்கான மொத்தப்புரட்சியா என்பதை வழிகாட்டும். அப்படி சிங்கள புரட்சிகர கட்சி நேசக்கரம் நீட்டாமல் இருக்கும் வரை தமிழீழத்துக்கான போராட்டம் தடைப்பட்டுவிடாது. தொடரும் அதன் வெற்றி தமிழீழத்தை உருவாக்கும்.

தூண்டில், சமரும் அழிவு யுத்தத்திற்காக என்ற பாணியானது என்று நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் புலிகளின் யுத்தம் அழிவு யுத்ததிற்கானது என சமர் சொல்லவில்லை. இது பற்றி இன்னும் சமர் கருத்துச் சொல்லவில்லை. குறிப்பிட்ட விடயத்தில் தூண்டிலின் பார்வையில் தீண்டாமை மட்டுமே தேசியப் பிரச்சனை என்று கூறிய, மரபுவாதிகளில் நின்று சற்று முன்னேறிய ஒரு அடைப்பு வாதத்திற்குள் விழுந்த சீன சார்பு இடதுகள் தமிழ்தேசிய இனத்தின் பிரச்சனையை தீண்டத்தகாத பிரச்சனைபோல் கருதினர். தமிழ் தேசிய போக்குக்குள் இருந்து தமது கருத்துக்களை வலியுறுத்த முடியாது வெளியேறிய சமூகவிஞ்ஞான கண்ணோட்டம் கொண்டவர்களிடம் கூட அழிவு யுத்தம் என்று கூறுவது ஒரு நய்யாண்டிதனம் சேர்ந்தே தொனிக்கிறது என எனக்குபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் தூண்டிலின் பார்வையை நீங்கள் குறித்த வரையறைக்குள் பார்ப்பது தவறு. தூண்டிலின் அழிவு யுத்தமா? தடுப்பு யுத்தமா? என விவாதிப்பது ஒர் ஆய்வின் தொடராகவே ஒழிய ஒரு வறட்டுதனமாகவல்ல. தமிழீழ போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரம் அதற்கான போராட்டத் தலைமையை உருவாக்கவும் தூண்டில் முனைகிறது. அந்த வகையில் புலிகளின் யுத்தத்தை அழிவு யுத்தமா? தடுப்பு யுத்தமா? என விவாதிக்க முற்படுகின்றனர்.

கருத்துக்களை கருத்துக்களாக மதிக்கப்படவேண்டும் என்ற வாதத்தை சமர் பூரணமாக ஏற்றுக்கொள்கிறது. உங்கள் பார்வையை சிலர் தவறாகப்பயன்படுத்த கூறுகின்றனர். அதாவது கருத்தை விமர்சிக்கும் உரிமையை தடுக்கின்றனர். ஒரு கருத்தின் மீது மாற்றுக்கருத்தை முன் வைக்கப்படும் போது அக் கருத்து தொடர்பாகவுள்ள முக்கியத்துவத்தை ஒட்டி விமர்சனம் கடுமையானதாகவோ, மென்மையானதாகவோ அமையலாம். இவைக்குள் எள்ளி நகையாடப்படுவது கூட அமையலாம். இப்படியான விமர்சனம் மீது விமர்சனம் பிழை என வாதாட முற்படுபவர்கள், தங்களின் கருத்தின் மீதான பலவீலத்தை கொண்டே இப்படி வாதாடுகின்றனர்.

"கட்சி கட்டுப்பாடு என்று கட்டியே போட்டு விடுவர்" என்று நீங்கள் சொல்வதில் ஒரு வரையறைக்குள் பார்க்க முடியாது. கட்சிக் கட்டுப்பாடு ஒரு கட்சிக்குத் தேவையானது. ஓரு கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கு |ஜனநாயகம் இருக்க வேண்டும். அக் கருத்தை வைக்கும் ஒழுங்கு கட்சிக்குள் இருக்க வேண்டும். இது இல்லாத பட்சத்தில் ஒரு கட்சி கட்சியாகவே இருக்காது. கட்சிக்கட்;டுப்பாடு என்று ஓரு கருத்;தை விவாதிக்கத் தடுப்பது பிழை. அதே நேரம் கட்சி தனக்கென ஒரு கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். கட்சி எப்பொழுதும்; ஜனநாயக மத்தியத்துவதத்தைக் கொண்டு செயற்பட வேண்டும்.

