Language Selection

புதிய ஜனநாயகம் 2007
PJ_2007 _12.jpg

அசாம் மாநிலத்தில் 1998 தொடங்கி 2001 வரையிலான நான்கு ஆண்டுகளில், பொதுமக்களில் பலர், அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் இரவோடு இரவாகச் சுட்டுக் கொல்லப்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. அப்பொழுது ஆட்சியில் இருந்த அசாம் கன பரிசத் அரசு இப்படுகொலைகள் பற்றி மேலோட்டமான போலீசு விசாரணையை நடத்தி, கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகளையும் கண்டுபிடிக்க மறுத்து வந்தது.

 

2001க்குப் பின் நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த காங்கிரசு அரசு, அசாமிய மக்களின் நிர்பந்தம் காரணமாக இப்படுகொலைகள் பற்றி விசாரிக்க நீதிபதி கே.என். சைக்கியா என்பவர் தலைமையில் விசாரணைக் கமிசனை அமைத்தது. இக்கமிசன் தற்பொழுது அசாம் மாநில அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், ""கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஐக்கிய அசாம் விடுதலை முன்னணியில் (ULFA உல்ஃபா) செயல்படும் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்; அல்லது அப்போராளிகளின் நெருங்கிய உறவினர்கள்; இப்படுகொலைகள் அனைத்தும் அப்பொழுது அசாம் மாநிலத்தின் முதல்வராகவும் போலீசு துறை அமைச்சராகவும் இருந்த பிரஃபுல்லா குமார் மகந்தா அளித்த உத்தரவின் பேரில்தான் நடந்துள்ளன; இப்படுகொலைகளைச் செய்வதற்கு போலீசும், சரணடைந்த போராளிகளைக் கொண்டு அசாம் போலீசு கட்டியுள்ள ""சுல்ஃபா'' என்ற கூலிப் படையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படுகொலைகள் பற்றிய உண்மை அசாமில் பணியாற்றும் இராணுவத் தலைமைக்கும் தெரியும்'' எனக் குறிப்பிட்டு, இதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது.

 

""ஐக்கிய அசாம் விடுதலை முன்னணியில் செயல்படும் போராளிகளின் வீடுகளுக்கு மர்ம மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்; அந்த மர்ம மனிதர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் போராளி அமைப்பில் இயங்கும் தங்களது உறவினரைச் சரண் அடையும்படிச் செய்ய வேண்டும் எனக் கட்டளை போடுவார்கள். தங்களது உத்தவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், அடுத்து அனுப்பப்படும் மர்மக் குழு, போராளியின் வீடு இருக்கும் பகுதியை நோட்டம் போடும். பிறகு திடீரென ஒருநாள் நள்ளிரவில் அவ்வீட்டின் கதவைத் தட்டும். ஆயுதம் தாங்கிய மர்ம மனிதர்கள், அவ்வீட்டைச் சேர்ந்த ஒருவரையோ / பலரையோ வெளியே இழுத்துப் போட்டுச் சுட்டுக் கொன்று விடுவார்கள். அல்லது, கண்காணாத பகுதிக்குக் கடத்திக் கொண்டு போய் சுட்டுக் கொன்று விட்டு, சடலத்தை வீசியெறிந்து விடுவார்கள்.''

 

இந்த இரகசியக் கொலைகள் அனைத்தும் மேலே சொன்ன முறையில்தான் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதி கே.என். சைக்கியா, ""சிவிலியன்கள் வைத்துக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போலீசாராலும் இராணுவத்தாலும் மட்டுமே பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள்தான், இப்படுகொலைகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன; சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலத்தைப் பரிசோதனை செய்தால், இந்த உண்மை அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதாலேயே, பிரேதப் பரிசோதனை நடத்துவது தவிர்க்கப்பட்டது; இப்படுகொலைகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார்கள் அனைத்தும் ஒரே வகையான மாருதி கார்களாகவோ / மாருதி வேன்களாகவோ இருந்திருப்பதோடு, அவை அனைத்தும் பதிவு எண் இன்றி இயக்கப்பட்டிருப்பதாகவும்'' சுட்டிக் காட்டியுள்ளõர்.

 

""இப்படுகொலைகள் பற்றி அசாம் போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும், மொட்டையான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டோ அல்லது விசாரணையை நீண்ட காலம் கிடப்பில் போட்டோ, எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற சாக்குபோக்கு சொல்லியோ முடிக்கப்பட்டிருப்பதையும்'' கமிசனின் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

""எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சட்ட விரோதமான படுகொலைகள் நடப்பது தவிர்க்கப்பட வேண்டுமானால், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்பார்வையிடுவதற்காக இராணுவத்தின் தலைமையில், அரசு அதிகாரிகள் போலீசு இராணுவம் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள "ஒருங்கிணைந்த அதிகார அமைப்பு' கலைக்கப்பட வேண்டும்'' என நீதிபதி சைக்கியா கமிசன் அசாம் மாநில அரசிற்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அசாம் மாநில அரசு இப்பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டாலும், 20 இரகசியப் படுகொலைகள் பற்றி மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

 

அசாமில் மட்டுமல்ல, தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராட்டம் நடைபெற்று வரும் காசுமீர், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், அதிரடிப்படையாலும், இராணுவத்தாலும் பதவி உயர்வுக்காகவும், பரிசுத் தொகைக்காகவும் அப்பாவிகள் இரகசியமாகப் படுகொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. மணிப்பூரில் 26,000 பேரும், காசுமீரில் 10,000 பேரும் "காணாமல் போய்விட்டதாக' மனித உரிமை அமைப்புகள் குற்றஞ் சுமத்தி வருகின்றன. கூலிக்குக் கொலை செய்யும் ரவுடித்தனம் போல, அரசின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சீரழிந்து போய்விட்டன. ஆனால், இச்சீரழிவு ""தேசபக்தி'' என்ற சல்லாத்துணி போர்த்தப்பட்டு போற்றப்படுவதுதான் வெட்கக் கேடானது!


· குப்பன்