இது என்மண்தான்
இது என்மக்கள்
இது என்தேசமென சொல்லமுடியாச்சோகம்
வெல்லமுடியாப்போரிலல்ல வீழ்ந்தழிந்தவர் நாம்
கொல்லக்கொடுத்த கொடுசதிக்குள்
மெல்ல மெல்ல தள்ளிப் படுகுளிக்குள்
செல்பட்டும் சிறைப்பட்டும்
அல்லல்படவா பேரவலம் கண்டோம்.......
சொல் என் சனமே
வில் அம்பெடுத்தகாலம் போய்
எறிகணைகள் தோளிருந்து எகிறிப்பாயும்
வெல்லுவோம் நாளையென்ற வீரம் நிமிர்ந்தது
பல்ஆயிரமாய் படைதிரட்டி
முள்ளிவாய்க்கால் பொறிக்குள் சிக்கிச்
சொல்லிய சேதியென்ன எம்சனமே........
எதிரியை இனங்காணாப் புதிரிது
தெருவினில் போட்டுக்கருக்கிய உயிரெது
குமுதினிப் படகொடு குதறிய வெறியெது
எல்லையில் வெட்டுண்டு மாண்டது யாரது
எல்லாம் எம் பலமான கரங்கள்
எல்லாம் எம் குறுவெறியும் சேர்த்தே தின்றது
பசியடங்கா மகிந்தகுடும்பத்துத் துப்பாக்கிகள்
வர்த்தகவலயத்தில்
தொழிலாளர் நெஞ்சில் பாய்கிறது
யாரிவர்கள்
எல்லாம் எம் பலமான கரங்கள்
முள்ளிவாய்க்கால் பொறிக்குள் சிக்கிச்
சொல்லிய சேதியென்ன
உலகச்சட்டங்களும் உள்நாட்டுச்சட்டங்களும்
உழைப்பவற்கு எதிராய்த்;தான்
அடக்கப்படுவோரே அடங்கிப்போ என்பதற்காய்
இனம்மொழி நாடு கடந்தும்
உழைப்பவர் ஓர் இனம்
வர்தகவலயத்தில் துப்பாக்கிக்கு இரையானது
ஆம் அதுஎம் இனம்
அஞ்சலிப்போம் ஆதரவுக்குரல் கொடுப்போம்........
கங்கா
02/06/2011