--ஆசிரியர்குழு---

 

 

 

வாசகர்களும் நாங்களும் 3

சமர் இதழ் ஒன்றில் வெளிவந்த 3வது நிலைக்கான கோரிக்கை மிகவும் தேவையானதே. தற்போதைய போராட்ட சூழ்நிலையில், ஜனநாயக மறுப்புகளுக்கு மத்தியில், அமைப்பு ரீதியான இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் எம் மண்ணில் 3வது நிலை சாத்தியமற்றதே. எனவே புலம்பெயர்ந்தோர் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து, பொது அரசியல் வழிமுறை ஒன்றினை சரியான விவாதங்களுக்கூடாக கண்டுபிடித்தல் இன்றைய காலகட்டத்தின் முன் உள்ள முக்கியமான தேவையாகும். அத்துடன் இம் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஓரு அமைப்பு ரீதியில் ஸ்தாபன மயப்படுத்தலுக்குரிய வேலைத்திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தலும் அவசியமாகிறது.

சரியான விவாதங்களுக்கூடாக நேச அணிகள், முற்போக்கு சக்திகள் எவை எவையென இனங் காணப்படும் அதே வேளை பிற்போக்கு சக்திகளை அம்பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகிறது. இதன் பொழுது புலிகள் மீதான பார்வை தவிர்க்க இயலாததாகும்.

ஒரு சிலர் தனிய ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு (நின்று போராடுதல், தற்காப்பு யுத்தம் புரிதல் போன்ற சில நிகழ்வுகள்) புலியினர் ஒரு நேசவணி என்றும், அவர்கள் தேசியப்போட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் எனவும், அவர்கள் ஒரு தேசியசக்திகள் என்றும் முடிவுக்கு வருகிறார்கள், ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவானது ஒரு ஆரோக்கியமான முடிவாக இருக்காது. முற்றுமுழுதான ஒரு பரந்துபட்ட விவாதத்தின் பின்னரே(சமூகப்பின்னணி, போராட்டத்தின் அரசியல் அடிப்படை, போராட்ட விளைவுகளும், அதனது தொலைநோக்கு பக்க விளைவுகளும் போன்ற அடிப்படையில் ஒரு பரந்துபட்ட முழுவிவாதத்தின் பின்னரே ஒரு ஆரோக்கியமான முடிவு கிட்டும் என்பது எனது அபிப்பிராயயமாகும்.

எனவே சமர் இது போன்ற ஒரு முழுமையான விவாதங்களுக்கு ஒரு மேடையாக அமையும் என்றும், புலம்பெயந்தோர் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைக்க தன்னை முழுமையாக ஈ;டுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

 

 

 

வாசகர்களும் நாங்களும் 2

"புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் அல்ல, அவர்களின் நலன்களுடன் தமிழ்மக்களின் நலங்களும் சில பின்னிப்பிணைந்துள்ளது". புலிகள் தாம் சார்ந்த வர்க்கத்திற்காக நிற்கின்றார்களா? அப்படியாயின் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி அவர்களையே நம்பி ஆயுதம் ஒப்படைப்பதாகக் கூறியவர்கள் பின் தங்களின் நலன் பாதுகாக்கப்படாத போது அவர்களையே எதிர்த்தார்கள். இலங்கையரசை நம்பவில்லை என்றவர்கள் பின் பிரேமதாசா அரசுடன் பேச்சு நடத்தியது மட்டுமல்லாமல், ஆயுதமும் வாங்கி தற்போது அவர்களுடன் மோதுகின்றார்கள். ஏன்? இங்கு அவர்களின் நலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களின் நலன் பாதிக்கப்படும் என்றால் புலியினர் இஸ்ரேல் என்ன அமெரிக்காவுடனும் மோதத் தயார். அங்கு இருப்பவர்கள் சயனற்றை கழுத்தில் கட்டிய தொண்டர்கள். இந்த நிலையில் அவர்களை ஒரு வர்க்கத்திற்குள் வரையறுப்பது எப்படி?

