Language Selection

புதிய ஜனநாயகம் 2007
PJ_2007 _12.jpg

இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியலின் பின்னே, மியான்மரின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் சதி உள்ளது.

 

பாகிஸ்தானில் நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வரும் அமெரிக்கா, மியான்மரில் (பர்மா) நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பொருளாதாரத் தடையுத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. சோசலிச நாடு எனக் கூறிக் கொள்ளும்

 சீனாவும்; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவும், ஐ.நா. மன்றத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான அமைப்பில் மியான்மரின் இராணுவ சர்வாதிகாரிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளன.

 

இந்த நாடுகள் எடுத்துள்ள இந்த முரண்பட்ட நிலைப்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடினால், சனநாயகம், சுதந்திரம் குறித்து ஆளும் கும்பல்கள் போடும் கூச்சல்களுக்குப் பின்னே, அவர்களின் அரசியல் பொருளாதார ஆதிக்க நோக்கங்கள் மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

இந்தியாவின் வடகிழக்கே அமைந்துள்ள மியான்மரில் (பர்மா) 1962ஆம் ஆண்டு தொடங்கி, கிட்டதட்ட 45 ஆண்டுகளாக இராணுவ சர்வாதிகார ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இளம் மாணவர்கள் தலைமையில், 1988இல் இராணுவ ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்திற்கு இணையாக, போக்குவரத்து, அஞ்சல்துறை, தொலைதொடர்புத் துறை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

 

ஆயிரக்கணக்கான கலகக்காரர்களைச் சுட்டுக் கொன்று அப்போராட்டத்தை ஒடுக்கிய இராணுவ ஆட்சியாளர்கள், அப்போராட்டத்தின் பொழுது நாட்டுக்குத் திரும்பி வந்த ஆங் சான் சுயு கியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்குத் தலைமை ஏற்றிருந்த மாணவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சுயி கியுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதற்கு, அவர் "சுதந்திர' பர்மாவின் முதல் பிரதமர் யுநூவின் மகள் என்பது காரணம் இல்லை. மாறாக, அவர் மேற்குலக ஏகாதிபத்தியங்களால் போராட்டத் தலைமையாகத் திணிக்கப்பட்டார் என்பதுதான் காரணம்.

 

இந்த ஒப்பந்தத்தின்படி, மியான்மரில் தேர்தல் நடத்தவும், ஜனநாயக அரசொன்றை அமைக்கவும் இராணுவ ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டனர். இதையொட்டி நடந்த தேர்தலில், ஆங் சான் சுயு கியின் தலைமையில் அமைந்திருந்த ஜனநாயகத்திற்கான தேசிய இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது. எனினும், இராணுவத் தளபதிகள் நேரடி இராணுவ ஆட்சியை விட்டுக் கொடுக்க மறுத்ததோடு, தேர்தலையும் ரத்து செய்வதாக அறிவித்தனர். போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாணவர் தலைவர்களுள் பலர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். ஆங் சான் சுயு கி 2001ஆம் ஆண்டு தொடங்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

சட்டபூர்வ எதிர்க்கட்சி என்பதுகூட இல்லாதபடி, பாகிஸ்தானைவிட மிகக் கொடூரமான முறையில்தான் மியான்மரில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுப்படி, அந்நாட்டில் பெட்ரோல்டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டன. 1988ஆம் ஆண்டு போராட்டத்தை நடத்திய (பழைய) மாணவர்கள், இவ்வுயர்வை எதிர்த்து ஒரு புதிய போராட்டக் குழுவை அமைத்தனர்.

 

இதனிடையே, சில புத்த மத மடாலயங்களில் இராணுவச் சிப்பாய்களால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இத்தேடுதல் வேட்டைக்கு இராணுவ ஆட்சியாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரி, புத்த பிக்குகள் போராட்டத்தில் குதித்தனர். தனித்தனியான இந்த இரண்டு போராட்டங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைந்து, ஜனநாயகத்திற்கான போராட்டமாகப் பரிணமித்தது.

 

1988இல் நடந்த போராட்டம் இளம் மாணவர்கள் தலைமையில் நடந்தது என்றால், தற்போதைய போராட்டம் இளம் புத்த பிக்குகள் தலைமையில் நடந்தது. எதிர்க்கட்சிகளை விட புத்த பிக்குகள் மதரீதியில் ""சங்கா'' என்ற பெயரில் அமைப்பாகத் திரட்டப்பட்டிருப்பதால், இப்போராட்டம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.

 

இப்போராட்டம் புத்த பிக்குகள் தலைமையில் நடந்ததால், 1988ஐப் போல, இராணுவ ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிவிடமாட்டார்கள்; பேச்சு வார்த்தைக்கு இறங்கி வருவார்கள் எனப் பலரும் எதிர்பார்த்தனர். எனினும், 1988இல் நடந்ததைப் போன்ற போர்க்குணத் தன்மையும் இன்றி, வர்க்க அணி சேர்க்கையும் இன்றி மிதவாதமாகவே நடந்த இப்போராட்டத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100லிருந்து 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்; புத்த பிக்குகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றிச் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இப்போராட்டம் பற்றிய செய்தி கடுகளவுகூட வெளியுலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, வெளிநாட்டு நிருபர்கள் செய்தி சேகரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், ""செல்ஃபோன் காமிரா'', இணையதள தொழில் நுட்பத்தின் காரணமாக, போராட்டத்தின் மீது ஏவிவிடப்பட்ட ஒடுக்குமுறை உலகெங்கும் அம்பலமானது.

