ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை
வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது......
ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து
திணிக்கப்பட்ட துப்பாக்கியும்
கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்றிப் பிளந்து
மோதிமடியவைத்த நாசக்கொடியும்
சிக்கிச் சிறகொடிந்து சிறைப்பட்ட புறாவுமாய்
ஜயகோ யாருக்காய் மடிந்தேன் எனக்கேட்கிறான்...
எத்தனைஆயிரம் மடிந்தனரென்பதே
மொத்தமாய் கல்லடுக்கி மூடிக்கிடக்கிறது
தேசத்திற்காய் மோதுங்களென கட்டளையிட்டவர்கள்
இரண்டாகி மோதியபடியே
தேர்தல் களப்பலிக்கு தயாராக்க தொடங்கிவிட்டார்கள்
இரத்தவாடை மாறாமண்ணில்
எப்படி குதூகலிக்க முடிந்ததென ஏங்கிப்போய் நிற்கிறான்...
பாரதமும் சீனமும் ஆளுக்காள் பகைகொண்ட நாடெலாம்
வேட்டைநாய்களாய் வேலியிட்டு மாத்தளனில்
சிங்கத்துவாள் பிளந்த மனிததுண்டங்கள்
சேர்த்தடுக்கி நினைவாக்கி வாக்கெடுக்க மடிந்தேனோவென
வான் நோக்கி கதறுகிறான்...........
எல்லாக் குரல்களும் அடக்கப்படுகிறது
எல்லா உயிர்களும் பலியிடப்படுகிறது
உங்கள் இனம் உங்கள் தோழன் என்றபடியே
நந்திக்கடலிலும் கழனிஆற்றிலும்
வெட்டிவீசிய வாழும் கூடியழித்த கூட்டும்
கைகோர்த்தபடியேதான் இன்னமும்
இலங்கை மக்களின் குரல்வளைகள்
பிரித்துப்போட்டு நெரிக்கப்படுவது மட்டுமே
சின்னம் இடித்துச்சொல்வது உணரப்படட்டும்...