மாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல. அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.