 

இதனையடுத்துதான், ஐ.நா. மன்றம் மியான்மர் இராணுவ சர்வாதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்புத் தூதுவரை நியமித்தது. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என ஐ.நா.வை நிர்பந்தித்தன. சீனா, ரசியா, இந்தியா மற்றும் ""ஆசியான்'' கூட்டமைப்பு நாடுகள் ""மியான்மரின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது'' எனக் கூறி பொருளாதாரத் தடையுத்தரவு போடுவதை எதிர்த்தன.

 

மிகவும் வறிய ஏழை நாடான மியான்மரில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, காடுகள், தாதுப்பொருட்கள் போன்ற மூலவளங்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மூலவளங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதற்கான போட்டிதான், இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு / எதிர்ப்பு என்ற இரு முகாம்களாக உலக நாடுகளைப் பிரித்துப் போட்டுள்ளது.

 

இன்றைய நிலையில் சீனாதான், மியான்மரின் நெருங்கிய வர்த்தக மற்றும் இராணுவக் கூட்டாளி. சீன அரசு நிறுவனங்கள், மியான்மரில் 40 நீர் மின்சாரத் திட்டங்களையும்; 17 கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித் திட்டங்களையும்; மியான்மரில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் கொண்டு செல்வதற்காக 1,500 மைல் நீள குழாய் வழித்தடத்தையும் உருவாக்கி வருகிறது. மியான்மருக்குத் தேவைப்படும் இராணுவத் தளவாடங்களை விற்பதோடு, தனது இராணுவ நோக்கங்களுக்காகவும் மியான்மர் நாட்டைப் பயன்படுத்தி வருகிறது, சீனா.

 

இந்தியா, எரிபொருள் வளங்களுக்காக மட்டுமின்றி, வடகிழக்கு இந்தியாவில் போராடி வரும் தேசிய இனப் போராளிகளை ஒடுக்குவதற்காகவும் மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களோடு கூடிக் குலாவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பர்மிய மக்கள் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபொழுது, அந்நாட்டுக்குச் சென்ற இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, மூன்று எரிபொருள் வர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுத் திரும்பினார்.

 

அமெரிக்கா, மியான்மர் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்காக 2003ஆம் ஆண்டிலேயே ""பர்மிய விடுதலை மற்றும் ஜனநாயகச் சட்டத்தை''க் கொண்டு வந்தது. எனினும், இச்சட்டம், அமெரிக்காவின் செவ்ரான், பி.ஜே. சர்வீசஸ், சுலும்பேகர், பேகர் ஹக்ஸ் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், மியான்மருடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைத் தடுக்கவில்லை.

 

மியான்மரில் மூலதனம் போடுவதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு இங்கிலாநது. 1998க்கும் 2004க்கும் இடைபட்ட ஆண்டுகளில் மட்டும் இங்கிலாந்து 120 கோடி பவுண்டு மூலதனத்தைப் போட்டுள்ளது.

 

பர்மிய மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்த பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ""மியான்மரில் செயல்படும் பிரெஞ்சு நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றும் அறிவித்தார். ஆனால், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரோ, ""அதிபரின் அறிவுரை, மியான்மரில் செயல்படும் பிரெஞ்சு எண்ணெய்க் கழகமான டோட்டலுக்குப் பொருந்தாது'' என விளக்கமளித்தார்.

 

மியான்மரில் சீனாவின் செல்வாக்கை வளரவிடக் கூடாது என்பதற்காகவே, அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும், மியான்மரின் இராணுவ ஆட்சியை எதிர்க்கின்றன. இந்தியாவிற்கோ, மியான்மரின் எரிபொருளும் வேண்டும்; அங்கிருந்து சீனாவையும் துரத்த வேண்டும் என்ற ஆசை; மியான்மரில் அமெரிக்காவின் செல்வாக்கு வளர்ந்துவிடக் கூடாது என்பதில் சீனாவும், ரசியாவும் ஒத்துப் போகின்றன.

 

மியான்மரில், இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் மறுகாலனி ஆதிக்கத்தை நடத்துவதா? இல்லை, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சியின் கீழ் மறுகாலனி ஆதிக்கத்தை நடத்துவதா? என்பதுதான் இந்நாடுகளுக்கிடையே உள்ள ""கொள்கை'' வேறுபாடு. ஜனநாயகப் போராளியாகச் சித்தரிக்கப்படும் ஆங்சான் சுயு கியோ, இந்த நயவஞ்சகத் திட்டம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். இராணுவ சர்வாதிகார ஆட்சியைப் போலவே, எதிர்த்தரப்பின் இந்த மௌனமும் அபாயகரமானது என்பதை மியான்மர் மக்கள் புரிந்து கொண்டு போராட வேண்டும்.


· ரஹீம்