இழந்தவரை எண்ணித்துயரொடு
அழுதழுது இருப்பவர் உயிர்போகிறது
வெடிக்கும் ஒலி
வன்னிநில அவலமாய் நெஞ்சில் இடிக்கிறது
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
விடுதலைக்காய் களமாடிய
மகளிரிடம்
தமிழ் கலாச்சார விதி களமாடுகிறது
தெருவில் தூக்கி வீசிஎறிய
யாழ்ப்பாணத்திமிர் எகிறிப்பாய்கிறது
யாரெவர் வெடிகொழுத்த முடியும்....
தலையில்
புலியை வைத்தாடிய புலம் அமைதியாய்
வட்டுக்கோட்டை
நாடு கடந்து திருடிய சொத்தோடு
அமைச்சரவை
உறுதிமொழி உடைவென அமர்க்களம்
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
போரினில் நொந்த சனம்
வீடற்று உறவற்று
வீதியில் தேடுவாரற்றுக் கிடக்கிறது
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
அழிவுக்கு அடிக்கல் இட்டவர்
இடிந்து நொருங்கும்படி
ஈழவிடுதலையை கருவில் சிதைத்தவரெண்ணி
மனம் கொதித்து தாய்மடி சிவந்து கிடக்கிறது
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
இந்தியதேசத்து
என் இனிய மக்களே
கோடிக்கணக்கில் கொட்டிய கிரிக்கட் முடிந்தது
எமக்கு கக்கூசு கட்டுவதற்கு
தெற்காசிய மாநாடு நடக்கிறது
யாரெவர் வெடிகொழுத்த முடியும்.....
-கங்கா
04/04/2011