இக் கருத்துக்கள் தொடர்பாக சமர் 1,2, தூண்டில், மனிதம், உயிர்ப்பு ஆகியவற்றில் விவாதங்கள் வெளிவந்தன, இவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே கருத்துக்களை விவாதிக்கிறோம். அக் கருத்துக்கள் தொடர்பாக இவ்விதழில் பிறிதொரு விவாதத்தை முன் வைக்கிறோம். தாங்கள் அவ் விவாதங்களையும் பார்க்கவும். உங்கள் கருத்தும், மனிதம் சஞ்சிகையில் வந்த கருத்துக்களையும் ஒன்றாகப்பார்க்க முடிகிறது. உங்கள் கருத்துக்கள் தொடர்பாக மனிதத்தின் கருத்துக்களை ஒட்டி வைத்த கருத்தையும் பார்க்க. இருந்தும் உங்களது கருத்துக்களையும் தனியான ஆராய முற்படுகிறோம்.

புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் இல்லை என வாதாட முற்படுபவர்கள் உலகில் நடுநிலைமை என்று ஒன்று உண்டு என வாதட முற்படுகின்றனர். எந்த நடவடிக்கைக்கும், எக்கருத்துக்கும் ஒரு வர்க்கத் தன்மையுள்ளது. இது தொடர்பாக இரண்டாம் அகிலத்துக்கும், லெலினுக்கும் இடையில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. புலிகளின் நலன்களுடன் தமிழ் மக்களின் நலன்கள் சில பிணைந்துள்ளது என்ற உங்கள் வாதத்தில் புலிகளின் நலன்களென்று நீங்கள் கூறுவது எதை? புலிகள் தாம் சார்ந்தோருக்கெனப் போராடும் குறிக்கோள்கள் அனைத்தும் தரகுமுதலாளித்துவம் சார்ந்ததே. சிறு குழுக்களாகவிருக்கும் இவர்கள் எப்போதும் தமது நலனுக்காவே போராடுவார்கள். இத் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான அம்சமும் கூட, இத் தரகுமுதலாளித்துவ கோரிக்கைகளுக்கு அப்பால் எந்தக் கோரிக்கையும் வர்க்கத்தன்மையற்றதென நீங்களோ, மனிதம் சஞ்சிகையோ சுட்டிக்காட்டவில்லை. ? இதை மேலும் விபரமாக மனிதம் தொடர்பான விமர்சனத்தில் பார்ப்போம். நீங்கள் சொல்லுவது போல் புலிகளுக்கு வர்க்கத்தன்மையில்லை எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் புலிகள் சுரண்டலை நடத்தவில்லை. இக் கருத்தை நாம் ஆராய முற்படும் பொழுது எவ்வளவு பலவீனமானது. தமிழ் மக்கள் மீது புலிகள் சுரண்டலை நடத்துவதில் இன்று முதலிடம் வகிக்கிறார்கள். சாதாரண |"ஜனநாயகத்தை" அடக்கி ஒடுக்கி தங்களின் வர்க்க இருப்புக்காக சுரண்டலைப் பிரதானமாக கொண்டு இன்று தம்மைப் பேணுகிறார்கள்.

