12012020செ
Last updateஞா, 29 நவ 2020 7pm

உங்கள் குழந்தைகள் இணையதளங்களை பார்வையிடுகிறார்களா...?

இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது.

கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்.

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக
நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை
நல்ல படியாக வளர்க்க முடியும்.

சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு
என்ற ரீதியில் இருப்பார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே பெரும்
மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்
தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும்,
அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில்
பெருமை.

சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே
மனைவியை திட்டுவது, அடிப்பது,
சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள்.
மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர்
ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில்
தாயின் மரியாதையை குறைத்து விடும்.

மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள்
பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள்.
அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன
செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னா
நான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று
சொல்வார்கள். இது மிக மிகத் தவறு.

இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின்
எதிர் காலம் என்னவாகும்.

மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள்.
பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால்
சில சமயங்களில் பிள்ளையை காக்க
தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல்
இருந்து விடுவாள்.

”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க.
அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு
அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு”
சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட
பிள்ளையல்ல”.

சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச்
செல்லும் போது, கணவன் திட்டுவார்
என்று தெரிந்தும் ஒரு பொருள் தான்
ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார்.
பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!!

“இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ.
அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!”
என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை
நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான்
செய்வதை நீயும் சொல்லாதே” என்று
பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.

மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி
இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த
கருத்து உடையவர்களாக இருந்தால் தான்
வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக,
அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம்
கொண்ட தலைமுறையாக உருவாகும்.

உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா
என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல்
பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று
எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.

அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன்
வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல்
அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ
குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும்
சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.

 

http://parentsclub08.blogspot.com/2008/08/blog-post_28.html

வீடியோ கேம்களால் குழந்தைகளிடம் பெருகும் வன்முறை

lankasri.comவீடியோ கேம்கள்தான் இப்போது குழந்தைகளின் உலகம். இவர்களுக்கென்றே விதம் விதமாக கருத்தாக்கங்களை யோசித்து விளையாட்டுகளை தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள் குழந்தைகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தி வன்முறை நடத்தை அதிகரிக்கிறது என்றும், குறிப்பாக பிரிட்டனில் உள்ள குழந்தைகளிடத்தில் வன்முறை உணர்வு அதிகரித்திருப்பதாகவும் ஆஃப்காம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீடியோ கேம்கள் பொதுவாக பழைய பஞ்ச தந்திரக் கதைகள் போல்தான் உள்ளன. ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது.

இது 18 என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பிரிட்டன் பெற்றோர்கள் உணர்கின்றனர்.

மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம். இண்டர்நெட், எம்பி3 பிளேயர்கள், டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவை பெரும்பாலும் உள்ளன என்று கூறுகிறது இந்த ஆய்வு.

இதுபோன்று இருந்தாலும் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்றும் கூட சில பெற்றோர்கள் நினைப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1211039596&archive=&start_from=&ucat=2&

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.

lankasri.comகனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1210446266&archive=&start_from=&ucat=2&

ஆண்டு மலருக்காக - குழந்தை வளர்ப்பு கட்டுரை

முத்தமிழ் மன்ற ஆண்டுவிழா மலருக்கான என் கட்டுரையை என் மனைவிக்கும் மற்றும் அனைத்து மன்ற உறவுகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

இது கொஞ்சம் சுயபுராணமாக இருந்தாலும் முடிந்தவரை சொல்ல வேண்டிய கருத்துகளையும் சொல்லி விடுகிறேன்.

எங்கள் திருமணம் ஆனவுடன் குழந்தை என்று பேச்சு வந்தவுடன் இருவரும் ஒருமித்த கருத்தோடு பெண் குழந்தை தான் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். என் மனைவிக்கு சக்தி என்ற பெயர் மிகவும் பிடிக்கும், ஆரம்பம் முதலே அதை சொல்லிட்டு இருந்தார். என் மனைவி சக்தி வயிற்றில் உருவானதும் எல்லோரும் சொன்ன பொதுவான அறிவுரைகள் அனைத்தும் கடை பிடித்தார். பின்னர் எங்கள் இருவருக்கும் பயங்கரமான ஆர்வம், கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதை பார்க்க, அதுக்கு உதவியது http://www.indiaparenting.com என்ற வலைத்தளம். வாரம் ஒருமுறை பார்த்து ரசிப்போம்.