இதே கருத்துடன் கிட்லர், சதாம் உசையின் பிரச்சனையை எடுப்போமாயின் இருவரின் குரல்களிலும் தேசியத்தன்மை (சொந்த மக்களின் கோரிக்கை) காணப்பட்டது. அதே நேரம் எதிரியைப் போன்று சொந்த மக்களை நசுக்கியபடி எல்லா வழிகளிலும் சுரண்டல்களை நடத்தினார்கள். அவர்களும் காலத்துக்கு காலம் நண்பர்களை மாற:றி தம்மைப் பாதுகாத்து கொள்ள முயன்றனர். அதற்காக இவர்களுக்கு வர்க்கத் தன்மையில்லை என்றோ, எந்த வர்க்கமென்று வரையறுப்து என்றோ கேள்வியெழுப்ப முடியாது. இவர்களின் வர்க்கத்தன்மை தெளிவானது.

புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் உருவாகிய பொழுது அவை ஒரு குட்டிபூர்சுவா இயக்கமாகவே இருந்தது. அது தனது வளர்ச்சியுடன் தனது தன்மையை மாற்றிக்கொண்டது. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டு தமிழீழப் போராட்டத்தில் தலையீடு நடத்தியது. ஆரம்பத்தில் பயிற்சி முகாம்களை உருவாக்கிய பொழுது ஒவ்வொரு இயக்கத்தையும் தனது வர்க்க நோக்கத்தின் அடிப்படையில் ஆராய முற்பட்டது. இதன் அடிப்படையில் தனது தரகு ஆகவும், நம்பகரமான சக்தியாக டெலோவையும், ஈ-பி-ஆர்-எல்-எவ் யும் கணித்தது. புளொட்டிலிருந்த குழப்பமான சக்திகளின் நடவடிக்கைகளை அடுத்து புளொட்டை அவதானத்துடன் கையாண்டது. புலியை அதன் பின்னணியைக் கொண்டு, புலிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது புறக்கணித்தது. பயிற்சி கொடுத்த நபர்களின் எண்ணிக்கை, பயிற்சியின் தரம், கொடுத்த ஆயுதங்களின் தொகை ஒவ்வொரு இயக்கங்களுக்கும் மாறுபட்டதாக இருந்தது. இக் காலத்தில் என்-எல்--எவ்-டிக்கான பயிற்சி நிராகரிக்கப்பட்டதுடன் தீவிர கண்காணிப்பையும் இந்தியா செய்தது. இந்திய அரசு ஒவ்வொரு இயக்கத்தையும் அதன் வர்க்கத்தன்மையையும் மதிப்பிட்டது.

இதே போல் புலிகளும் ஒவ்வொரு இயக்கத்தையும் இந்தியாவையும் மதிப்பிட்டது. ஆரம்பம் முதலே இந்தியா தொடர்பாக புலிகள் காலத்துக்காலம் தேவைப்படும் போதும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்க முனைந்தனர். ஆனால் புலிகளில் இருந்த அரசியல் தெளிவின்மையும், பிறிதொரு ஏகாதிபத்தியத்தின் சார்பும், கீழ் மட்டத்திற்கு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மேல்மட்டம் கொடுக்கத்தவறியதன் விளைவே. கீழ்மட்டம் இந்தியா இறங்கிய பொழுது வரவேற்றது.

புலிகள் இந்தியா தொடர்பாக அரசியல் ரீதியாக ஆராய்ந்ததன் குறைபாடும், இந்தியா தொடர்பாகவிருந்த பயம் அவர்களுக்குள் இருந்த நெருக்கடியும், தரகுத்தன்மையும் இந்தியா சார்பாக மாற்ற தயாராகவுமிருந்தனர். இதுவே ஆயுதத்தை வாங்கவும், கொடுக்கவும் முயன்றது. அதே நேரம் இந்தியா ஏமாற்றி விடும் என்ற பயமும் தான். ஒரு பகுதி ஆயுதத்தை மறைத்து வைத்ததும். இந்தியா மற்றைய இயக்கங்களை இறக்கிய பொழுது மோத முற்பட்டது. இதில் இந்தியா புலிகள் தொடர்பாக இருந்த நம்பிக்கையீனமும், தனக்கு நம்பகமானவர்களை நாட்டில் இறக்கியது. அதே நேரம் இலங்கையில் தொடர்ந்து இருக்க புலிகளுடன் மோதும் அவசியத்தையும் உணர்ந்தது. இதுவே புலிகள் தொடர்பாக இந்தியாவின் நிலையாகவிருந்தது.

இலங்கையில் இந்தியப்படையின் இருப்பை சிங்கள மக்கள் எதிர்த்த அதே நேரம் ஜே-வி-பியின் வளர்ச்சி இந்தியாவின் வருகையுடன் வேகங் கொண்டது. இந் நிலைமையைத் தொடர்ந்து இலங்கையரசு ஆட்டம் காணும் நிலைமை ஏற்பட்டது. இதை ஈடு கொடுக்கவே பிரேமதசா இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன் இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோரினார். பிரேமதாசா அரசு மேற்கத்தைய தரகுத்தன்மையை கொண்டிருந்தமையும், புலிகளும் அதே தன்மையை கொண்டிருந்தமையும் இருவரும் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரேமதாசாவுடன் இணைந்து ஆயுதம் வாங்கியதும், இந்தியாவை வெளியேற்றியதுமாகும். இவ் வெளியேற்றம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு அவசியமானது.

இவர்களுக்கிடையிலான மோதல்களை லெனின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்னுமொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கத்திற்காக குறிப்பிடத்தக்க சூழ்நிலையில் பயன்படுத்தி கொள்ளும். இக்கருத்து தொடர்பாக சமர் வெளியீடான அரசியல் அனாதைகளின் ஜனநாயகப்படுகொலை என்ற புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு புரட்சியை தடுக்க ஒரு புரட்சிகரமான சக்திகள் வளரவிடாமல் தடுக்க, தென்னாசியாவின் ஸ்திரதன்மையை உடைக்க, குழுக்களுக்கிடையிலான மோதல்களை ஏற்படுத்தியதும், இலங்கையுடன் மோதலை ஏற்படுத்தியதும் ஏகாதிபத்திய வழிமுறைகளே. இதே வகையில் இந்தியா பங்களாதேச விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தியது. இது தொடர்பாக மேலும் விளக்கத்திற்கு மேற்குறிப்பிட்ட சமர் வெளியீட்டைப் பார்க்கவும்.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் தங்கள் நலன் பாதிக்கப்படும் போது மோதுவார்கள் என்ற விடயம் தொடர்பாகவும், முரண்பாடுகள் தொடர்பாகவும் ஆராய முற்படுவோம். ஒத்தவர்க்கத்திற்கிடையில் முரண்பாடுகள் உண்டு. அந்த வகையில் புலிகள் இஸ்ரேலுக்குமிடையில் முரண்பாடுகள் உண்டு. சுரண்டல் தொடர்பாகவிருக்கும் இம்முரண்பாடு நட்பு முரண்பாடாகவே இருக்கும். சிலவேளைகளில் இம் மோதல் ஏற்படலாம், ஏற்பட்டாலும் மீண்டும் ஜக்கியப்படுவார்கள். எப்போதும் சுரண்டலுக்கு ஆதரவாகவும் சுரண்டப்படுபவர்களுக்கு எதிராகவுமிருப்பார்கள். ஓடுக்கப்பட்டவர்கள் எழும்பொழுது ஜக்கியப்படுவார்கள். இன்று ஜப்பான், அமெரிக்கா, மேற்கு நாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகள், பகை முரண்பாடாகத் தோன்றுவதும், சிலவேளை யுத்தம் கூட நடக்கலாம். ஆனால் எப்போதும் சுரண்டல் நடத்துவதில் ஜக்கியப்படுவார்கள். சதாம் ஹ{சையின் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது, பின் அமெரிக்காவுடன் மோதியதும் சுரண்டல் தொடர்பான முரண்பாடே. அதே நேரம் அமெரிக்கா சாதாம் ஹ{சையினை அகற்றி நீண்டகாலத்தில் ஏற்படும் முஸ்ஸிம் அரசு ஆபத்தானது என கருதியதுமே சாதாம் ஹீசையினை மீண்டும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது. சாதாம் இருப்பதால் இன்று இருக்கும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே. எனவே சதாமின் வர்க்கத்தன்மையை வரையறுக்க முடியாது என கூறமுடியாது. உலகில் எழும் யுத்தங்கள் அனைத்தும் சுரண்டல் தொடர்பானவையே. புலிகளுக்கு வர்க்கத் தன்மையுண்டு. அவர்கள் சுரண்டலை நடத்துவதில் தீவிரமாகவும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் சார்ந்தும் உள்ளனர்.