பின்னர் மருத்துவ சோதனையில் என்ன குழந்தை என்பதை என் மனைவிக்கு தெரிய வர, நானோ அதை இப்போ சொல்ல வேண்டாம், பிறக்கும் வரை அது ரகசியமாக இருக்கட்டும், அது ஒரு இன்ப அவஸ்தை மாதிரி அனுபவிக்க போகிறேன் என்றேன்.

சக்தி வயிற்றில் இருக்கும் காலக்கட்டத்தில் வீட்டில் எப்போவும் இனிமையான இசை கேட்டுக்கிட்டே இருக்கும், அதில் பாரதியாரின் பாடல்களும் அம்மன் பாடல்களும் முக்கியமானவை. மனைவியும் தொடர்ந்து நல்ல நல்ல புத்தகங்களாக படித்துக் கொண்டே இருப்பார், அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள், கிரண்பேடியின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாமே பயனுள்ளவை.

சக்தி பிறந்த பின்னர் எங்க அம்மாவின் அறிவுரைப்படி நாட்டு மருந்துக்கள் கொடுப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது எல்லாம் நடந்தது. சக்தி கைக்குழந்தையாக இருக்கும் போதே புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வார். ஒரு நாளும் இரவில் அழுததே கிடையாது. படுத்தவுடன் தூங்கிவிடுவார்.

சக்தி சின்ன கைக்குழந்தையாக இருக்கும் போதே அவரிடம் கண்ணை சிமிட்டி, கை விரல்களை பிடித்து, கால்களை ஆட்டி விளையாடி மகிழ்வதுண்டு. சாப்பாடு கூட அவர் விரும்பாமல் வாயில் திணிக்கவே மாட்டார். பசி எடுத்து அழுதால் தான் சாப்பாடே கிடைக்கும்.

சக்தி கைக்குழந்தையாக இருந்த காலத்தில் ஊரிலிருந்து பல நாட்டு மருந்துகள் வாங்கி வைத்திருந்தார். சக்தியின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுவார். ஆங்கில மருந்துகள் சுத்தமாக பயன்படுத்துவதே கிடையாது. அதே போல் உடம்புக்கு சரியில்லை என்றாலும் உடனே பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதில்லை. சளி என்றால் அதுக்கான நாட்டு மருந்து, காய்சல் வந்தால் மட்டுமே பாராசெப்டமால் சொட்டு மருந்து கொடுப்பார்.

சக்தி நடக்கத் தொடங்கிய காலத்தில் நிறைய குறும்புகள் செய்தாலும் கோபப்பட மாட்டார், சில சமயம் எதையாவது போட்டு உடைத்தாலும், நாசம் செய்தாலும் திட்டவோ, அடிக்கவோ மாட்டார். தினம் தினம் படங்கள் நிறைந்த புத்தகங்களை திறந்து ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி கொடுப்ப்பார். விளையாட்டு பொருட்கள், உடைகள், அலங்கார பொருட்கள் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விடுவதால் கொஞ்சமும் அடம் பிடிக்காமல் இருக்க சொல்லிக் கொடுத்து விட்டார்.

சக்தி என்ன பேசுகிறார் என்பதை மிகப் பொறுமையாக மீண்டும் மீண்டும் கேட்டு அர்த்தம் கண்டுபிடிச்சிடுவார். சாப்பாடு கொடுக்கும் போது கூட சரியான நேரத்தில் தட்டில் போட்டு சக்தி முன்னாடி வைத்து விட்டால், சக்தியே எடுத்து சாப்பிட்டு தட்டை சமையல் அறைக்கு கொண்டு போய் வைத்திட்டு வந்திடுவார்.

சக்தியை இரவில் மடியில் படுக்க வைத்து குட்டி குட்டி கதைகள், மிருகங்களின் சப்தம், பெயர்கள் போன்றவை சொல்லி கொடுப்பார். தெருவில் செல்லும் போது கண்ணில் படும் பொருட்களின் பெயரை தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கொடுப்பார். இப்படியாக சக்திக்கு 2 ½ வயது ஆகும் வரை தொடர்ந்து செய்து வருகிறார். சக்திக்கு என்னை விட அவரது அம்மாவை தான் ரொம்பவே பிடிக்கும். என் மனைவி என் மகளுக்கு அம்மா என்பதை விட நல்ல தோழியாக இருந்து வருகிறார். இன்னும் இருந்து அவரது முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்.

இப்போ கைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

1) முதலில் பெரியவர்கள் அறிவுரைகள் கேட்டு வைத்திருங்க.