உங்கள் கடிதத்தில் புலிகளை ஒரு வர்க்கத்திற்குள் வரையறுப்பது எப்படி? என கேட்டுள்ளீர்கள். அப்படியாயின் புலிகளுக்கு வர்க்கத்தன்மை என்ன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்கள். எனவே புலிகள் வர்க்கத்தன்மை என்ன என்பதே எம் முன் உள்ள கேள்வியாக இருக்க வேண்டும். அதை விடுத்து புலிகள் வர்க்கம் அற்றவர்கள் என ஏன் விவாதிக்க வேண்டும்? புலிகளின் வர்க்கத்தன்மை என்ன என்பதை அறிய தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையைப் பார்க்கவும்.

 

 

 

நாவலனை(கெலனை) சமரிலிருந்து வெளியேற்றுவதற்கான சமரின் விளக்கம்

சமர் சஞ்சிகை மக்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. சமர் தான் சொன்ன கருத்துக்களை நடைமுறையில் தனது சொந்த வாழ்கையில் நடத்தப் போராடி வருகிறது. குறிப்பாக எம் மண்ணில் இன்று காணப்படும் முரண்பாட்டின் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைகளை எதிர்ப்பதில் சமர் முன்னிலை வகிக்கின்றது.

இந்த வகையில் நாவலன் ஆகிய(கெலன்) நீர் சமர் எடுத்துக்கொண்ட வேலைமுறைக்கு மாறாக சமூத்தில் உள்ள முரண்பாட்டை தீர்த்துக்கொள்ளும் முறையில் ஒரு கொலையை செய்துள்ளீர், இக்கொலையை தொடர்ந்து சமரிலிருந்து உம்மை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதகவுள்ளது. நீர் இது தொடர்பாக சமரின் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க நீர் உட்பட்ட கூட்டத்தை கூட்டக் கோரினீர். அதுவும் நிராகரிக்கப்படுகின்றது. இவைகள் தொடர்பான விளக்கம் கீழ் உள்ளது.