2) குழந்தையின் உடல் நல விசயத்தில் எந்த நிலையிலும் பதட்டம் அடைய வேண்டாம்.

3) வீட்டில் கட்டாயம் டிஜிட்டல் தெர்மா மீட்டரும், காய்சலுக்கான மருந்தும், வெட்டு காயம் உண்டானால் தடவும் களிம்பும், பஞ்சும் மிக அவசியம்.

4) தடுப்பூசி போடும் அட்டவணையையும், குழந்தையின் உடல் நடை சம்பந்தமாக கிடைக்கும் அட்டவணைகள் படுக்கை அறையில் ஒட்டி வையுங்கள்.

5) அவசர காலத்தில் உதவ நண்பர்கள், வாகன ஓட்டிகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் போன்றோரின் தொடர்பு எண்களை அச்சிட்டு தொலைப்பேசி அருகில் ஒட்டி வையுங்கள்.

6) குழந்தைக்கு உடம்பு சூடானால், தொடர்ந்து நன்கு பிழியப்பட்ட ஈரத்துணியால் நெற்றியில் துடைக்கவும்.

7) உணவுகள் உண்ண வாயில் கட்டாயமாக திணிக்காதீர்கள். அவர்கள் பசி எடுக்கும் போது சாப்பிட பழக்குங்கள், மேலும் பெற்றோர் உண்ணும் போது அருகில் அமரச் செய்து ஆசையாக ஊட்டி விடலாம்.

8) இரவில் தூங்கும் போது உங்கள் அருகிலேயே தூங்கட்டும். விழித்து விளையாடினால் அவர்கள் இஷ்டம் போல் விட்டு விடுங்கள்.

9) வீட்டில் நாள் முழுவதும் நல்ல மெல்லிசை ஒலி
கேட்கட்டும். தொலைக்காட்சி தொடர்களின் பாடல்கள் பிடித்திருந்தால் அவை வரும் காலத்தில் உணவு ஊட்டுங்கள்.

10) தடிமனான அட்டையில் அச்சிட்ட பறவைகள், விலங்குகள், உணவுகள், கருவிகள் போன்ற அட்டவணைகள் வாங்கி அதை சொல்லி கொடுங்கள்.

11) குழந்தைகள் அழுது அடம்பிடித்து சாதிக்கும் முன்னரே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

12) குழந்தைகளை நல்ல செல்லப் பெயர்கள் சொல்லி அழைத்து வாருங்கள், தினமும் உப்புமூட்டை, ஓடி ஒளிவது போன்ற எளிய விளையாட்டுகள் விளையாடுங்கள்.

13) தினமும் காலை மாலை நேரங்களில் பூங்கா, கடற்கரை, கடைத் தெருக்கள், அங்காடிகள், குழந்தைகள் கூடும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

14) உங்கள் குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வணக்கம் சொல், பாட்டு பாடு, நடனம் ஆடு என்று எல்லாம் கட்டளையிடாதீர்கள், ஒருவேளை குழந்தைகள் செய்யாவிட்டால் அது உங்களுக்கு அவமானமாக இருக்கும்.

15) எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம், ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையில் வளரும்.

16) வெளியே செல்லும் போது குழந்தைகள் உங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் உடை உடுத்துங்கள், அதே குழந்தைகளின் உடையும் தேர்வு செய்யுங்கள், அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் இருப்பது போல் செய்யுங்கள்.

17) ஐஸ்கிரிம், சாக்லெட், சிப்ஸ் போன்றவை தினம் தினம் உணவாக கொடுக்காமல், அவர்களை பாராட்டும் போது கொடுக்கும் பரிசாக அவர்களுக்கு புரிய வையுங்கள்.

18) குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து பாராட்டுகள். கீழே விழுந்தால் அவர்களாகவே எழுந்து வரட்டும்.

19) குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே கழிப்பறைக்கு செல்ல சொல்ல கொடுங்கள், பல் தேய்ப்பது, குளிப்பது போன்றவை சுயமாக செய்ய கற்றுக் கொடுங்கள்.

20) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்றோர் சண்டையிட வேண்டாம், அது குழந்தைகளுக்கு தவறான போதனை போதிக்கும்.

(எழுத்துபிழை மற்றும் கருத்துப்பிழைகளை சகோதரிகள் தோழியும், இலங்கை பெண்ணும் களைந்து ஆண்டுமலர் தலைவர் லதா அக்காவுக்கு அனுப்பி வைக்கவும்).

--- பரஞ்சோதி