உமக்கும் உமது மனைவிக்கும் இடையில் உருவான குழந்தையை நீர் உமது பொருளாதாரப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனைக்காக கொன்றுள்ளீர். குறிப்பிட்ட இப்பிரச்சனை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள பிரதான பிரச்சனை. இதை தீர்த்துக்கொள்ளும் வகையில் சமர் செயற்பட்டு வருகிறது. இக்குறிப்பிட்ட பிரச்சனை மூன்றாம் உலக நாடுகளில் 90 வீதமானோருக்கும், மேற்கத்தைய நாடுகளில் 60 வீதத்திற்க்கும் மேற்பட்டோருக்கும் உள்ள பிரச்சனை. இப்பிரச்சனைக்கு தீர்வாக குழந்தையை கொல்வதென்பது அடிப்படையில் புலிகள் தனக்கு எதிரானவர்களை கொல்வதற்கு ஒத்ததே. புலிகள் எதற்காக கொல்லுகிறார்கள் எனப் பார்ப்போமாயின், தனது வீடு வசதியான பொருளாதாரத்தை காப்பாற்றவே. இதே முடிவை நீரும் உமது வாழ்க்கையில் இன்று உள்ள நிலையைப பேண உமது குழந்தையை கொன்றுள்ளீர். உமது இன்றைய நிலையைக் காப்பாற்ற போராடுவது மட்டுமே சமர் எடுத்துக்கொண்ட முடிவு. இதற்கப்பால் கொலை செய்வதல்ல. இது தொடர்பாக விவாதத்தை நடத்திய பொழுது விதண்டாவாதமாகவும் சம்மந்தா சம்மந்தமில்லாத விடயங்களைக் கதைத்ததுடன் மட்டுமின்றி விவாதத்தின் ஊடாக ஒரு முடிவை வந்தடைய தயார் நிலையில் இருக்கவில்லை. இவ் விவாதம் தொடர்பாக உம்மை சந்தித்துக் கதைக்க வேண்டும் என தொலைபேசியில் கதைத்த பொழுது, நீர் கேட்டீர் சிவப்பு பெயின்டா அடித்தனி என்று இது எதைக்காட்டுகிறது. உமது மனைவியுடன் இரு முறை கதைக்க முயன்ற பொழுது நீர் சந்திக்க விடாமல் செய்ததுடன் நீ குழப்பிப்போடுவாய் என சொல்லி தட்டிக்கழித்தீர். நெருக்கடி முற்றிய பொழுது சந்திக்க ஏற்பாடு செய்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நீர் கூட்ட கோரிய சமர் குழுவில் உம்மை வைத்து விவாதிக்க முடியாது. போராட்டத்தில் துரோகம் செய்தோர், காட்டிக்கொடுத்தோர், கொலை செய்தோர்----- இவை போன்றோர் வந்து எம்மையும் கூட்டிவைத்து விவாதித்து பெரும்பான்மைப்படி செய்வோம் எனக் கோரமுடியாது. ஏனெனில் இந் நடவடிக்கை என்பது குறித்த சம்பவத்தை ஒரு கருத்து முரண்பாடக அங்கீகரித்து குறித்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும். உமது குழந்தையின் கொலை ஒரு கருத்து முரண்பாடு அல்ல. இது ஒரு கொலை. இக் கொலையை கருத்து முரண்பாடாகப் பார்த்தால் மட்டுமே விவாதம் என்ற வகையில் விவாதிக்க முடியும். இது நாம் எடுத்துக்கொண்ட குறித்த பணிக்கு எதிரான அப்பட்டமான கொலை. குறித்த கொலையை செய்யும் முன் நாம் உம்முடன் விவாதித்தோம். குறித்த கொலையை செய்வதா, வேண்டாமா என்று(அப்படி விவாதிப்பதே மோசமானது) சமரரைக் கூட்டி பெரும்பான்மைப்படி செய்திருக்கலாம் அல்லவா? நாம் தனித்தனியாக கதைத்தபோது செய்ய வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலிறுத்தினோம்.

உலகில் உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் சமூகத்தில் உள்ள முரண்பாட்டின் தொடர்ச்சியே. இவை அனைத்தும் வர்க்கத்தன்மைக்க்கு உட்பட்டதே. இம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வர்க்கப் போராட்டம் மட்டுமே தீர்வாகப்படலாமே ஒழிய, ஒரு கொலையை செய்வதன் ஊடாக அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதுடன் நீர் குறித்த முரண்பாட்டை வர்க்கப் போராட்டத்திற்கூடாக தீர்க்காமல் இடைப்பட்ட ஒரு தீர்வாக ஒரு கொலையை செய்து சமரசவாதியாகவும், சாதாரண மனிதனை விட மோசமான ஒரு நிலைக்கு சென்றதோடு சமரின் குறித்த பணியை நிராகரித்தமையாலும், சமரிலிருந்து உங்களை வெளியேற்றுகிறோம்.

ஆசிரியர் குழு

குறிப்பு: இது தொடர்பாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் சமர் வரவேற்கின்றது.